ஊடக அறிக்கை
எம் ஈழத்தமிழினம் சுமந்த வலிகளின் வரலாற்றை கட்சி பேதங்களுக்கப்பால் நினைவு கூருவோம்.
ஆடிப் படுகொலை இடம்பெற்று முப்பத்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் தாக்கம் தமிழர் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த தினங்களாகவே 1983 ஆடி 23, 24, 25 ஆகிய தினங்களில் இடம்பெற்ற திட்டமிட்ட படுகொலை அமைந்துள்ளது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமாக துயராக உள்ள அந்த நாட்களின் வலிகளை எண்ணிப்பார்க்கவும் முடியாதுள்ளது.
நன்கு திட்டமிட்டு நாட்டிலுள்ள காடையர்களை ஒன்று திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிட அவர்களும் தமது பணியை விசுவாசமாகச் செய்து முடித்தனர். தலைவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயற்பாடுகள் இலங்கையில் ஆயுத மோதல்களிற்கும் பாரிய அழிவுகளிற்கும் வழிகோலியது.
அன்றைய இத்தகைய செயற்பாடுகளே பின்னர் விடுதலைப் போராட்டம் தீவிரமடைய காரணமாய் அமைந்தது. ஆடிக் கலவரத்தால் ஆடிப்போன தமிழ்ச் சமூகத்திற்கு இந்நாட்டிலுள்ள சிங்களத் தலைமைகளிடமிருந்து பாதுகாப்புத் தேவை எனக் கருதிய தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக இன்று இரு சமூகமுமே யுத்த இழப்புக்களைச் சந்தித்து நிற்கிறது.
எம் உறவுகளே.....
3000இற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரை பலிவாங்கியும் அவர்களின் உடமைகளையும் சொத்துக்களையும் அழித்து பெரும் சேதங்களை விளைவித்து சூறையாடியதுமான 1983, ஆடி 23 கலவரமானது எம் இனம் எதிர்நோக்கியதோர் கறுப்பு தினமாக உலகமெங்கும் பரந்துவாழும் எம் உறவுகளால் நினைவேந்தல்கள் செய்யப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
அந்த வகையில் எமது வரலாற்றையும் எம் வலிகளையும் மறக்காது அடுத்த சந்ததியினருக்கும் கடத்தும் வகையில் ஆடிக் கலவர தினத்தை தமிழ் இளையோராகிய நாமும் கட்சி பேதங்களை தாண்டிய தமிழ்தேசியத்தின் பால் பற்றுள்ளவர்களாய் வடகிழக்கு மாகாணங்களின் குறித்த சில மாவட்டங்களில் நினைவு கூர எண்ணியுள்ளோம்.
உண்மையில் 23ஆம் திகதி இவ்நினைவேந்தலினை செய்திருக்க வேண்டினும் அத்தருணத்தில் யாழ்குடாநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழிலும் இவ் நினைவேந்தலை உணர்வுடன் நினைவு கூர ஏற்ப்பாடு செய்துள்ளோம். இதனூடாக எம் இனம் சுமந்த வலிகளை எம் இளைய தலைமுறை அறிவதோடு தளர்ந்திடாத உரிமைக்கான உணர்வுடன் பயணித்திட உதவும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்தேசியத்தின் பால் பற்றுள்ள அனைத்து உறவுகளையும் கட்சி பேதங்களையும் தாண்டி இம் மாபெரும் நினைவேந்தலில் பங்குபற்றிடுமாறு உரிமையுடன் அழைத்து நிற்கின்றோம்.
-நன்றி-
இவ்வண்ணம்
தமிழ் இளையோர் இயக்கம்
No comments
Post a Comment