Latest News

July 05, 2017

கரும்புலிகள் நாள் – 2017
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.


“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும். 

கரும்புலிகள்


அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.

அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)

அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.

வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.

பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.

பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”

போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)

பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.
 
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.

“நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்.”
 
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.  

கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.

« PREV
NEXT »

No comments