வடமாகாண அமைச்சர்கள் நான்கு பேரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் தீவிர நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜாவுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பொருத்தமற்ற நடவடிக்கை.
இது தொடர்பில் உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதும் பொருத்தமற்ற செயல். கருத்துக் கேட்டு வாக்கெடுப்பு நடத்துவதும் பொருத்தமான நடவடிக்கை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் படி இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குறித்த அறிக்கை மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது.
இதன்படி குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ள நான்கு அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதை தொடர்ந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் ஒருவரான வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தமது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார்.
கடிதத்தை ஏற்றுக்கொள்ள மாவை மறுத்ததாகவும், குருகுலராஜா கட்டாயப்படுத்தியதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலை அடுத்தே சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிடுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்
No comments
Post a Comment