தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரித்தானியா உட்பட புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடெங்கும் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தம் உறவுகளை கண்டறியக்கோரி தாயகத்தில் முன்னெடுத்து வரும் போராட்டம் 100 நாட்களைக் கடந்தும் தீர்வின்றி தொடர்கின்றது.இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தாயக உறவுகளை நோக்கி ஈர்க்கும் முகமாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.
தமிழீழ நாட்டில் நடைபெற்ற கொடுர யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்டும் இலங்கை படையினரிடம் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சி கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் 100 நாட்களை கடந்தும் தொடர்கிறது.
இந்நிலையிலேயே தாயக உறவுகளின் போராட்டதுக்கு வலுச்சேர்த்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஓரே நேரத்தில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் பிரித்தானியா கனடா, பிரான்ஸ், ஜேர்மன் சுவிட்ஸர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது இதில் பெருமளவில் தமிழீழ மக்கள் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
No comments
Post a Comment