வித்தியா கழுத்து திருகி கொலைசெய்யப்பட்டார் – முக்கிய சூத்திரதாரி சுவிஸ்குமார்!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்விசாரணையானது, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், நடைபெற்று வருகின்றது.
இன்று, விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற சட்டவாதி ஷகிப் ஸ்மாயில், அரச சட்டத்தரணி லக்சி இ சில்வா மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் முன்னிலையாகியுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நேற்றைய தினம் பகிரங்கமாக நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை ஒன்பது சந்தேகநபர்களும் நிராகரித்துள்ளனர்.
வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட் பார் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பதில் சட்ட மா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட் பார் முறையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று, நீதிமன்றத்தில் முன்னிலையான பதில் சட்ட மா அதிபர் இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் கூறினார்.
இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியைக் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொடூரம் இழைக்கப்பட்டதாகவும் நாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த சம்பவம் இடம்பெற்றதைக் கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின் கழுத்து திருகி கொலை செய்தமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் தலையின் பின்புறத்திலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்ததை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மாணவி வித்தியாவை ஒவ்வொரு சந்தேகநபரும் பல தடவைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவியின் பெண்குறியின் உட்புறமும் வெளிப்புறமும் மிகவும் மோசமாக சிதைவடைந்திருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றபோது ஐந்தாம், ஆறாம் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியில் அதனைப் பதிவு செய்து, இரண்டு காணொளிகளையும் இணைத்து முழுமையான காணொளியொன்றைத் தயாரித்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக பதில் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment