அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த போது ஊடகவியலாளரும் பொது மக்களும் சம்பந்தரிடம் கேள்வி கேட்டதால் அங்கு சம்பந்தர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதனால் வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்வில் அவசர கண்டனத்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக அவைத்தலைவர் சீவீகே சிவஞானம் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கு மின்ஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
பொது வெளியில் அரசியல்வாதி ஒருவரை பொது மக்கள் கேள்வி கேட்பதற்கும் அதற்காக மாகாணசபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை அதே மக்கள் கேள்வி கேட்பது தவறா? சரி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் யார்மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படு்ம்? முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் உறவுகளை பலிகொடுத்து 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் சரியான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாமல் சர்வதேசத்தாலும்,இலங்கை அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்படும் அந்த மக்கள் மீது வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படும். இது சரியா? அல்லது இவ்வாறான ஒரு விடயம் மாகாணசபைகளின் சட்ட வரன்முறைகளுக்கு ஏற்புடையதா?
போன்ற கேள்விகள் எழுந்துள்ளதுடன் இந்த செயற்ப்பாடு வேடிக்கையான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. உலகத்திலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரிடம் மக்கள் கேள்வி கேட்டதற்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுதான் முதல் தடவையாக இருக்கலாம் எனவும் சமுக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment