எழுவதற்கான சத்தியத்தின் அடையாளமாக நினைவேந்தல் அமையட்டும்!!!
முடிசுமந்த தமிழினத்தின் துயர் கவிந்த வரலாறாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்கின்றது. சிங்கள இனவாத அரச இயந்திரமும் அதன் படைகளும் தமிழர் தேசம் மீது நடாத்திய பெரும் போரின் வீரியத்தை சிங்களத்தின் சன்னதத்தை சர்வதேசத்திற்கு மெய்ப்பிக்கும் நாளாக இந்நாள் அமைகின்றது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுக்கு சிகரம் வைத்தாற் போல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது. உலகெங்கும் அடையாளப்படுத்தப்பட்ட இனப்படுகொலைகளின் கூட்டு வடிவமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பரிணாமம் பெறுகின்றது. இத்தகைய நாளை தாயகமும் தாயகத் தமிழர் வாழும் தேசங்களும் ஒருங்குசேரக் கடைப்பிடிப்பது விடுதலைத் தாகத்தை வீச்சுடன் முன்னகர்த்துவதற்கான காலப்பணியாகும்.
அன்புக்குரியவர்களே இரத்தமும் சதையுமாக கையெது மெய்யெது என்று தெரியாத சதைக்குவியல்களாக கொத்துக்கொத்தாக கொண்றொழிக்கப்பட்ட சாவுடல்களின் விதை நிலங்களாக சிங்களத்தின் கோரத்தாண்டவம் எம்மண்ணில் நிகழ்ந்தது. இலட்சக்கணக்கானோரை சாய்த்து வீழ்த்திய மகிழ்ச்சியில் சிங்களம் திளைத்தது.
உயிர் விதைகளால் உருப்பெற்ற தமிழர்களின் நடைமுறை அரசை அழித்து மகிழ்ந்தது. நயவஞ்சகத்தனமான போருத்திகளால் தர்ம நெறி தளைத்தோங்க போராடிய தமிழரின் வீரப்படைகளை வீழ்த்தி ஆணவம் பெற்றது. மண்ணோடு மண்ணாக முள்ளிவாய்க்காலில் குருசேத்திரத்தை நிகழ்த்தி நிறைவேற்றியது. இத்தகைய கூட்டுப் படுகொலைகளின் நினைவாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடிக்கின்றோம்.
இந்நாள் தமிழர் தேசத்தின் தேசியத்துயர் மிகு நாள் என்பதற்கப்பால் வீழ்ந்த இடத்திலிருந்து எழுவதற்கான சத்தியத்தின் நாளாக மீண்டெழுகைக்கான எமது இனத்தின் குறியீடாக விடுதலைத் தாகம் சுமந்த மக்களுக்கு வீரியம் அளிக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். அதற்காக மண்ணில் விதையுண்டு போன அத்தனை உடன்பிறப்புக்கள் மீதும் உறுதியெடுத்துக்கொள்வது எமது இனத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
சி.சிறீதரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
No comments
Post a Comment