மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.
அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.
மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.
கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.
அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.
தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.
-ஈழம் ரஞ்சன்-
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவூட்டல்.நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில்.
மரணம் அழைத்த ரமணன்
எங்கள் மனதை நிறைத்த வதனன்
கிழக்கில் உதித்த உதயன்
இனி கிடைக்க முடியா ஒருவன்
உந்தன் நினைவுகள் வந்து
எங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து
செல்லுதே ரமணா .கொல்லுதே ரமணா.
No comments
Post a Comment