முஸ்லிம் மக்கள் தடுத்தமையால் பெரும் பதற்றம்; கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு
அம்பாறை, இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் தனியார் காணியை ஆக்கிரமித்து அங்கு பலாத்காரமாக பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகள் சிலர் முற்பட்டதனால் அங்கு நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
இதனால் அங்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பௌத்த பிக்குகள் பலாத்காரமாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. சிங்களவர் எவரும் வாழாத இப்பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பில் பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது அகற்றப்படவில்லை.
எனினும் அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் பிக்குகள் குழுவொன்றினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் இறக்காமம் பிரதேச செயலாளரிடம் விகாரை அமைப்பதற்கான காணிக்குரிய அனுமதியும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அங்கு முஸ்லிம் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான காணியில் அத்துமீறி விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்டவேளை முஸ்லிம் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக பொலிஸார் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையிலிருந்து பஸ்ஸிலும் முச்சக்கர வண்டிகளிலும் வருகைதந்த பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். இப்பகுதியில் அரச மரம் ஒன்றினை நாட்டி விகாரைக்கான அத்திபாரத்தை வெட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு முஸ்லிம்கள் திரண்டு சென்று எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் முஸ்லிம் பொதுமக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் முறுகல் நிலையும் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து அங்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.குணசேகர சம்பவ இடத்திற்கு வருகைதந்த போதும் நிலைமை சீரடையவில்லை. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை, டி.வீரசிங்க ஆகியோர் வருகைதந்து தனியார் காணிகளில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் விகாரை அமைப்பதற்கான பணியினை மேற்கொள்ள முயன்றனர்.
நிலைமை அறிந்த ஸ்தலத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெத்தசிங்க மேலதிக பொலிஸாரைக் கொண்டு முறுகல் நிலையைத் தணித்ததுடன் ஒருவார காலத்திற்குள் நீதிமன்றம் மூலம் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரும் வரை குறித்த பிரதேசத்திற்குள் எவரும் உட்பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இரு தரப்பினரும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய மாயக்கல்வி பிரதேசத்தை விட்டு வெளியேறினர். இவர்கள் வெளியேறிய போதிலும் இப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பல நூற்றுக்கணக்கான பொலிஸார் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பெளத்த பிக்குகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தனியார் காணிகளில் விகாரையை அமைக்க முற்பட்டபோது பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தக் காணி சொந்தக்காரர்களான பள்ளியான் ஜெயநுதீன், ஆதாம் லெவ்வை சமீமா ஆகியோர் தமண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் நிர்மாணப் பணிகளை நிறுத்தியிருந்தனர். ஆனாலும் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்று இரண்டாவது நாளாகவும் விகாரை அமைக்க முற்பட்டபோதே பெரும் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment