கேப்பாப்புலவு மக்கள் இராணுவத்திடமிருக்கின்ற தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராணுவத் தரப்பினருக்குமிடையே முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் படைத்தரப்பின் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதியும் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகளின் அளவு தொடர்பாகவும் அவற்றில் தற்போதைக்கு விடுவிக்கப்படக்கூடிய பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்றதன் பின்னர் கேப்பாப்புலவிலுள்ள இராணுவ முகாமுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் சகிதம் விஜயம்செய்து காணிகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர். அதுமட்டுமின்றி, காணி மீட்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களையும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் கூட்டமைப்புடனான சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமைத்துவம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளை பூரணமாக வழங்கமுடியாது என்றும் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை வேண்டுமானால் வழங்க முடியுமென்றும் தெரிவித்திருந்தது. அத்துடன் எஞ்சியுள்ள 65 குடும்பங்களின் காணிகளை வழங்க முடியாது என்றும் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கலாம் என்றும் முல்லைத்தீவு இராணுவ தலைமையக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இந்தச் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இராணுவத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்தப் பயனும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுக் காணிகளை பெறப்போவதில்லை என்று பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மக்களின் பிரதிநிதிகளாகிய நாம் இராணுவ முகாம் உள்ளே சென்று மக்களின் காணிகளை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். தென்மேற்கு பக்கமாக இருக்கும் 111 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதைப்போன்று இராணுவ முகாமுக்கு உள்ளே உள்ள வீதியும் திறக்கப்படும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் அவர்கள் பேச்சளவில் அவ்வாறு கூறினாலும் நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது. நிரந்தரக் கட்டடங்களை அமைத்து இவற்றை நீண்டகால இராணுவ முகாமாக பயன்படுத்த திட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று தோன்றுகிறது. நாங்கள் இதனை நேரடியாக சென்று பார்த்தமை எமக்கு உதவியாக அமைந்துள்ளது. அடுத்த தடவை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்த விடயங்களை முன்வைப்போம் என்றும் இராணுவ முகாமுக்கு சென்று மக்களின் காணிகளை பார்வையிட்ட பின்னர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க கேப்பாப்புலவில் ஒரு பகுதி காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ள நிலையில் அதனை நிராகரிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை. இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி முழுமையான வெற்றியைத் தராமலேயே முடிவடைந்துள்ளது என்று கூறவேண்டும்.
பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தையின்போதே கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்துக்கு அமைவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் சகிதம் நேற்று முன்தினம் கேப்பாப்புலவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது ஒரு பகுதி காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அதனை ஏற்பதற்கு மக்கள் நிராகரித்துள்ளனர். தமது முழுமையான காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென மக்கள் தெரிவித்திருக்கின்றனர். அந்தவகையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசாங்கமானது இந்த விடயத்தில் முழுமையான அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. மாறாக காணிகள் விடுவிப்பு விவகாரத்தில் இழுத்தடிக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இந்தக் காணிகள் பார்வையிடப்பட்டாலும் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்காமலேயே உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது சொந்தக் காணிகளையே மீள் வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர். மாறாக பொதுமக்கள் அரசாங்கத்தின் காணிகளை கோரவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்த பின்னர் பாரிய வேதனையுடனும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களின் காணிகளை விடுவிக்காமல் அரசாங்கம் செயற்படுவதானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் எதிர்பார்த்ததைப் போன்று காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் வேகமாகவும் அர்ப்பணிப்பாகவும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் ஆரம்பகட்டமாக ஒரு குறிப்பிட்ட தொகை காணிகள் வடக்கில் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு செயற்பாடுகள் எடுக்கப்படவில்லை. மாறாக இந்த விடயத்தில் தொடர்ந்து இழுத்தடிப்புகளே இடம்பெற்று வருகின்றன. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும்நோக்கில் ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றையும் நியமித்திருந்தார். ஆனால் அந்த செயலணி நியமிக்கப்பட்டும் கூட மக்களின் காணிகள் விடுவிப்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாடிக்கொண்டிருக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அவ்வாறு அந்த மக்களை பார்வையிட்ட ஜனாதிபதி அந்த மக்களின் அவலங்கள் தொடர்பாக பொது மேடைகளிலும் உரையாற்றியிருந்தார். இவ்வாறான நிலைமையிலும் அபகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றமையானது கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காணிகளை இழந்து பல்வேறு அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலைமை தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். குறிப்பாக கேப்பாப்புலவு உள்ளிட்ட காணிகளைக் கோரி போராட்டங்களை நடத்திவரும் மக்களின் நிலைமை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
No comments
Post a Comment