வடக்கு மாகாணத்தில் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறினால் தான் மீள் குடியேற்றம் சாத்தியப்படும். அவ்வாறு இல்லாது விட்டால் மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு வராது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் டெய்ஜி டெல், வடபகுதிக்கான விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியிலுள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர், அகதிகள் குறித்து ஆராய்வதற்கு இங்கு வருகை தந்திருந்தனர். வடக்கு மாகாணத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற மக்கள் தொடர்பாக என்னிடம் கேட்டார்கள்.
இது தொடர்பில் அவர்களிடம் நான் குறிப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறினால்தான் மீள் குடியேற்றம் சாத்தியப்படும் அவ்வாறு இல்லாது விட்டால் மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு வராது. இராணுவத்தினர் மக்களுடைய காணிகளில் தொடர்ந்தும் இருப்பதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்திக்கின்றார்கள். இதன் காரணமாக மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக முகாம்களிலும் பொது மக்கள் வீடுகளிலும் பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
வடமாகாணத்தில் இராணுவம், மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினேன். மேலும், யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்குச் சென்ற மக்கள் தற்போது அங்கிருந்து மீண்டும் வருகை தந்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு திரும்பி வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களையும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அவ்வாறு நாட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்களின் காணிகள் காணிகளுக்கு சொந்தமல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால் பலத்த சவால்களையும் பிரச்சினைகளுகளையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதற்கு உடனடித்தீர்வு காணப்படவேண்டும்.
மேலும் எமது நாட்டில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது பற்றி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவதானிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.
No comments
Post a Comment