ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்தப்போவதில்லை.
ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாகவே அதனை செய்ய முடியும். எனவே எமது விடயத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழிகளையே நாம் ஆராய்கிறோம். அதனைதான் நாங்கள் வலியுறுத்துகினறோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அதனை தவிர்த்து வெறுமனே கால அவகாசத்தை வழங்கிக்கொண்டு அரசாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்பிக்கையில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் கலந்துகொண்டுள்ள கஜேந்திர குமார் பொன்னம்பலம் நேற்று ஜெனிவா வளாகத்தில் கேசரிக்கு கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தே கொண்டுவரப்பட்டது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான ஜனாதிபதி பிரதமர் மற்றும் நல்லிணக்கத்துக்கு பொறுப்பாண முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் பிரேரணையின் பொறுப்புகூறல் சம்பந்தமான விடயங்களை நிராகரித்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி அந்த பிரேரணையின் ஊடாக அரசாங்கத்திக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் என்ற சட்டத்தை மட்டும் கொண்டுவந்துள்ளனர் ஆனால் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
அந்த சட்டமூலம் தொடர்பாகவும் விமர்சனங்களும் குறைபாடுகளும் உள்ளன. அந்த அலுவலகம் சுதந்திரமாக இயங்க முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதை நாங்கள் கூறவில்லை. மாறாக நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி ஜெனீவா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளபோவதில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
இவ்வாறான சூழலில் அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதானது வெறுமனே அரசாங்கத்துக்கு அரசியல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குவதை போன்றதாகும் அவ்வாறே அதனை நாங்கள் பார்க்கின்றோம். அரசாங்கத்திற்கு உண்மையிலேயே செய்வதற்கு விருப்பம் இருந்திருந்தால் அதிலுள்ள கஷ்டங்கள் தொடர்பில் ஒரு சில விடயங்களை கூறலாம் ஆனால் அரசாங்க தரப்பின் வெ ளிப்படையாகவே இதனை முடியாது என்று கூறுகின்றனர். எனவே இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதானது அர்த்தமற்றதாகும்.
அடுத்தாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரு விடயத்தை கூற முற்படுகின்றனர் அதாவது இந்த தீர்மானம் மட்டுமே இருக்கின்றது என்றும் இதை விட்டால் வேறு எதுவும் இல்லை என்றும் கூற முற்படுகின்றனர் ஆனால் மாற்று வழிகள் உள்ளன என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். அந்த மாற்று வழிகளுக்கு நாம் செல்ல வேண்டும் அரசாங்கம் விரும்பி எதனையும் செய்யபோவதில்லை அது இன்று நிறூபிக்கப்பட்டுள்ளது.
அப்படியாயின் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலை இந்த பிரேரணைக்கு மட்டும் முடக்கி வைப்பதானது பொறுப்பமற்றது அதனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கபோவதில்லை அது உறுதியாகிவிட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது பாதுகாப்பு சபை ஊடாகவே அதனை செய்ய முடியும் எனவே எமது விடயத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் வழிகளையே நாம் ஆராய்கிறோம். அதனைதான் நாங்கள் வலியுறுத்துகினறோம் இந்த தீர்மானம் ஜெனீவாவில் இருக்கட்டும். அதில் பிரச்சினையில்லை ஆனால் வேறு வழிகளை நாம் தேடியாக வேண்டும்.
அதனை செய்யாமல் வெறுமனே கால அவகாசத்தை வழங்கிக்கொண்டு அரசாங்கம் செய்யும் செய்யும் என போலி நம்பிக்கையில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்றார்.
No comments
Post a Comment