Latest News

March 22, 2017

சமுர்த்தியில் இப்போதும் மோசடியா...???
by admin - 0

இறுதியுத்தத்தின் பின்னரே கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் தேசிய ரீதியீல் வறுமையை ஒழிக்க உருவாக்கப்பட்ட சமுர்த்தி திட்டம் அறிமுகமானது. அறிமுகமாகிய நாள் தொடக்கம் ஊழல்களாலும் அரசியல்த்தலையீடுகளாலும் வறுமையை ஒழிக்கும் இத்திட்டம் வெற்றி அடையாத வகையில் தொடர்கின்றது. இதனால் வறுமையிலும் வறுமையில் வாழ்கின்ற மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடும் நிலை அதிகரித்து வருகின்றது. இதைப்பற்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனமும் விசனமும் வெளிவந்த வண்ணமுள்ளது. 

சமுர்த்தித்திட்டம் கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சாதாரணத்தர வகுப்புகளில்சித்தியடையாதவர்கள் கூட ஈ.பி.டி.பி கட்சியின் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் என்பதற்காகவும் சிலர் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். 
அப்படி நியமிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் தற்போதைய அரசினால் இனங்காணப்பட்டு  அரசாங்க அதிபரினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் 13 பேருடைய பணிகளும் அடுத்துவரும் சில மாதங்களுள் சர்ச்சைக்குரியதாக மாறிவிடும் என  துறைசார் அதிகாரிகள் சிலரால் கூறப்படுகின்றது. 

இதே வேளை மேற்படி ஈ.பி.டி.பி கட்சியின் தலையீட்டுடனேயே சமுர்தி உத்தியோகத்தர்களால் சமுர்தி உதவி பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னரே பிரதேசசெயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கிராம அலுவலர்கள் சம்மதமின்றி அப்போதைய சூழ்நிலையில் கையொப்பமிட்டதாகக் கூறப்படுகின்றது. அப்பட்டியலில் அவர்களது கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அமைப்பு ரீதியான தலைமை வகித்தவர்கள் பலருக்கு வழங்கப்பட்ட போதும் மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளி குடும்பங்கள், மாற்றுவலுவுடையவர்கள், பெண் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டதால் வருமானமின்றித் தவிக்கும் குடும்பங்கள், வறுமையிலும் வறுமையில் வாடும் குடும்பங்கள் எனப் பல குடும்பங்கள் பயனாளிகள் தெரிவின் போது விலத்திவிடப்பட்டிருந்தனர்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது மஹிந்த அரசினால் 'செழிப்பான இல்லம்' எனப் பெயரிட்டு  ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரால் ஒவ்வொரு சமுர்த்திப் பயனாளி குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபா வழங்கப்படுமெனவும் முதற்கட்டமாக 2500 ரூபா இரவிரவாக வழங்கப்பட்டது. தற்போது அவ்வாறு வழங்கப்பட்ட 2500 ரூபாவை சமுர்த்தி வங்கிகள் பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுகின்றன. இதனால் 1000 ரூபா, 1500 ரூபாவையே சமுர்த்தி உதவியாகப் பெறும் பயனாளிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர.; இவ்வாறு வழங்குவது ஒரு தேர்தல் மோசடியென ஏனைய கட்சிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டிய போது மக்களுக்கான உதவிகளைக் குழப்புபவர்களின் கூக்குரலுக்கு நாம் செவி சாய்க்கப் போவதில்லை என அப்போது சந்திரகுமார் எம்.பி தெரிவித்திருந்தார். 

தற்போது அரச சமுர்த்தி வங்கிக் கட்டிடங்களுக்கு பெயின்ற் பூசுவதற்காகவெனக் கூறி ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்தும் 50 ரூபா முதல் 100 ரூபா வரை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பதின்மூவாயிரம் பயனாளிகளிடம் இருந்தும் பணம் அறவிடப்பட்டுள்ளது. 

அது மாத்திரமன்றி சமுர்த்தி வங்கிகளின் நிதி மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம் வங்கிப் பணியாளர்கள் விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதற்காக பயனாளிகளுடைய பணத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிப்பு என்ற பெயரில் கட்டாயமாக எடுத்துள்ளமை தெரிய வருகின்றது. சமுர்த்தி நடைமுறைகளின் படி பயனாளிகளிடமிருந்து 100 ரூபாய் மட்டுமே கட்டாயச் சேமிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரும்பின் மேலதிக பணத்தைச் சேமிக்கலாம் என்ற அறிவுறுத்தலைப் பயன்படுத்தி மக்களுடைய பணத்தை அவர்களுக்குத் தெளிவூட்டாமலே விருப்பத்திற்கு மாறாக அறவிடுதல் மிக மோசமான செயலாகும் என பாதிக்கப்பட்டவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மக்களிடம் அறிவிடப்படும் பணம் பயனாளிகளுக்குரிய வங்கிப் புத்தகங்களில் பதியப்படாமல், வங்கிகளில் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகின்றது. அண்மையில் செல்வாநகரைச் சேர்ந்த சமுர்திப் பயனாளியான பெண்ணொருவர் தனது சமுர்தி வைப்புப் பணத்தை உத்தியோகத்தர்கள் மோசடியான முறையில் கையாடல் செய்துள்ளதாகக் தெரிவித்து கிளிநொச்சி சமுர்தி வங்கியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தமை இவற்றை அப்பலப்படுத்தியுள்ளது. மற்றும் மாதாந்தம் வழங்கப்பட வேண்டியச சமுர்த்தி உதவிப் பணத்தொகை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடைவை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது பற்றி மேல் மட்டங்களில் தொடர்பு கொள்கின்ற போது அந்த வங்கி மனேஜர் பணத்தை அடித்துவிட்டார் ஓடிற் நடைபெறுகின்றது, இந்த வங்கி மனேஜர் காசை அடித்துவிட்டார் ஒடிற் நடைபெறுகின்றது என சாட்டுக்கள் சொல்லப்படுவதாக பாதிக்கப்படுவோர் கூறிக் கவலை தெரிவிக்கின்றனர்.

வறுமையையும் அறியாமையையும் கணக்கு வைப்பு முறைகளில் மக்களுக்குள்ள மயக்கத்தினையும் பயன்படுத்தி ஏழை மக்களின் பணத்தில் ஏப்பம் விடும் சில சமுர்த்தி உத்தித்தியோகத்தர்களின் நடவடிக்கைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி என பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் அங்கலாய்க்கின்றார்கள்.
« PREV
NEXT »

No comments