Latest News

March 07, 2017

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்
by admin - 0

தமிழகத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என கோரி ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

 


கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், வாடிவாசல் மற்றும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

இந்த பிரச்சனையில் தீர்வு எட்டப்படும் வரை, இறந்த மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெறப்போவதில்லை என செய்தியாளர்களிடம் பேசிய அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று திங்களிக்கிழமையன்று 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

நடுக்குக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்ட இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள், இவர்கள் மீது துப்பாக்கியை கொண்டு சுட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் தான் இருந்ததாகவும், அவர்கள் உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போதும், அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

இந்த சமபவத்தில் தான் பிரிட்ஜோ என்கிற அந்த மீனவ இளைஞர் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக மீனவ அமைப்பினர் கூறினர்.

இந்த இலங்கை படையினரின் துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்போம் என உறுதியளித்தார்.

இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சூழலில், இலங்கை அரசின் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையினால் மட்டும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது என தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, காலவரையற்ற வேலை நிறுத்தமும் அறிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments