Latest News

January 24, 2017

வவுனியாவில் சோகம்: கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழர்கள்- வரலாற்று வேதனை
by admin - 0

வவுனியாவில் சோகம்: கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழர்கள்- வரலாற்று வேதனை
ஈழத் தமிழ் மக்களின் சோக வாழ்வுக்கு முற்றுப் புள்ளி என்பது கிடையாது என்பதை யதார்த்த வாழ்வியலில் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

பொதுவாக வாழ்க்கையில் போராட்டங்கள் வருவதுண்டு. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் தான் போராட்டமே வாழ்வாக போயிருக்கிறது.


இன்று நேற்று அல்ல. இலங்கைக்கு விஜயன் வருகை தந்ததிலிருந்து தொடங்கிற்று இந்த போராட்டம்.

இயற்கையோடும் அதன் எழில் கொஞ்சும் வாழ்வோடும் இருந்த தமிழ் மக்கள் போரோடும், ஆயுதங்களோடும் இடப்பெயர்வுகளோடும் தினவாழ்வை கழித்தனர்.


இன்றும் அதே போராட்டத்தோடும், தேடுதலோடும் இருண்ட யுகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அவர்களின் உறவினர்கள் 14 பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.


இந்தப் போராட்டம் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


தீர்வு கிடைக்கும் என்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால், தீர்வு கொடுப்பதாக காலத்தை இழுத்தடிக்கிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். அதிகாரத் தரப்பினர்.

தங்கள் நேசத்துக்குரியவர்களை, தங்கள் உறவுகளை மீண்டும் தங்களிடமே ஒப்படையுங்கள் அன்றி நீதிமன்றங்களில் நிறுத்துங்கள் என்று நீண்ட காலமாகவே அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கும் அவர்களுக்கு சரியான தீர்வை சொல்வதாக தெரியவில்லை.


இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கும் அதேவேளை போராடும் மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றுவதாக தெரியவில்லை.

மாறாக இவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் வஞ்சித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.


ஆனால் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது சூழல் தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பேஸ்புக் வாட்ஸ் அப் தகவல்களைக் கொண்டு ஒரு மிகப்பெரிய அறவழிப்போராட்டமே வெற்றியில் வந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில் ஈழத்தில் இருக்கக் கூடிய இளைஞர்கள், மாணவர்கள் இது குறித்து ஓரணியில் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளுக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும்.


இதேவேளை, தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக ஒருபலமான எதிர்ப்பை காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

இன்று நல்லாட்சி என்று வர்ணித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தை அதன் முகத்திரையை கிழித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய தேவை வந்திருக்கிறது.

இதை இன்றைய இளைஞர்கள் தான் வழிநடத்திச் செல்ல வேண்டும். தமிழக இளைஞர்கள் எவ்வாறு அறவழியில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினார்களோ அதே போல இங்கே காட்ட வேண்டும்.

இரண்டில் ஏதாவது ஒரு முடிவு சரியாக தெரியவரும். உங்களில் எத்தனை பேர் அதற்கு தயாராக இருக்கின்றீர்கள்? களத்தில் இறங்காமல் காரியத்தைச் சாதிக்க முடியாது.
« PREV
NEXT »

No comments