Latest News

January 23, 2017

போர்க்களமான தமிழகம் அரசியல் முடிந்தது அடிதடி ஆரம்பம்
by admin - 0

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் அதிரடியாக தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். 

 

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் இன்று திடீர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்களத்தில் இருந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் இடங்களில் இன்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்துபோகுமாறு போலீசார் அறவுறுத்தினர்.

ஆனால் இதனை ஏற்க போராட்டக்குழுவினர் மறுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

  • கைது - பந்தல்கள் அகற்றம்

    திண்டுக்கலில் கல்லறை தேட்டம் அருகே 7 வது நாளாக மாணவர்கள் போராட்டத்தை தொடர முயன்ற போது காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் மாணவர்கள் ஆர்பாட்டத்திற்காக போட்டிருந்த பந்தல்களையும் போலீசார் அகற்றினர்.

  • இழுத்துச்செல்லப்பட்ட மாணவர்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றும் தரதரவென இழுத்துச்சென்றும் போலீசார் வெளியேற்றினர்.

  • எதிர்த்ததால் வெளியேற்றம்

    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்தினர் மாணவர்கள் அவர்களை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

  • வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

    வேலூரில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவ, மாணவியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

  • அழுதப்படி வெளியேறி மாணவிகள்

    கரூரில் திருவள்ளுவர் மைதானத்தில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவ-மாணவிகளை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக அப்புறபடுத்தினர். போராட்டக்களத்தில் இருந்து இழுத்துச்செல்லப்பட்ட மாணவிகள் அழுதுக்கொண்டே வெளியேறினர்.

  • குண்டுக்கட்டாக வெளியேற்றம்

    காரைக்குடியில் போரட்டத்தில் இடுப்பட்ட மாணவர்களை காவல்துறை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அவர்களில் 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

  • திருச்சியில் தடியடி - மறியல்

    திருச்சியிலும் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஓடிய இளைஞர்களை விரட்டிவிரட்டி போலிசார் தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
    போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட மறுத்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • தேசிய கீதத்தை மதிக்காத போலீஸ்

    ஈரோட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவிகள் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டனர். ஈரோடு வ.உசி.மைதானத்தில் போராட்டம் நடந்தது. தேசிய கீதம் பாடியபடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் காவல்துறையினர் அதனை கண்டுகொள்ளாமல் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றினர்.

  • சேலத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை

    சேலத்தில் போலீசார் நடத்திய தடியடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரிக்கும், மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

« PREV
NEXT »

No comments