Latest News

January 01, 2017

2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு என்ற சம்பந்தரின் வாக்குறுதி காற்றில் பறந்தது
by admin - 0

 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதி பொய்த்து போயுள்ளது. இதனால் தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருகின்றது. வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் இதனை உறுதி செய்துள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான ஆட்சி முறைஇ இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆகிய இரு பிரதான வாக்குறுதிகள் உட்பட பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வடக்கு கிழக்கில் 14 ஆசனங்களை கைப்பற்றி இரண்டு போனஸ் ஆசனங்கள் உடன் 16 ஆசனங்களை 2015  ஆம் ஆண்டு அகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் பெற்றுக்கொண்டது.

தேர்தல் கால வாக்குறுதி 
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தலும் வட மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளோம். அதில் எமது அரசியல் இலக்கு உடனடித் தேவைகள் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் அபிலாஷைகள் தொடர்பில் தெளிவாக கூறுவோம்.

எங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு திறமான வெற்றியைப் பெறவேண்டும். எமது இலக்கு 20 ஆசனங்களாகும். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புபோட்டியிடாமைக்கு என்ன காரணம்? எங்கள் கவனம் முழுவதும் வடகிழக்கை நோக்கியதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதிகாரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதிகாரத்தை உண்டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும். வடக்குகிழக்குக்கு வெளியே நாம் அதிக மக்களைக் கொண்டவர்களாக காட்டினால் வடகிழக்கில் நாம் எடுக்க வேண்டிய உறுதியான நிலை பலவீனம் அடைந்து விடும். 

வடக்குக்கும் கிழக்குக்கும் திருகோணமலை ஒரு பாலமாக அமைய வேண்டும். வடக்கில் எதுவித பாதிப்பும் ஏற்பட முடியாது. இது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அது போன்றதே மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பில் 75 வீதமான மக்கள் தமிழ் மக்கள் என்பதை யாமறிவோம். இந்த இரண்டு தமிழ்ப்பிரதேசத்துக்கு இடையில் பாலமாக அமைவது திருகோணமலை. இப்பாலம் பலமாக இருக்க வேண்டும். இது பலமாக அமைய தெற்கும் வடக்கும் உதவியாக இருக்க வேண்டும். இப்பாலத்தை பலமாக வைத்திருப்பதில் தமிழ் மக்களுடைய பங்களிப்பு அதிகமாகும்.

திருகோணமலை மக்கள் 80 வீதம் வாக்களிப்பார்களாக இருந்தால் நாம் இரண்டு ஆசனங்களை இம்மாவட்டத்தில் பெறமுடியும். தமிழ் மக்களே இதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். திருகோணமலையில் பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈ.பி.டி.பி கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கொள்கையும் அவர்களின் செயற்பாடுகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகும் அதில் அமைச்சர் பதவி ஏற்பது ஒற்றையாட்சி முறையொன்றை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளன. இதுதான் அவர்களின் கொள்கை செயற்பாடு. அந்த அடிப்படையில் தான் ஜி.ஜி பொன்னம்பலம் செயற்பட்டார்.

2016 ஆம் ஆண்டுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம் முடிகின்றது!
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமது அரசியல் பயணத்தை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளோமென்று கூறுகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. எமது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறோம். தொடர்ந்தம் நீட்டிக்கொண்டுபோக நாம் விரும்பவில்லை.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தருவார்களானால் 2016ஆம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 

இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும். எனது கணிப்பின்படி 2016ஆம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார்.

தொடர்ந்தும் பல வாக்குறுதிகள் 
தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மன்னார்இ யாழ்ப்பாணம்இ வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களிலும் இந்த வருடம் 2016 ஆம் ஆணிடிற்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிச்சயமா பெற்று தரும் மக்கள் எந்த விடயத்திலும் குழப்பம் அடைய தேவையில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் கூறி வந்திருந்தார். 

இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையே எனும் தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியிருந்தது. இந்த தீர்மானத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்வாறான ஒரு சூழலில் இவ்வாறன ஒரு பிரேரணை தேவையற்றது எனவும் கூறியிருந்தார். இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பங்கேற்று வந்தது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி 
தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட அபிவிருத்தி தலைவர் என்ற பதவிகளும் வழங்கப்பட்டன. எனினும் இந்த பதவியை சிலர் ஏற்கவில்லை. 

இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பயணம் தொடர்ந்தது. எனினும் தீர்வு தொடர்பில் படிப்படியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மறந்து கொண்டே சென்றது. மக்களும் அதனை படிப்படியாக மறக்க தலைப்பட்டனர். எனினும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி தலைவரின் உறுதிமொழியை நினைவு கூறிக்கொண்டே வந்தன. இந்த நினைவு மீட்டல்கள் நேற்றும் நேற்றும் இன்றும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

அரசை காப்பாற்றிய கூட்டமைப்பு!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்இ மனித அழிவுகள் தொடர்பில் உலக நாடுகளால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் நீர்த்து போக செய்யபட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்க உலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தலையசைத்தது. 

சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உள்ளக விசாரணை என்பதற்கு தலையசைத்தது. இப்போது உள்ளக விசாரணையும் நடைபெறாமல் இலங்கையை பொறுப்புக்கூறலில் இருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

மழுப்பிய கூட்டமைப்பு 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் அடுத்த வருடம் தீர்வு என்று உறுதியளித்தது போன்று 2014 இலும் சர்வதேச உதவியுடன் தீர்வை பெற்று தருவோம் என்ற உறுதியையும் வழங்கியிருந்தார். மேலும் அடுத்த வருடம் தான் தீர்வு என்று கூறவில்லை. தீர்வுக்காக அனைவரும் ஒற்றுமையடைய வேண்டும். அடுத்த வருடம் தீர்வை பெறுவதற்கு ஒற்றுமையே அவசியம் எனவும் கூறியதாகவும் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறினார்.

அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களுடைய தீர்வு இந்த வருடத்திற்குள் கிடைக்கும் என்ற வாக்குறுதியை வழங்காமல்இ தீர்வுக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்ற தொனியில் பேசி வந்தார். இதே போன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தீர்வை பெற இது நல்ல சந்தர்ப்பம் என்ற கருத்துப்பட ரவிராஜ் நினைவு பேருரை உட்பட பல இடங்களில் பேசிவந்தார்.

தடம்மாறிய கூட்டமைப்பு!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி அளித்தது போன்று 2016 ஆம் ஆண்டிற்குள் தீர்வு என்பது பொய்த்து போக ஆரம்பிக்கஇ அரசு எம்மை ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும்இ சர்வதேசத்தை நாடுவோம் என்றெல்லாம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை.சேனாதிராஜாவால் கூறப்பட்டது. இவர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தவறுகளை மறக்கடிப்பதற்கே என்ற விமர்சன்ம் முன்வைக்கப்பட்டது.

நவம்பர்இடிசெம்பர் மாதங்களில் 2016 ஆம் ஆண்டிற்குள் தீர்வு என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையாக கைவிட்டுஇ புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தை கையில் எடுத்தது. அதனை வைத்தே தனது அரசியலையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. புதிய அரசிலமைப்பு தொடர்பிலும் மக்களுக்கு தேவையற்ற நம்பிக்கை ஊட்டல்களை வழமை போன்று செய்து வருகின்றது.

காற்றில் பறந்த வாக்குறுதி !
இன்று 2017   ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய ஆண்டு முடிவடைந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை. மாறாக 2017 ஆம் ஆண்டிலும் தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என அவர் கூறியுள்ளார். இதே போன்று தான் 2014  ஆம் ஆண்டிலும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தீர்வை பெற்று தருவோம் என கூறியிருந்தார். 
எனினும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தமிழர் சார்பு அரசியல் நிலைமை படுமோசமாக சென்றிருந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டிலும் தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் பல இடங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தில் மக்களை திசைதிருப்பி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பயணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments