Latest News

December 31, 2016

எதிரியின் "ஆம்கோர் டொங்கானும்" புலனாய்வுப் போராளிகளும்.!! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

எதிரியின் "ஆம்கோர் டொங்கானும்"

புலனாய்வுப் போராளிகளும்.!!

ஈழத்து துரோணர்.!!

சூரியக்கதிர் இராணுவநடவடிக்கை மூலம் யாழை, சிங்களம் கைப்பற்றியதும், புலிகள் தங்கள் வளங்கள் அனைத்தையும் வன்னிக்கு நகர்த்தியிருந்தனர். கொஞ்சம், கொஞ்சமாக வன்னிக்கு நகர்ந்ததும், புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் உச்ச வேகம் பெற்றது.

தலைவரின் கோபம், முல்லைத்தீவு, சத்ஜெய முறியடிப்பு, பரந்தன் ஆட்லறி மீதான தாக்குதல் என, எதிரி திணறடிக்கப்பட்ட ஆண்டுகள் இது. இந்த நேரத்தில் சகல துறையைச் சேர்ந்த போராளிகளின், தாக்குதல்களும் வேகம் பெற்றிருந்தன.

கடற்புலிகள், சிறுத்தை படையணியினர், கரும்புலிகளணி, புலனாய்வுத்துறையினரின் தாக்குதல் என, புலிகள் ஓய்வின்றி சுழன்ற நேரமது. 1996-2002வரை சிங்கள இராணுவம் நின்மதி இன்றி உறங்கிய ஆண்டுகள் என்றால் அது மிகையாகாது.

இந்த நேரத்தில் மட்டக்களப்பில் வைத்து புலிகளின் உளவுத்துறையை சேர்ந்த, 15பேர் கொண்ட அணியினரால், சிங்கள இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த, ரோந்தில் வந்த உந்துருளிப்படையணியின், சிறு குழுவொன்று தாக்குதலுக்கு உள்ளானது.

இதற்கான வேவுத்தகவல்களை ஒரு மாதம், 6 போராளிகளால் வேவெடுக்கப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் சிறப்பு என்னவென்றால் இந்த அணியினரின் கைகளில், "ஆம்கோர் டொங்கான்" (6x 40mm grenade longer) என்று புலிகளால் அழைக்கப்பட்ட, குண்டு செலுத்தி இருந்தமையே காரணம்.
புலிகளிடம் ஒற்றை கிரனைட் (203டொங்கான்) செலுத்திகள் பல நூறு இருந்தபோதும், ஆறு குண்டுகள் போட்டு செலுத்தும் டொங்கான் அதுவரை, சிங்கள இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கவில்லை. அதனால் முதல் முதலில் இந்த ஆயுதத்தை கைப்பற்றி, அந்த சாதனையைப் பதிவு செய்ய நினைத்தனர், அங்கிருந்த உளவுத்துறைப்போராளிகள்.!

அந்த நேரத்தில் அங்கிருந்த புலனாய்வுப்பொறுப்பாளரின் நெறிப்படுத்தலில், (இப்போதும் இவரது இருப்பு கேள்விக்குறியாக உள்ளமையால், அவரது பெயரை குறிப்பிட முடியாமைக்கு வருந்துகின்றேன்) எல்லாம் திட்டமிடடபடியே எந்த இழப்புகளுமின்றி 7இராணுவத்தினரும் கொல்லப்பட்டு, ஆம்கோர் டொங்கான் உட்பட நவீன ஆயுதங்களையும் கைப்பற்றப்பட்டது.

இந்த தாக்குதல் பற்றி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு தலைவரிடமிருந்து வந்த பதில் அந்தப்பொறுப்பாளரை எடுத்த ஆயுதங்களுடன் வன்னிக்கு வரும்படி கட்டளையிடப்பட்டது. அதன்படி அவர் வன்னிவந்து, தலைவரை சந்திப்பதற்கான நாளும் நேரமும் கிடைக்கப்பெற்றது.

அதன்படி தலைவரை சந்திப்பதற்கு அம்மான் மற்றும் மட்டு பொறுப்பாளரும், வேறுவிடையமாக, தலைவருடனான சந்திப்புக்கு கேணல்.சாள்ஸ் மற்றும் இன்னுமொரு பொறுப்பாளருமென ஒன்றாகவே சென்றிருந்தனர்.

தங்களுக்கான நேரத்துக்காக இவர்கள் காத்திருந்த நேரம், தலைவருடனான சந்திப்பை நிறைவு செய்தபடி வெளியில் வந்த SO அண்ணை (சூசை), ஆள் (அண்ணையை) கொஞ்சம் கொதியில இருக்கிறார் கவனம் என்று, தனக்கேயுரிய பாணியில் புன்னகைத்தபடி கூறிச் சென்றார்.

அழைப்பை ஏற்று உள் சென்றதும் அறையில் இருந்த அமைதி, எல்லோருக்கும் ஒருவித எச்சரிக்கையை மனதுக்கு கொடுத்தது. எதுவும் பேசாது ஆயுதங்களை வாங்கிப்பார்த்தபோதும், தலைவர் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாது, அம்மானிடம் கேட்டார், உனக்கு என்ன பொறுப்பு தந்திருக்கிறன்? என்கிறார் ஆயுதங்களை கீழே வைத்தபடி.!

எல்லோருக்கும் ஒரே குழப்பம், புதிய ஆயுதம் ஒன்றை கைப்பற்றியுள்ளோம், சிறப்பு படையணியை சேர்ந்த இராணுவத்தை கொன்றுள்ளோம், இவைகளுக்காக தலைவரின் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்துப்போனவர்களுக்கு அவரது கேள்வி தூக்கிவாரிப்போட்டது.!
அம்மான் மௌனமாக இருக்கும் போது, அவரே தொடர்ந்து கூறினார். "உங்களுக்கு தந்த பணியில்(புலனாய்வு) நம்பிக்கை" இழந்தமையால் தான் "இராணுவ இலக்கை" நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள் என்றார்.எவ்வளவு ஆழமான கருத்து.!

15போராளிகள் 30நாட்களாக, இந்த வேலையாகவே சுற்றவைத்து, அவர்களின் நேரத்தை வீணடித்துள்ளீர்கள் என்றார். இந்த தாக்குதலை நிகழ்த்தியதற்கு பதிலாக, ஒரு சிங்கள உளவாளியை சுட்டிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன், என்கிறார் சினத்துடன்.!
தொடர்ந்து பேசிய தலைவர், இராணுவத்தின் இலக்கை அழிப்பதற்கு, என்னிடம் தேவையான போராளிகள் இருக்கின்றார்கள். உன்னால் முடியாட்டி சொல்லு, நான் வேறையாளை வைத்து இந்த வேலையை பாக்கிறன் என்றதும் "எல்லோரும் பேயறைஞ்சது" போல நின்றனர்.!

அண்ணையின் கோபம் போராளிகளுக்கோ, அல்லது பொறுப்பாளர்களுக்கோ ஒன்றும் புதிதில்லை.!

அநேகமா எல்லோரும் பிழை விட்டால் கிளிவாங்குவது வழமை தான்.!
ஆனால், இன்று கிளி விளும் என்று தெரிந்துபோய் வாங்கினால், அது பெரிதாகத் தெரியாது. 

போகும் போது அதற்கான ஆயத்தத்துடன் போய், கிளியை வாங்கிவருவம்.!
இது அப்படி இல்லாது, எதிர் பார்க்காத கிளியென்பதால், அந்த அறையே நிசத்தமாக இருந்தது.!
தொடர்ந்து கூறினார் நீங்கள் பொறுப்பாளர்களே, "உங்கள் பணியை எதுவென்று உணராது" போனால், உங்களால், போராளிகளை எப்படி சரியான, இலக்கை நோக்கி வழிநடத்த முடியும் என்கிறார்?
அப்போது தான் எல்லோருக்கும் தங்களின் தவறு உறைத்தது. இனிமேல் இராணுவத்தை சுட்டம், துவக்கு எடுத்தம் எண்டு இஞ்சால வாராதைங்கோ, என்று கூறியபின், மட்டு பொறுப்பாளரிடமிருந்து அந்தப்பொறுப்பை வாங்கி, அவரிடத்துக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டார். அந்தப்பொறுப்பாளரை அதன் பின் மட்டக்களப்புக்கு செல்ல, தலைவர் சம்மதிக்கவில்லை.!
இது தான் எங்கள் தலைவனின் ஆளுமை.!

அவரது வெற்றியின் ரகசியமும் இது தான். எங்கள் எல்லோருக்கும் சரியென்று தோன்றுவது, அவருக்கு சிலவேளை பிழையென்று தோன்றும். அதற்கு அவர்கூறும் காரணங்கள், எம்மை வாயடைக்க செய்துவிடும்.!
கண்டிக்கும் நேரத்தில் பாரபட்சம் இல்லாது, எல்லோரும் கண்டிக்கப் படுவார்கள். பாராட்டும் போது மனம் நிறைந்து பாராட்டுவார். ஆனால், எதிரி மீதான தாக்குதல் விடையத்தில், அவரை யாராலும் திருப்திப் படுத்த முடியாது.!
10 இராணுவத்தை கொன்றுவிட்டு செல்பவர்களிடம் அவர் கூறும் வார்த்தை, 20பேரை கொன்றுவிட்டு வா பாப்பம் என்பார். 
20பேரை கொன்றுவிட்டு சென்றால், 50பேரை கொன்றுவிட்டு வா என்பார். 
இந்த எண்னிக்கை மாறுபடுமே தவிர, அவரது கோரிக்கை கடைசிவரை மாறவில்லை. 
போராளிகளும், அவர்கேட்கும் தொகையில் எதிரியின் இறப்பை கூட்டுவதற்கு பின் நின்றதுமில்லை.!
ஏனெனில், போராளிகள் அந்தளவு தூரம் தலைவரை நேசித்தனர். அவருக்காக எதையும் செய்ய தயாராகவே இருந்தனர்.!!
நினைவுகளுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments