Latest News

December 01, 2016

தங்க நகை வைத்துக்கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதா? தீயாய் பரவிய தகவல்.. உண்மை என்ன?
by admin - 0

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து தங்கத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என இன்று மாலை தீயாய் பரவிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. 

அதில் இருந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதனால், பணம் குறித்து இன்று என்ன புதிய அறிவிப்பு வருமோ என்று மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்நிலையில், கருப்புப் பணத்தை முறைப்படி கணக்கு காட்டி வங்கியில் செலுத்துவோருக்கு 50 சதவீதம் வரியும், கணக்கு காட்டாமல் இருக்கும் தொகை கண்டுபிடிக்கப்பட்டால் 85 சதவீதம் வரியும் விதிக்கப்படும் வகையில் வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவில் தங்கத்திற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கம் வைத்துக் கொள்ள கெடுபிடி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தங்கம் வைத்துக் கொள்வதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. டிவி சேனல்கள் பலவும் பிரேக்கிங் செய்தியாக காண்பித்தன. அதன்படி, திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் தங்கமும், திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆண்கள் வெறும் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மறுக்கும் மத்திய அரசு வீடுகளில் தங்க நகை வைத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது என்ற தகவல் பரவிய உடன் இதனை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், முறையாக வருமான வரி செலுத்தியவர்கள் எவ்வளவு தங்கத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே வருமானவரிச் சட்டத்தில் எவ்வளவு நகை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறதோ அதில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் அது விளக்கம் அளித்துள்ளது.

கணக்கில் காட்டாத தங்கத்திற்கு 60% வரி புதிய வருமான வரி சட்டத் திருத்த மசோதாவில் நகை குறித்து ஒரே ஒரு விஷயம்தான் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா, வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட தங்கத்திற்கு முன்பெல்லாம் 30 சதவீதம் வரிதான் விதிக்க சட்டத்தில் வழி இருந்தது. இப்போது அது 60 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. இவ்வளவுதான் வித்தியாசம். இது பண முதலைகளுக்கான தண்டனைதான். மற்றபடி மக்கள் வழக்கம்போல எவ்வளவு நகைகளையும் வருமானத்திற்கு உட்பட்டு அணிந்துகொள்ளலாம், வைத்துக்கொள்ளலாம்.

ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதிய சட்டம் புதிய விதிகளை கொண்டுள்ள வருமான வரி சட்டத் திருத்த மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. என்றாலும், ராஜ்ய சபாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ராஜ்ய சபாவில் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றாலும், பணம் தொடர்பான மசோதா என்ற வகையில் 14 நாட்களுக்குள் தானாகவே சட்டம் அமலுக்கு வந்து விடும். ஆக, வருமான வரி குறித்த புதிய விதிகள் அப்போதில் இருந்து அமலுக்கு வந்துவிடும்




« PREV
NEXT »

No comments