Latest News

December 06, 2016

துரோகிகள்" புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ... அதிமுகவினர் கடும் விரக்தி!
by admin - 0

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்தான் அவரது உடலை சுற்றி நிற்கிறார்கள்...இது எவ்வளவு பெரிய அநியாயம் என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து சசிகலா, போயஸ் கார்டனை விட்டு வெளியேற நேரிட்டது. பின்னர் சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். அப்போது சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும் கூட, தமது குடும்பத்தினரின் துரோகங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

 

ஜெயலலிதா உடல்நலத்துடன் இருந்தவரை சசிகலாவை தவிர அவர் சுட்டிக்காட்டிய அதிமுகவின் துரோகிகள் எவரையும் கட்சிக்குள் தலைகாட்ட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா சேர்க்கப்பட்டது முதல் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்ற அத்தனை பேரும் மீண்டும் அதிமுக விவகாரங்களில் கோலோச்ச தொடங்கினர்.

அதிமுகவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் ஜெயலலிதா சுட்டிக்காட்டிய அந்த துரோகிகள்தான் கைவசம் எடுத்துக் கொண்டனர். ஜெயலலிதா காலமாக போயஸ் கார்டனில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

அத்துடன் அமைச்சர்களுக்கு அவர்கள் கட்டளை இடுவதும் அதை பவ்யமாக ஏற்று அவர்கள் செயல்படுவதும் சகிக்க முடியவில்லையே எனவும் புலம்புகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

« PREV
NEXT »

No comments