Latest News

November 26, 2016

வெடி சுமந்த வேங்கையின் காதல்.! ஈழத்து துரோணர்.! Freedom fighters love
by admin - 0

வெடி சுமந்த வேங்கையின் காதல்.!
ஈழத்து துரோணர்.!!
 
போராளி என்பவன் யார்.! 
முகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம்.! 

இன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க,  அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி.! 

களத்தில் களமாடும் போது, உறுதியில் "உருக்கை" போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள்.! 

இந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம்.! 

போராளி என்பதனால், இவர்கள் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இவர்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதர்களே.! 

எமது மக்களுக்கு எமது போராளிகளின் வீர வரலாறுகளும், அவர்களது சாகசங்கள் நிறைந்த, சாதனைகள் மட்டுமே தெரியும். அதையும் தாண்டி அவர்களின் மறுபக்க வாழ்க்கையை யாரும் அறிவதில்லை.
 
அந்த வீரர்களின் மறுபக்கம் மிக அழகானது.! 

பாறை மனம் கொண்ட அந்த வீரர்களின் இதயத்தில், காதல் என்ற அருவி பாய்வது எமக்கு கண்ணுக்கு தெரிவதில்லை.! 

அவர்களின் காதலும் தெளிந்த நீரோடை போன்றது.!

இந்த உணர்வுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. அதற்கு  தலைவரின் காதலே எமக்கு உதாரணம்.!  

ஆம், இது ஒரு கரும்புலி வீரனின் காதல் கதை.!

இந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டு அகன்றதும் புலிகளமைப்பு கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்தது. புதிய துறைகள் தலைவரால் உருவாக்கப்பட்டது. 

செயற்பாடு குறைந்திருந்த பல கட்டமைப்புகளுக்கு, ஆளுமையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் வேகம் பெற்றிருந்தது. 

விசு அண்ணையின் வீரச்சாவின் பின்னர், மாத்தையா அவர்களின் மேற்பார்வையில், சலீம் என்பவரது பொறுப்பில், சில போராளிகளுடன் இயங்கிய புலிகளின் உளவுத்துறை, கிடப்பில் போடப்பட்டது போல செயற்பாடு இல்லாது இருந்தது. 

அவரிடமிருந்து புலனாய்வுத்துறையை அம்மான் பொறுப்பெடுத்ததும், புதிய போராளிகளை உள்வாங்கி, முழு வேகம் பெற்றது புலிகளின் உளவுத்துறை.!

அப்படியான நேரத்தில் தான் இந்த போராளியும், உளவு நடவடிக்கை நிமித்தம், சிங்களத் தலைநகர் நோக்கி வேவுப்போராளியாக அனுப்பப்பட்டான். 

அங்கு ஒரு கேளிக்கை விடுதியில் தனது பணியை ஆரம்பித்து, அன்றைய சிங்களதின் உச்சப்பதவியில் இருந்தவரை சந்தித்து, அவருடன் உணவுண்டு வரும் அளவுக்கு, சிங்கள அரசின் மேல் மட்டங்கள், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வரை தொடர்பை உண்டாக்கியிருந்தான்.

புலிகளின் புலனாய்வு ஊடுருவலில், மிகப்பெரிய ஊடுருவல் இது என்றால் அது மிகையாகாது.! 

இவன் மிகப்பெரும் சாணக்கியன். அவனது பேச்சு எதிராளியை கவரும் வசீகரம் கொண்டது.! 

இந்த நேரத்தில் இந்த போராளிக்கு ஒரு அழகான காதலி இருந்தால்.!  

இன்றைய காதல் ஒரு SMS அல்லது இணையம் ஊடாக ஏதோ ஒரு விதத்தில், தூங்கும் நேரத்தை தவிர, மற்றைய நேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை பார்த்தபடியே உரையாட முடியும். 

அன்றைய காலத்தில் இது சாத்தியம் இல்லை. 

அன்றைய நேரத்தில் அவளுடன் இவனுக்கு இருந்த ஒரு தொடர்பு கடிதப்போக்குவரத்து மட்டுமே. 

தனது கடமையை எந்த பிசிறும் இல்லாத செய்த போதும், அவனுக்கான இரண்டாவது இரகசியமாக, அவனது காதல் இருந்தது. 

அந்த நேரத்தில் யாழில் இருந்து கடிதம் அனுப்பினால் வாரங்கள் கடந்து தான் வந்து சேரும். சில வேளை இரண்டு மூன்று கடிதங்கள் ஒன்றாக வரும். 

அந்த போராளி இருந்த வீட்டுக்கு கடிதங்கள் வருவதில்லை. அந்தக் கடிதங்களை தனக்குத் தெரிந்த ஒருவரது விலாசத்தை கொடுத்து, முன் எச்சரிக்கையாக அங்கு கடிதங்களை வரவழைத்தான்.  

தனக்கான நேரத்தில், ஒரு சில, மணித்துளிகளை இந்த கடிதங்களை பெறுவதற்காக சென்று வருவான். கடிதம் வராத நேரங்களில் அவனது தவிப்பை பாக்கும் போது, வேடிக்கையாகவே இருக்கும். 

இவனுக்கு கடிதங்கள் வராதபோது இவனது  தவிப்பை கண்டு, கடிதம் வரும், அந்த வீட்டுக்கார அக்கா சொல்லுவார் "இனி நான் தான் உனக்கு கடிதம் போடோனும் என்பார். அதற்கு, வீட்டுக்கார அண்ணையின் பதில் உடனே வரும் எனக்கு பிரச்சனை இல்லை" என்று" (அவர்களுக்கு அவன் போராளி என்பது தெரியாது)

அவர்களது கேலியை ரசித்தபடி வீடு திரும்புவான் அந்த போராளி. 

உண்மையின் அன்றைய "நேரத்து காதால் அலாதியானது" என்றே எனக்கு தோன்றுகின்றது. 
ஒரு எதிர்பார்ப்புடன் இனம் புரியாத உணர்வுடன் கூடிய, காத்திருப்பு நிறைந்தது அன்றைய காதல். 

இப்படி காலம் கடந்து. தனது கடமையிலும், தனது காதலிலும் உறுதியாகவே பயணப்பட்டான் அந்த போராளி.! 

இப்படியான நேரத்தில் தான், அவன் நெருங்கி இருந்த பெரும் இலக்கை, அழிக்கவேண்டிய தேவை தலைமைக்கு உருவானது.!

மிகப்பெரும் மூன்று பாதுகாப்பு வலையப்பாதுகாப்புடன் இருந்த அந்த இலக்கை, ஒரு கரும்புலிப்போராளியை  கொண்டு அழிக்கக்கூடிய நேர அவகாசம் அன்று தலைமைக்கு இல்லை. அப்படி அனுப்பினாலும் மூன்று வலைய பாதுகாப்பை கடந்து இலக்கை அந்த போராளியால் நெருங்குவதென்பது முடியாத காரியம். 

தமிழர் தரப்புக்கு இக்கட்டான நேரமது. இலக்கை அழித்தே ஆகவேண்டும். 
ஏனெனில், அவர்கள் எங்கள் தலைவரை இலக்கு வைத்து, அதை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். 

ஆக, இலக்கை நெருங்கும் நிலையில் இருந்தது இந்த போராளி மட்டுமே. இவனிடம் நடைமுறைச்சிக்கல் கூறப்பட்டது. அவனிடம் இலக்கை அழிக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவன் ஒரு கணம் கூட யோசிக்காது, தான் இந்த தாக்குதலை செய்வதாக உறுதியுடன் கூறினான். 

சிங்களத்த தலைநகரின் கேளிக்கை, ஆடம்பரம், மது, மாது என்ற வட்டத்துக்குள்ளேயே அந்த போராளி சுழன்றவன். அந்த சுக போகங்கள் அவனை ஒரு போதும் பாதித்ததில்லை. அதற்கு அந்த தமிழிச்சியும் ஒரு காரணம் என்பதே எனதெண்ணம்.  

அவன் நினைத்திருந்தால் இயக்கத்தின் பணத்தை கொண்டே, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று ஆடம்பரவாழ்க்கை, வாழ்ந்திருக்க முடியும். (அப்படி தப்பி ஓடி வந்த பலரில் சிலர் இயக்கத்திடம் மன்னிப்பு கேட்டு "இன்று தியாகி" விட்டனர், மிகுதியான சிலர் கோட்டு சூட்டு போட்டு முன்னாள் போராளிகளாக வலம் வருகின்றார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்) 

ஆனால், அவன் தலைவரையும்,எம் தேசத்தையும், எம் மக்களையும் தனது உயிரிலும் மேலாக நேசித்தான்.!

இவர்களுக்காக தான் நேசித்த,உருகி உருகிக் காதலித்த, காதலிக்கு தனது முடிவையும், அதன் வரலாற்று தேவையும் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதி தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, அந்த பெரும் இலக்கை வெடி குண்டு சுமந்து அன்று அழித்திருந்தான். 

அவனது கடிதம் கண்ட அந்த கன்னிகை அவனை நினைத்து நிச்சையம் பெருமை கொண்டிருப்பாள். 

அவளினுள் பூட்டி வைத்து பாதுகாத்த, அந்த காதால் வெளித்தெரியாமலே போன போதும், இன்றும் அவள் மனதில் அவன் வாழ்வான் என்பது எனதென்னம்.! 

இவர்கள் தான் எங்கள் மாவீரர்கள். நாம் என்ன தவம் செய்தோம் இந்த இனத்தில் பிறப்பதற்கு.! 

மக்களுக்காகவே தங்களின் இளமைக்கால இன்பங்கள் அனைத்தையும் உதறிய உத்தமர்கள்.!

எம் தேசத்தின் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் இவர்கள்.!

எமது போராட்டத்தில் பல விதமான தியாகங்கள் வரலாறாக இருந்த போதும், இதுவும் எம் மக்கள் அறியவேண்டிய "பெரும் தியாகம்" என்பதே எனது கணிப்பு.!

என்னைப் பொறுத்தவரை இவனின் தியாகம் ஈடில்லாதது, பல இரவுகள் உறங்கவிடாது சுழற்றிப்போடும் நினைவுகளைக் கொண்டது. 

ஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும், ஒரு பசுமையான நினைவுகள் இழையோடி இருக்கும் என்பதே நிதர்சனம். ! 
நினைவுகளுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments