Latest News

October 21, 2016

பலியான யாழ். பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்?
by admin - 0

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற அசாதாரண சம்பவம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

 

இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மாணவர்களை பொலிஸார் இடைவழியில் திடீரென மறித்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

பொலிஸார் வழி மறித்த போது நிறுத்தாமல் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது.?

மூன்றுக்கும் மேற்பட்ட வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது, காயங்களுடன் காணப்பட்ட மாணவர்களை பொலிசார் உடனடியாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அயலவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் பெரிய சேதங்கள் எதுவுமின்றி காணப்படுகிறது.

குறித்த பகுதியில் பொலிஸாரின் பல்வேறு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்தவர்களாவார்.

குறித்த இருவரில் ஒருவர் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகவியல் துறையிலும், மற்றையவர் அரசறிவியல் துறையிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.

கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு அதிவேகமாக வந்துகொண்டிருந்த வேளையில் தான் மேற்படி துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை யாழ். பிரதான நீதிமன்ற எஸ். சதீஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் மறிக்காமல் சென்றிருந்தால் அவர்களை துரத்திப் பிடித்திருக்கலாம். மாணவர்களது மோட்டார் சைக்கிளோ வெறும் 125 cc க்குள் தான் இருந்திருக்கும். ஆனால், பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் 800 cc க்கு கூடுதலாக இருந்திருக்கும். விரட்டி பிடித்திருக்கலாம். துப்பாக்கிச் சூடு நடாத்த அனுமதி இருந்தாலும் அதனை தவிர்த்திருக்கலாம்.

« PREV
NEXT »

No comments