Latest News

September 24, 2016

வடக்கு முதல்வரின் எழுக தமிழ் முழுமையான உரை
by admin - 0

எம் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் பலத்த சந்தேகங்களிலும் ஐயப்பாடுகளிலும் மனச் சஞ்சலத்திலும் இருக்கின்றார்கள். அவர்களின் அந்த மனோநிலையை, மனக்கிலேசங்களை, ஊரறிய, நாடறிய, உலகறிய உரத்துக் கூறவே இங்கு கூடியுள்ளோம்.
 
 

எமது கரிசனைகள் என்ன?
பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது

முதலாவது கரிசனை - சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா? போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றது. புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகின்றது.

காணாமல் போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமற் போனவர் காரியாலயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்டமா? போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னரே இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச நெருக்குதல்களின் காரணமாக! இன்னமும் எவ்வளவு காலஞ் சென்றால் படையினரிடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள் கிடைக்கப் பெறலாம்?

போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். இதற்கான விளக்கங்களை யார் தருவார்கள்? அவற்றைக் கோரியே இந்தப் பேரணி.

நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இது எதற்காக? எமது தனித்துவம் பேணப்படும், எமது உரித்துக்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறி வரும் இவ்வேளையில் இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக இலங்கை பூராகவும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்கள் அடித்து துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போக பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பிரதேசங்களில் அவர்கள் தஞ்சம் புக, இங்கும் வந்து எமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் இக் குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா என்று கேட்டு வைக்கவே இந்தப் பேரணி! இது யாருக்கும் எதிரானதல்ல? ஆனால் எமது வடமாகாணத்தில் நடைபெறும் பல நடவடிக்கைகள் பற்றி நாம் அறிய விரும்புகின்றோம்.

அவற்றிற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். உதாரணத்திற்கு ஏன் சிங்கள முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களுடனான ஒரு செயலணி வேண்டியிருக்கின்றது? மற்றைய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு செயலணி வேண்டாமா? இந்தியாவில் இருந்து வரும் எமது இடம் பெயர்ந்தோர் சம்பந்தமாக போதிய கவனம் செலுத்தியுள்ளோமா?

கேரதீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசாங்கம் எமது வடமாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதன் சூட்சுமம் என்ன?

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் இராணுவம் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்களை அனுபவிப்பதன் அர்த்தம் என்ன? உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தனியார் வாசஸ்தலங்கள் தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நியாயம் என்ன? ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும் பல ஏக்கர் மக்கள் காணிகளை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் இராணுவத்தினரின் நடவடிக்கை எம் மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது 2015ம் ஆண்டின் செப்ரெம்பர் மாத சர்வதேச எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர், வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச போர்க்குற்ற சட்டத்தை உள்ளேற்றல் போன்றவை இல்லாது கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமது நல்லாட்சி அரசாங்கம் நாடுவது எமக்குச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமற் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவை மட்டுமல்ல. எமது வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு கிழக்கு கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமன்றி எமது மீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாகப் படையினர் உதவியுடன் கைப்பற்றுகின்றார்கள், வாடிகளை அமைக்கின்றார்கள். சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள்.

கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந் நடவடிக்கைகளால் எமது வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவற்றை யாரிடம் சொல்வது? சொன்னாலும் தீர்வுகள் கிடைக்குமா?

இவற்றை உலகறியச் செய்யத்தான்  இந்தப் பேரணி. வடக்கு கிழக்கில் 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் போதைப் பொருட் பாவனை இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள்
 

கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் படையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையினப் பொலிசாரை எமது பொலிஸ் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான கிலோ கஞ்சா வட பகுதியை வந்தடைகின்றது. மேலும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் வந்தடைகின்றன. அதிகப்படியான மதுசாரமும் விற்பனையாகின்றன. இது எப்படி? சட்டமும் ஒழுங்கும் எங்களின் கைவசம் இல்லை. அப்படியானால் இவை எவ்வாறு சாத்தியமாகியுள்ளன அல்லது இவை ஏன் நடக்கின்றன? இவை எமது இளஞ் சந்ததியினரைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? இதனை எமது பெரும்பான்மையின சகோதர சகோதரிகளிடமும் உலக நாட்டு மக்களிடமும் கேட்கவே இந்தப் பேரணி. தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நடை பயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகின்றோம். மக்கட் பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம்.

அடுத்து அரசியல் யாப்புக்கு வருவோம். தொடர்ந்து தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் அதிகாரங்களை உள்ள10ர்வாசிகளுக்கு வழங்கப் போகின்றார்கள் என்று தெரிந்ததும் 1919ம் ஆண்டில் இருந்தே அதிகாரத்தைத் தம் கைவசம் வைத்திருக்கப் பெரும்பான்மையின மக்கட் தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். அதிகாரம் முழுமையாக பெரும்பான்மையின மக்களிடம் சென்றுவிட்டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது 'இவ்வளவு தருகின்றோம்', 'இன்னும் கொஞ்சம் தருகின்றோம்', 'சரி! இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவும் கேட்கப்படாது' என்றெல்லாம் பேரம் பேசி வருகின்றார்கள்.

இது இவ்வளவுக்கும் தமிழ் பேசும் மக்கள் காலாதி காலமாக 2000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையின மக்களாக வசித்து வருகின்றார்கள். இங்கு சிங்கள மக்கள் எப்பொழுதும் வசிக்கவில்லை. சிங்கள மொழி நடைமுறைக்கு வந்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில். தமிழ் மக்கள் பௌத்தர்களாக சில நூறு வருட காலம் மாறியிருந்தமையே பௌத்த மத எச்சங்கள் வடக்குக் கிழக்கில் காணப்படுவதற்கு காரணம். அப்படியிருந்தும் எம்மை வந்தேறு குடிகள் என்றும் வடக்குக் கிழக்கில் சிங்கள மக்கள் முன்னர் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் விரட்டப்பட்டு விட்டனர் என்றும் புதிய
6
சரித்திரத்தை வேண்டுமென்றே எழுதத் தொடங்கிவிட்டனர். தாம் எழுதிய புதிய சரித்திரத்தின் அடிப்படையிலேயே இவ்வளவு தருகின்றோம் இன்னும் கொஞ்சம் தருகின்றோம் என்று பேரம் பேசத் துணிந்துள்ளார்கள்.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் தாயகம். அவர்களுக்குச் சுயாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம். இந்த நாடு சமாதானத்துடனும் நல்லுறவுடனும் அரசியல், சமூக, பொருளாதார விடிவை நோக்கிப் பயணிக்க விரும்பினால் சமஷ;டி அரசியல் முறையொன்றே அதற்குத் தீர்வாக அமையலாம். இதில் கட்சிகளும் மக்களும் உறுதியாக இருக்கின்றனர். ஒற்றையாட்சியானது அதிகாரங்களைத் தொடர்ந்து பெரும்பான்மையின மக்களின் கைகளிலேயே தேக்கி வைக்கச் செய்யும். தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் சுமூகமாக சம அந்தஸ்துடன் நல்லுறவுடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து சுயாட்சி வழங்குவதே ஒரே வழி. அதனால்த்தான் நாங்கள் சமஷ;டி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம். அதற்கேற்றவாறு அரசியல் யாப்பு பற்றிய நகர்வுகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஏனோ தானோ என்று மூடி மொழுகி ஒரு அரசியல் தீர்வைத் தரலாம் என்று தெற்கு நினைப்பதாக எமக்குத் தோன்றுகின்றது. எமக்குத் தரவேண்டிய உரித்துக்கள் எமது குழுமம் ரீதியான உரித்துக்களே அன்றி தனிப்பட்டவர்களுக்கு அளிக்கும் உரித்துக்கள் அல்ல.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று நாம் கேட்பதை ஏதோ கேட்கக் கூடாததை நாம் கேட்பதாகத் தெற்கில் நோக்கப்பட்டு வருகின்றது. பல தமிழ்ப் பேசும் மக்களால் கூட அவ்வாறே நோக்கப்படுகின்றது.

நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் சம அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் ஆதிக்கத்தை நாடு பூராகவுந் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற சரித்திர ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத கருத்தை அதன் பின் வெளிவிட்டனர். ஆகவே சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் பௌத்த சிங்களவர் மிகக் குறைவாக வாழும் பிரதேசங்களில் கட்டாயமாகத் திணிக்கக்கூடும் என்ற பயம் எமக்கு இருக்கின்றது. அந்த வழியில்த்தான் அண்மைக் கால நடவடிக்கைகள் தெற்கிலிருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு

நடைமுறைக்கு வந்த பின்னரே கூர்மம் பெற்று வருகின்றது. பௌத்த கோயில்கள் கட்டுவது பற்றி புத்த சிலைகள் அமைப்பது பற்றி ஏற்கனவே கூறி விட்டேன்.

தமிழ்ப் பேசும் எமது பிரதேசங்களில் இன்னமும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்களைத் தருவதாகச் சென்ற கிழமை கூட எமக்கு அறிவிக்கப்பட்டது. எமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களில் எமது பாரம்பரிய மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை. எமது காணிகள் பறிபோகின்றன. இராணுவம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை இங்கு குடியிருக்கச் சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். எனவே வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருவதால் எமது மொழியையும் மதங்களையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்க வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம். வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு கிழக்கு இணைப்பு அத்தியாவசியம் ஆகின்றது. அதனை சிங்கள மக்கள் ஏற்பார்களா என்றதொரு சந்தேகம் எம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

உண்மையைச் சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எமது வாதம். வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக தமிழ்ப் பேசும் மக்களே வாழ்ந்தார்கள் என்பதை சிங்கள மக்கள் ஏற்காவிட்டால் சர்வதேச வரலாற்றாசிரியர்களை அழைத்து நாம் கூறுவது சரியா அல்லது அண்மைக் காலங்களில் பெரும்பான்மையினர் கூறிவருவது சரியா என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். சிங்கள பௌத்த மக்கள் பாரம்பரியமாகப் பல காலம் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் வந்தேறு குடிகளாக நுழைந்து ஆக்கிரமித்தார்கள் என்பது சரித்திர பூர்வமாக ருசுவாகினால் நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கான கோரிக்கையைக் கைவிடுகின்றோம். அண்மைய பல சரித்திர பூர்வ கண்டு பிடிப்புக்கள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் நவீன தொழில்நுட்ப பொறிமுறைகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு நீண்ட கால இருப்பை ருசுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
திடீரென்று ஒரு அரசியல் யாப்பைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக

எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது. 18 தடவைகள் சென்ற அரசாங்கம் இருந்த காலத்தில் பல கலந்துரையாடல்கள் இரகசியமாக தமிழ் மக்கட் தலைவர்களுக்கும் அப்போதைய அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்றன. அவை பற்றி எதனையும் எவரும் வெளியிடவில்லை. அரசியல் யாப்புக்களினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துக்களைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், அனர்த்தங்கள் தொடர்ந்தே செல்வன.
ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாக தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கரிசனைகளை நாம் வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியை கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இத்தருணத்தில் ஏன் என்று கேட்கின்றார்கள் நம்மவரில் சிலர். இத்தருணத்தில் எமது கரிசனைகளை ஊரறிய, நாடறிய, உலகறிக் கூறாவிடில் பின் எப்பொழுது கூறப் போகின்றோம்? எமது எதிர்பார்ப்புக்கள் வரப்போகும் அரசியல் யாப்பினால் திருப்திப் படுத்தப்படுவன என்ற நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுவரை காலமும் தம் கைவசம் வைத்திருந்த அதிகாரத்தை எம்முடன் பெரும்பான்மையினத் தலைவர்கள் நியாயமாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நாம் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு பகிர்ந்தார்களேயானால் எமக்கு மகிழ்ச்சி. இல்லை என்றால் எமது கரிசனைகளை எப்பொழுது நாம் வெளிக்காட்டப் போகின்றோம்?

மத்தியின் மேலாதிக்கம் தற்பொழுதும் தொடர்கின்றது. இராணுவ பிரசன்னம் தொடர்கின்றது. ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்கிறது. காணாமற் போனோர் பிரச்சினை தொடர்கின்றது. மதரீதியான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது. வடமாகாண மக்கட் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும். புதிய அரசியல் யாப்புத் தயாரித்தலானது எமது கரிசனைகளை உள்ளேற்க வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கு சமஷ;டி அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும். காணி, பொலிஸ், நிதி போன்ற அதிகாரங்கள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும். இதனை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இராணுவம் படிப்படியாக குறிப்பிட்ட காலத்தினுள் வாபஸ் பெற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக புத்த விகாரைகள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு

தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக நடைபெற வேண்டும். காணாமல்ப் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்திவே இந்தப் பேரணி. இவ்வாறான எமது கரிசனைகளைக் கருத்தில் கொள்ளாது அவற்றிற்குத் தீர்வைக் காணாமல் நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது கரத்தையைக் குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது.

எமது சிங்கள சகோதர சகோதரிகள் ஏன் எமது இராணுவ, கடல்படை, விமானப்படை சகோதர சகோதரிகள் எமது மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். எமது இன்றைய கேள்விகளுக்குப் பதில் கூற அதிகாரத்தில் உள்ளோர் கடமைப்பட்டுள்ளார்கள் என்று கூறி என் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!

நன்றி. வணக்கம்
நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
« PREV
NEXT »

No comments