Latest News

September 02, 2016

தமிழ் மக்களின் அழிவுக்கு ஐநா காரணம்- மூன் ஒப்புதல்
by admin - 0

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா பாரிய தவறுகளை இழைத்திருப்பதாகவும், அது சிரத்தையுடன் செயற்பட்டிருக்குமாயின் பல மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் இன்று கொழும்பில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கொடும்போர் இடம்பெற்ற இறுதி ஏழு மாத காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த பான் கீ மூன், யுத்த வெற்றி ஸ்ரீலங்காவிற்கு அளப்பரிய நன்மைகளை வழங்கியிருக்கின்ற போதிலும், அதற்காக அதியுச்சக் கட்ட விலை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றிலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். 

ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்த உலகின் செயற்பாடு என்பது மிகவும் கடுமையான ஒரு சோதனையாக இருக்கிறது. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவந்தமை இந்த நாட்டிற்கு அளப்பரிய நன்மைகளைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்காகப் அதியுச்ச விலைகொடுக்கப்பட்டிருக்கிறது. 

இலங்கையர்கள் தற்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மீளாய்வு செய்வதிலும், நல்லிணக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.நா தான் இழைத்த தவறுகள் குறித்தும் விசாரணை செய்தது. இதற்காக நான் ஒரு நிபுணர்கள் குழுவொன்றினை அமைத்து விசாரணை செய்தேன். இதனூடாக ஐ.நா அமைப்பும், அதன் உறுப்பு நாடுகளும் கட்டமைப்பு ரீதியான தவறுகளை இழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

ஐ.நா இலங்கையின் இறுதி ஏழுமாதகாலப் பகுதியில் பாரிய தவறுகளை இழைத்திருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் ஐ.நாவும், அதன் கொழும்பு அலுவலகமும், உறுப்பு நாடுகளும் சிரத்தையுடன் செயற்பட்டிருந்தால் பாரியளவு உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இலங்கையின் தவறுகளிலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். 

இது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை நாம் விடாமல் இருப்பதற்கு ஒரு படிப்பினையாக அமையும் எனக் கருதுகிறேன். வடக்கே படையினரின் பிடியிலுள்ள காணிகள் விரைவில் மீளக்கையளிக்கப்படவேண்டும். படையினரின் பிரசன்னம் அங்கு கணிசமான அளவில் குறைக்கப்படவேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் நல்லிணக்கம் குறித்த நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் காணிகளை விடுவித்தால் மாத்திரமே, மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக அமைப்புக்களுடைனான சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைத்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்திருந்தாலும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் காணப்படுகின்றன. நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு இடையிலான தொடர்பு குறித்து பேசுவதில் பெருமையடைகின்றேன். 

2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்திற்குப் பின்னரான என்னுடைய இராண்டாவது விஜயமாக அமைந்துள்ளது. மோதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஸ்ரீலங்கா அடைந்துள்ள மைல்கற்கள் தொடர்பிலும் மகிழ்ச்சியடைகின்றேன். 

ஸ்ரீலங்கா மக்களின் எதிர்பார்ப்புக்கள் மிக முக்கியமானவை. கடந்த 30 வருடங்களில் மக்கள் சவால்களை எதிர்நோக்கியிருந்தனர். பரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கியதற்கு அமைச்சரவைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான செயலணி, நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சமாதானத்திற்கான பாதையை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும். இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன்மூலமே மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும். வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைத்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் குறைக்கப்பட வேண்டும். 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்திருந்தாலும் இன்னும் நிறைவற்ற வேண்டிய கடமைகள் காணப்படுகின்றன. கொடூர யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசியமாக இருந்தன. துரித நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் நான் அழைப்பு விடுக்கின்றேன். 

அது மோதலுக்குப் பின்னரான நலிவடைந்துள்ள சமூகங்களைக் கட்டியெழுப்ப உதவும். 19 ஆவது திருத்தத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறித்து நான் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

விரிவான இடைக்கால நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments