புனே: போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனி செல்ல முயன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சுதன் சுப்பையா புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
புனே விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜெர்மனிக்கு விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் ஆவணங்களை விமானநிலைய அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது மாரிமுத்து ராஜூ என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அவரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, பாஸ்போர்ட்டு மற்றும் விசா போலியானது என தெரியவந்தது. அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் பாஸ்போர்ட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதன் சுப்பையா என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
2010-ம் ஆண்டு துபாய் சென்று இலங்கையை சேர்ந்தவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த அவர் 2014-ம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்துவிட்டார். பின்னர் 2015-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்த சுதன் சுப்பையா வளசரவாக்கம் அஷ்டலெட்சுமி நகர் 10-வது தெருவில் ஒரு ஆண்டு வசித்து இருக்கிறார்.
அங்கு இவர் போலி ஆவணங்களை தயார் செய்ததாக தெரியவந்தது. கடந்த 30-ந்தேதி ரயில் மூலம் புனே வந்த சுதன் சுப்பையா தற்போது விமானநிலைய அதிகாரிகளிடம் பிடிபட்டிருக்கிறார்.
No comments
Post a Comment