Latest News

September 11, 2016

நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும்-சீமான் எச்சரிக்கை
by admin - 0

காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்ஸை நான் மறித்தால் என் மீது நாளையே குண்டாஸ் பாயும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

காவிரியில் இருந்து நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்கு சுமார் ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் லாரிகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் அங்கு நடத்தப்பட்ட பந்த்தியில் நடிகர் நடிகைகள் என கர்நாடக திரையுலகினர் பங்கேற்று தமிழத்தை கடுமையாக சாடினார்கள். தண்ணீர் கொடுக்க கூடாது நிமிர்நில் பட நடிகை ராகினி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது,


நாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள். காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடின திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்சி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன. எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. எவ்வளவு மாண்புக்க ஜனநாயகவாதிகள் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்


ஈழத்தில் லட்சக்கணக்கில் எம் மக்கள் செத்து விழுந்தபோது கூட என் தம்பி முத்துக்குமார், தன் ஆழ் மனதில் எழுந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தன் உடலில் நெருப்பை வைத்துக்கொண்டு செத்தான். ஒரு சிங்களர் கூட இங்கு தாக்கப்படவில்லை. எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதைச்செய்யாமல் இருக்கிறோம்


தமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனித்த அரசியல் என்று எதுவுமில்லை. அந்த மண்ணின் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படிதான் வாழ்கிறார்கள். ஆனால் இங்கு எங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை. அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது. போலீசார் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா பாருங்க.


தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும். நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை.


அங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா? பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது? தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்


மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம் என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments