Latest News

September 17, 2016

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது
by admin - 0

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது.


காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும் சோராத ஓர்மத்தோடு புலத்தில் அறப்போராட்டத்தில் எம் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


தியாக தீபம் திலீபன் மற்றும் அனைத்து மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுடன் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக நேற்று (14-09-2016) தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு கவனயீர்பு போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பெல்ஜியம் ஏற்பாட்டில் நடைபெற்றது.


கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசாள் நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலைகளுக்கும் தற்போது திட்டமிட்டபடி தொடருகின்ற தமிழனவழிப்புக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையே நீதியைப்பெற்றுத்தரும் என வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம் மனிதநேய செயற்பாட்டாளர்களால் புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக இருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பமானது.


புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை கருத்தை முன்வைத்து ஈருருளிப் பயணம் ஆரம்பித்த சமநேரத்தில் ஐரோப்பிய கமிஷன் அதிகாரிகளுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நேற்று புதன்கிழமை ஒரு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடினார்கள்.


இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி சிறிலங்கா பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்தார். அதைதொடர்ந்து இக் கலந்துரையாடலில் பங்கேற்றிய ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக செய்து வரும் இன அழிப்பை ஆதாரங்களுடன் முன் வைத்ததோடு, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் முகத்தை காட்டிக்கொண்டு இருப்பதைஎடுத்துக் கூறினர். தொடர்ந்து ஈழத்தமிழர்களின் நிலங்கள் மீள் அளிக்கப்படாத சூழலில், ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் செப்டம்பர் 2015 மனிதவுரிமை சபை முன்வைத்த பிரேரணையின் கூற்றுப் படி சிறிலங்கா அரசாங்கம் விசாரணையை முன் எடுத்துச்செல்லவில்லை என்பது வலியுறுத்தப்பட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம் அரசிலமைப்பு மாற்றம் என்ற விடையத்தை முன்வைத்து அங்கே வாழும் மக்களின், குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்வுக்குரிய செயற்பாடுகளையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையை கூட செய்யாமல் காலத்தை நீடித்து அதை நீர்த்துப்போக வைக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தை சுட்டிக்காட்டப்பட்டது .

5அம்சக் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது. கையளிக்கப்பட்ட 5அம்சக் கோரிக்கைகளின் விபரம்

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி நிரந்தர தீர்வு தமிழீழம்

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்களே தம்மை ஆழும் சுயாட்சியை வலியுறுத்தியும் இன்னும் எத்தடை வரினும் எம் இலக்கே இறுதி முடிவாய் அடையும் வரை தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவோடும் மற்றும் ஏனைய மாவீரர்களின் நினைவோடும் தொடர்ந்தும் போராடுவோம் எனும் உறுதி மொழியுடன் நாளை மீண்டும் தொட காத்திருக்கின்றார்கள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
« PREV
NEXT »

No comments