Latest News

August 03, 2016

தமிழினியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டும் சிறிலங்கா அரசாங்கம்!
by admin - 0

தடுப்பு முகாம்களில் இருந்தபோது தமக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் சாப்பாட்டுக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் மரணமடையக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தடுப்பு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சிறிலங்கா அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இக்குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியான தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனக்கூறி அப்புத்தகத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் பலரைப் பிடித்துச் சென்ற சிறிலங்கா இராணுவம் அவர்களுக்குத் தடுப்பு முகாம்களில் வைத்துப் புனர்வாழ்வளிப்பதாகக் கூறி நீண்ட காலம் தடுத்து வைத்திருந்த பின்னர் குறிப்பிட்டளவானவர்களை விடுதலைசெய்துள்ளது. முள்ளிவாய்க்காலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பலர் எங்கே உள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற நிலையில் அவர்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உறவினர்கள் இப்போதும் அவர்களைத் தேடி கண்ணீரோடு அலைகின்றார்கள். 
இந்நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாம்களில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டு இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகள் பலர் திடீர் திடீரென ஒருவகையான நோய்த்தக்கத்திற்குள்ளாகி மரணமடைந்து வருகின்றார்கள். இப்படியாக நூற்றுக்கும் மேற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் ஒரே வகையான நோய்த்தக்கத்திற்குள்ளாகி மரணமடைந்துள்ளார்கள்.  
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகள் பலர் தொடர்ச்சியான நோய்த்தாக்கத்திற்குள்ளாகி வருவதாகவும் வேலை செய்ய முடியாத அளவுக்கு உடல் நிலை காணப்படுவதாகவும் முன்னாள் போராளிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குக் காரணம் முன்னாள் போராளிகளைத் தடுத்து வைத்திருந்த தடுப்பு முகாம்களில் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது தமக்கு தடுப்பு மருந்து எனக் கூறி விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் தமக்கு வழங்கப்பட்ட உணவுக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் சாகடிக்கும் மருந்துகள் கலந்து தமக்கு வழங்கப்பட்டதாகவும். விஷ ஊசி ஏற்றப்பட்டபோது சில போராளிகள் உடனடியாகவே இறந்துள்ளதாகவும் தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளால் சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன மற்றும் சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர ஆகியோர் இக்குற்றச் சாட்டுக்களை மறுத்துள்ளனர். 
இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி இறந்ததன் பின்னர் அவர் எழுதியதாகக் கூறி வெளியிடப்பட்ட ஒரு கூர் வாளின் நிழலில் என்ற நூலை ஆதாரமாகக் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினியால் எழுதப்பட்ட ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்புப் பற்றி சகல விடயங்களும் அவரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதில் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது பற்றி எதுவும் கூறப்படவில்லை. இது ஆதாரமற்ற பொய்யாகத்தான் இருக்கும். இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி சிறிது காலத்தில் நோய்த்தாக்கத்திற்குள்ளாகி மரணமடைநததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி எழுதியதாகக் கூறி ஒரு கூர் வாளின் நிழலில் என்ற நூலினை கிளிநொச்சியில் வைத்து ரெலோ பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பொன்.காந்தன் அவர்களின் தலைமையில் பலரது எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் சிங்கள மொழி பெயர்ப்பு அண்மையில்தான் தென்னிலங்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினி எழுதியதாகக் கூறி அவர் இறந்த பின்னர் ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலை வெளியிடும் போதே இந்நூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் அதன் தலைவர் வே.பிரபாகரன் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புனைகதைகளைக் கூறி உண்மைகளை மறைத்து சிறிலங்கா இராணுவத்தையும் அரசாங்கத்தையும் 'முள்ளிவாய்க்கால் போர்-மனித குலத்திற்கெதிரான போர்' என்ற போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆதாரமாக எதிர்காலத்தில் இந்நூலை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்நூல் வெளியீட்டுக்கு எதிர்ப்பினையும் தெரிவித்திருந்தார்கள்.

இதன் முதற்கட்டமாக, புனர்வாள்வளிக்கப்பட்ட போராளிகளின் மர்மச் சாவுகளுக்குக் காரணம் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது முன்னாள் போராளிகளுக்கு சிறிலங்கா இராணுவத்தால் விஷ ஊசி ஏற்றப்பட்டது என்னும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு ஆதாரமாக அரசாங்கத்தால் தமிழினி எழுதியதாகக் கூறி வெளியிடப்பட்ட ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூல் முன்வைக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments