Latest News

August 02, 2016

மறுக்கப்பட்டு வரும் நீதியை போராடி பெறுவதற்கு தயார் : சிவில் சமூகம்
by admin - 0

மறுக்கப்பட்டு வருகின்ற நீதியை போராடிப் பெறுவதற்காக கரம் கோர்த்திருக்கின்றோம் என்றும், இதற்குத் தடையாக அரசியல்வாதிகளுக்கு எடுபிடிகளாக இருக்கின்ற சுயநலவாதிகளை பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, நியாயமான நீதிக்காக, வன்முறையற்ற வகையில் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான வதிவிடச் செயலமர்வொன்று, மட்டக்களப்பில் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த செயலமர்வின் இன்றைய நாள் (செவ்வாய்க்கிழமை) நிகழ்வில் உரையாற்றிய அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
”இலங்கை ஆட்சியாளர்களிடையே தாம் விரும்புவதை செய்யும் கலாசாரம் மேலோங்கியுள்ள காரணத்தாலேயே நாட்டிற்கு இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஆயுத முரண்பாட்டுக்குப் பின்னரான காட்சி தொடங்கியிருக்கின்றது. ஒரு நாட்டுக்குள் சகல இன மக்களும், அனைத்து நியாயங்களையும் பெறவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

சோபித தேரர் போன்ற மாற்றத்தை விரும்பிய நல்லவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிவில் சமூக மனநிலை மாற்றம், வேறு தெரிவுகள் அற்ற நிலையில் நல்லாட்சியை தோற்றுவித்தது. ஆனால், துரதிஷ்ட வசமாக நல்லாட்சியில் எதிர்பார்க்கப்பட்ட நல்ல விடயங்கள் நடந்தேறவில்லை.

அரச பொறிமுறை தொடர்ந்தும் ஊழல் மிக்கதாகவும், அதிகார ஆணவமும், துஷ்பிரயோகம் செய்யக் கூடியதாகவும் நீதியை மறுக்கின்றதாகவுமே இன்றுவரை இருந்து வருவதானது, இன்னுமொரு மனித அவலத்திற்கு வழிகோலுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனாலும், சிவில் சமூகம் முன்னரைப்போன்று இப்பொழுது மனம் தளர்ந்து விடவில்லை என்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு ஒரு பெரும் பக்கபலமாக உள்ளது.

ஆனால், தற்போதைய நல்லாட்சியில் மக்களை நேசிக்காத மக்களோடு ஒன்றிணைந்து வேலை செய்யாத சில நபர்கள், தேசிய நல்லிணக்கப் பொறிமுறைக்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

இம்முறை சிவில் சமூகம் கூடுதலான ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்ற ஒரு சக்தியாக மாறியிருக்கின்றது. அரசியல்வாதிகளுக்குச் சார்பாக இருக்கின்றவர்களைப் பற்றி மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை. நியாயமான ஒரு எதிர்கால நாட்டைக் கட்டியெழுப்ப சிவில் சமூகமாகிய நாங்கள் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்” என்றார்.
« PREV
NEXT »

No comments