Latest News

June 09, 2016

சிறைக்குள்ளேயே ஒடுங்கி முடங்கி விட்டது என் மகனின் இளமை! கதறும் அற்புதம் அம்மாள்
by admin - 0

சிறைக்குள்ளேயே ஒடுங்கி விட்டது என் மகனின் இளமை வாழ்க்கை எல்லாமே என கண்ணீர் வடித்துள்ள அற்புதம்மாள் தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி 11ம் திகதி வேலூரில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது.

இதில் பெருந்திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறையினரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

தனது மகனின் இளமை, வாழ்க்கை எல்லாம் சிறைக்குள்ளேயே அடங்கி முடங்கி ஒடுங்கிப்போய் விட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எனது மகன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் அடைபட்டு உள்ளனர்.

19 வயதில் சிறைக்கு சென்றது முதல் இன்று வரை என் மகன் ஒருமுறை கூட வெளியில் வரவில்லை. அவனது இளமை, வாழ்க்கை எல்லாமே சிறைக்குள் அடங்கி ஒடுங்கி விட்டது.

எனது மகன் உட்பட 7 பேரையும் தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால், ஏனோ மத்திய அரசு இந்த விவகாரத்தில் பராமுகமாகவே உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் 11ம் திகதி (சனிக்கிழமை) வேலூர் மத்திய சிறைச்சாலை வாசலில் இருந்து சென்னை கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம்.

கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்,- இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் 7 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும்.

என் மகன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்
« PREV
NEXT »

No comments