அடையாளம் காணத் தவறுகின்ற கிராமிய வறுமையின் வடிவங்கள் கிளிநொச்சி பூநகரியில்!
கிளிநொச்சி மாவட்ட மக்களின் வறுமை நிலை தொடர்பிலான கள ஆய்வினை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த முதலாம் திகதி பூநகரி 4ம் கட்டையில் அமைந்துள்ள தெளிகரைக் கிராமத்திற்குச் சென்றிருந்தனர்.
இக்கிராமத்து மக்களது அவல நிலை தொடர்பிலும் மக்களது வறுமை நிலையைப் பயன்படுத்திக் கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருந்த மகிந்த அரசாங்கத்தின் பங்காளிகள் இம்மக்களை ஏமாற்றியமை தொடர்பிலும் அங்கு வாழும் மக்கள் மூலமும் அவர்களது கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத அரைகுறை அபிவிருத்திகள் மூலம் மக்களை ஏமாற்றி மக்களுக்கான பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பிலும் கண்டுணர முடிகிந்தது.
140 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட பூநகரி தெளிகரைக் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பெரிதும் அவலப்பட வேண்டிய வறுமை நிலையே காணப்படுகின்றது.
வறுமையோடு வாடும் இக்கிராமத்து மக்களைக்கூட ஏமாற்றுக்கொள்ளையர்கள் விட்டுவைக்கவில்லை. கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இக்கிராமத்திலுள்ள 50 குடும்பங்களுக்கு தலா 5 ½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய வீடுகள் வழங்கப்பட்டது. அப்போதைய காலத்தில் தமது செல்வாக்கினைப் பயன்படுத்திய கட்டிட ஒப்பந்தகாரர்கள் சிலர் அந்த மக்களுக்கான 50 வீடுகளையும் கட்டி வழங்குவதாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்கள் 5 ½ இலட்சம் ரூபா பெறுமதியான இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டங்களை 3 ½ இலட்சம் ரூபாய்களுக்குள் கட்டி வழங்கியுள்ளதாகவும் பெருமளவான பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் அங்கு வாழும் மக்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களால் கட்டி வழங்கப்பட்ட 50 வீடுகளும் ஒழுங்கான முறையில் அமைக்கப்படாதமையால் அனைத்து வீடுகளும் மழை காலங்களில் கூரையால் ஒழுகி வீட்டுக்குள் மழை நீர் வருவதாக மக்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர தற்போது இங்குள்ள வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்குளுக்கு சஜித் பிரேமதாசாவின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக ஒரு இலட்சம் ரூபா கடனாக வழங்கிவிட்டு மூன்று இலட்சம் ரூபாவில் வீடமைக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. இவ்வீடுகள் அமைப்பதற்கான காணிகள் மாரி காலத்தில் நீர் தேங்கி நிற்கும் குளப்பள்ளத்திற்குள்ளேயே வழங்கப்பட்டுள்ளன.
இங்குள்ள மக்களில் 39 குடும்பங்கள் யுத்தத்தால் குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்களாகவும் நாளொன்றுக்கு 100 ரூபா வருமானத்தைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மிகவும் வறியவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஏனைய குடும்பங்கள் தொழில் வளங்கள் ஏதுமற்ற நிலையில் தூர இடங்களுக்குச் சென்று 450 ரூபாய்க்குக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
இப்படியான நிலையிலுள்ள இவர்கள் எப்படி கடனாகப் பணம் பெற்று மீதிப் பணத்தைப் போட்டு வீடமைப்பார்கள்?
இங்குள்ள 17 மாணவர்கள் காலை உணவு இல்லாத நிலையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள்.
மற்றும் இங்குள்ள 77 மாணவச் சிறார்கள் கால்நடையாக நடந்தே மிகவும் தொலை தூரத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள். இந்தச் சிறார்கள் கால் நடையாகப் பாடசாலைகளுக்குச் செல்லும் போது மன்னார்- யாழ்ப்பாணம் வீதியால் பயணிக்கும் பஸ் வண்டிகள் எவையுமே இந்த மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு இரக்கமற்ற நிலையில் செல்கின்றன.
பூநகரி தெளிகரைக் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக இங்குள்ள மக்கள் தொலைதூரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இக்கிராம மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டி அமைப்பதாகக் கூறி கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிகளான ஈ.பி.டி.பி அரசியல்வாதிகளால் பெருமளவு பணத்தை ஒதுக்கி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் அரையும் குறையுமாகக் காணப்படுகின்றதுடன் குடிநீர்த் தொட்டிக்கான வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இக்கிராமத்திற்கான உள்ளக வீதிகள் எவையும் திருத்தியமைக்கப்படாத நிலையில் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன.
இங்குள்ள மக்களின் பிரதான உணவாக பருப்பும் சோறுமே காணப்படுகின்றது. இது மீண்டும் முள்ளிவாய்க்காலை நினைவூட்டுகின்றது.
இக்கிராமத்திலுள்ள விதவைக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் பலருக்கு வறியவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி உதவித்திட்டங்கள் உட்பட அரசினது உதவித்திட்டங்கள் எவையுமே இதுவரை வழங்கப்படவில்லை.
பூநகரி தெளிகரைக் கிராமத்தின் பின்பக்கமாகவுள்ள காட்டுப் பக்கத்தில் முன்னர் ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காகவெனக் கூறிப் பல போடி ரூபா பணத்தைச் செலவழித்துக் கட்டப்பட்ட பாரிய கட்டிடம் ஒன்று பயன்படுத்தப்படாத நிலையில் காட்டுப் பற்றை மண்டிக் காணப்படுகின்றது. தற்போதுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது கிராமத்து மக்களது வறுமை நிலையைக் கருத்திற்கொண்டு இக்கிராமத்தின் காட்டுக் கரையில் பல கோடி ரூபா பணத்தைச் செலவழித்துக் கட்டிப் பயன்படாத நிலையில் காணப்படும் கட்டிடத்தில் தமது வருமானத்தைத் தரக்கூடிய கைத்தொழிற்சாலை ஒன்றினை அமைத்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவவேண்டும் என இக்கிராமத்து மக்கள் ஆவலுடன் கோரி நிற்கின்றார்கள்.
பூநகரி தெளிகரைக் கிராமத்து மக்களது வறுமை நிலை மாறி இக்கிராம மக்கள் வாழ்வில் ஒளி பிறக்க நல்லாட்சிக்கான மைத்திரி ஆட்யாவது உதவுமா என்ற ஏக்கத்துடன் ஏழை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்
No comments
Post a Comment