Latest News

June 10, 2016

மண்ணில் வீழ்ந்த குண்டும் எங்களில் புகுந்த குண்டும்
by admin - 0

தமிழர்களுக்கும் வெடிகுண்டுகளுக்கும் நிறையவே தொடர்பு உண்டு என்பதாக நிலைமை உள்ளது.
கடந்த முப்பது ஆண்டு காலத்தில் எங்கள் தமிழர் தாயகம் குண்டு மழையில் நொருங்குண்டு போனது. எங்கிருந்து குண்டு வீசினாலும் அது தமிழன் தலையில்  வீழ்ந்தால் சரி என்பதே அரசினதும் படைத்தளபதிகளினதும் நிலைப்பாடாக இருந்தது.

தரை, வான், கடல் என்ற மூன்று வழிகளிலும் இருந்து ஏவப்பட்ட குண்டுகள் தமிழர் தாயகத்தில் - தமிழ் மக்களின் குடிமனைகளில் வீழ்ந்து வெடித்து சங்காரம் செய்தன.

யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து ஏவப்பட்ட செல் ஒன்று திருமண வீட்டில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே மணமகன் இறந்துபோன மிகப்பெரும் கொடூரம் நிகழ்ந்தது எனில் ஏவப்பட்ட குண்டுகளின் வெறித்தனம் எத்தன்மையது என்பதை அறிய முடியும்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் என வடபுலம் முழுமையிலும் குண்டுகள் புதைக்கப்பட்டதால், நிலத்தில் கால் வைப்பதே முடியாத காரியம் என்றாயிற்று.

இந்தக் கொடூரங்களை எல்லாம் அனுபவித்த நமக்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் என்று நம்பியிருந்த போது, வன்னியில் வீழ்ந்த குண்டுகள் அந்த நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து எங்கள் உடல்களிலும் புகுந்து கொண்டன.

தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை மீண்டும் எழாத வகையில் குண்டுகள் தங்கள் துகள்களை தமிழர்களின் உடல்களில் செருகிக் கொண்டனவோ என்று நினைக்கும் அளவில் நிலைமை உள்ளது.

இதேவேளை தமிழ் மக்களின் உடல்களில் நுழைந்து மறைந்துள்ள குண்டுத்துகள்கள் அகற்றப்படாமல் இருப்பது வடபுலத்தில் அகற்றப்படாத இராணுவ முகாம் போன்றதே.

இத்தகைய நிலையில் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டு குண்டுச் சிதறல்களை தம் உடலில் தாங்கிய வண்ணம் சதா துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளித்து குண்டுத் துகள்களை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கை உண்மையில் அவசியமானது.

என் உடலில் இருக்கின்ற குண்டுத் தகட்டை அகற்றாததால் என்னால் எழுந்து  நடமாட முடியவில்லை என்று ஏங்குவோர் எத்தனைபேர்? இந்தக் கவலைகள் நீக்கப்பட வேண்டும். இதேவேளை போரினால் அங்கவீனமானோரின்- பாதிக்கப்பட்டோரின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதற்கான நிவாரணப் பணிகளை அரசு முன்னெடுப்பது மிகவும் அவசியமானது.

இதை செய்வதானது போர் பாதிப்பின் பின் விளைவுகளை குறைப்பதற்கு உதவுவதாக அமையும்.
எனவே நல்லாட்சியில் இந்தப் பணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை அனைத்து அரசியல் தலைமைகளும் உறுதி செய்து கொள்வது நல்லது.
« PREV
NEXT »

No comments