வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் புது வசந்தம் தையல் நிலைய திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தனது உரையில் சில உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
முதலமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை நாங்கள் முற்றிலும் வரவேற்கின்றோம். முல்லைத்தீவிலிருந்து அமைச்சர் ஒருவர் இல்லாத குறையை நாங்கள் உணர்ந்து செயற்பட்டு வருகின்றோம்.
நீண்ட கால யுத்தத்தின் விளைவாக இப்பகுதியில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. 2009ஆம் ஆண்டு இக்காலப்பகுதியில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் என பல பாதிப்புக்களை மக்கள் அனுபவித்தார்கள். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக வாழ்ந்து வந்த இம் மக்களில் ஒரு சிலருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே இன்று இந்த தையல் நிலையம் திறந்துவைக்கப் பட்டுள்ளது.
எமது அரசியலுக்கும் மேலாக இந்த மக்களை எப்படி சராசரி மனிதர்களாக சமுதாயத்தில் ஓர் அங்கமாக அவர்களை மாற்றலாம் என்றே அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாங்கள் எவரும், எல்லோரும் கொண்டுவரும் பொருளாதார முன்மொழிவுகளை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எமது கருத்துரையாளர்களின் கருத்தறிந்தே இதைச் செய்கின்றோம்.
இதனால் எம்மால் பலவிதமான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எமது மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எமது அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் எழுத்தில் ஆதாரத்துடன் தந்தால் உடனே உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறிய பின்னரும் சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரத் தயாராகின்றார்கள்.
ஒருவரின் குற்றங்கள் கையுயர்த்தி ஏற்கப்படும் விடயங்கள் அல்ல. தாருங்கள் நான் உரியவர்களைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றேன் என்றால் எதையும் என்னிடம் கையளிக்காமல் சபையில் சாட விரும்புகின்றார்கள்.
அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் என்றார்.
No comments
Post a Comment