Latest News

June 15, 2016

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட 29 கோரிக்கைகளை முன்வைத்தார் ஜெயலலிதா
by admin - 0

தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்வைத்துள்ளார்.

டில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் 29 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதன்போது அவர், ‘தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். தமிழகத்திற்கான உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கக்கூடாது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது.

மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவியை உடனடியாக விடுவிக்க வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். தமிழகம் பரிந்துரைத்த இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் தமிழகம் கோரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளினையே இதன்போது அவர் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு இடையில் இன்று சந்திப்பு: ஈழத் தமிழர் குறித்து பேச்சு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்கிழமை) தலைநகர் டெல்லிக்கு விஜயம் செய்கின்றார். 6ஆவது முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர்,  தலைநகருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக இது அமைகின்றது. அதன் பிரகாரம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்திக்கும் அவர், ஈழத் தமிழர் குறித்து பேச்சு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலை தொடர்பான மனு அடங்கலாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் கையளிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லத்தில் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின், மத்திய அமைச்சர்கள் சிலர் ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு, தமிழக திட்டங்கள் குறித்து பிரதமருடன் சுமார் 50 நிமிடங்கள் பேசுவார் என்றும் குறித்த சந்திப்பு முடிந்ததும் டெல்லியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரதமரை சந்திக்கும் போது, 32 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அவரிடம் ஜெயலலிதா அளிக்கவுள்ளதாகவும், இவற்றில், ரஜீவ்காந்தி கொலை வழக்கில் மிக நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலையினை வலியுறுத்தும் கோரிக்கை முக்கிய விடயமாக இருக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, முல்லை பெரியாறு அணை மற்றும் நதிநீர் இணைப்பு, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பது, கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதில் விலக்கு அளிக்க கோருவது உள்ளிட்ட அம்சங்கள் கோரிக்கை மனுவில் இடம்பெறுகின்றன.

இவற்றைத் தவிரவும், நிதி ஒதுக்கீடு தொடர்பில், தமிழகத்தின் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கான ஒப்புதல், ஆழ்கடல் மீன் பிடிப்பு தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் போன்றவை தொடர்பாகவும் முதல்வர் பிரதமர் மோடியுடன் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

முதல்வருடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments