Latest News

May 01, 2016

ஈழத்தமிழருக்காக கொதிப்பது வெறி அல்ல; நெறி!” – சகாயம் ஐஏஎஸ் பேச்சு!
by admin - 0

இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் இணைய தலைமுறை. கல்லூரி மாணவர் தேர்தலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார், மனிஷாஜித்  நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சகாயம் ஐஏஎஸ், இயக்குனர்கள் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் பாடல்களை வெளியிட்டு சகாயம் பேசியதாவது:
இணைய தலைமுறைபடத்தை தயாரித்திருப்பவர் இளந்திருமாறன்.  இளைஞர்கள் இந்த படத்தை தமிழ் சமூகத்திடம் எடுத்துச்செல்ல வேண்டும்.
2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கணினி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் குதித்தார்கள். நாம் நம்பியிருக்கும் தலைவர்கள் தேசத்துக்கு, நம் மேம்பாட்டுக்கு உழைப்பார்கள் என்று நம்பி ஆதரவு தருகிறோம். ஆனால், அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறார்களேஎன்று ஊழலுக்கு எதிராக கோபம் கொண்ட இளைஞர்கள் அவர்கள்.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இளந்திருமாறன். நாம் பிறந்த இந்த சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அக்கறையில் பணியாற்றினார். அப்போது நான் அந்த பகுதியில் குடியிருந்தேன். கலால் துறையில் பணியாற்றினேன். இளந்திருமாறனை பார்த்தது கூட இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும், என் மனைவியும் அவருக்கு ஓட்டு போட்டோம். அவர் வெற்றி பெறுவாரா? டெபாசிட் வாங்குவாரா? என்று நினைக்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்பதால் ஓட்டுப் போட்டேன். 2011ல் தான் இவரை சந்தித்தேன்.
2009ல் ஈழத்தில் நடந்த படுகொலைக்குப்பின் நான் மனதளவில் நொந்துபோய் இருந்தேன். தொன்மையும், வரலாறும் கொண்ட தமிழ்சமூகம் ஈழத்தில் 2 லட்சம் பேரை இழந்து இருந்தது. 21-ம் நூற்றாண்டில் எந்த சமூகமும் சந்திக்காத இழப்பை சந்தித்த. அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் இருந்தார்கள். ஆனால், நல்ல தலைவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
பல ஆயிரம் பெண்கள், அப்பாவி குழந்தைகள், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. அப்போது கொதித்துப் போனேன். அது வெறி அல்ல, நெறி.
நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான்.
பின்னர் ஒரு கட்டத்தில் பேசிய இளந்திருமாறன், ‘உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியை விட நேரிடும். 8 ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த 8 ஆண்டுகளுக்கான உங்கள் சம்பளத்தை எத்தனை லட்சமாக இருந்தாலும் நான் தருகிறேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மை, கல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை தூய்மைப்படுத்தினால் அரசியலும் தூய்மை ஆகிவிடும்என்றேன்.
இளந்திருமாறன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்பு மிக்கவர்கள். அவர்களிடம் அளப்பரிய சக்தி இருக்கிறது. அவர்களது கல்லூரி தேர்தலைப் பற்றிஅங்கே நடக்கிற தில்லுமுல்லு பற்றி இந்த படம் பேசுகிறது.
மாணவர் தேர்தல் தில்லுமுல்லுகளை மட்டுமல்ல, மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளையும் தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
கல்வி வணிக மயம், கல்வி முறை, குழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசைத் திணிப்பு பற்றி அப்பாஎன்ற படத்தை இயக்குனர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார்.
இந்த படங்கள் வெற்றி அடைய வேண்டும்
இவ்வாறு சகாயம் பேசினார்.
இணைய தலைமுறைபடத்தின் இயக்குனர் சு.சி.ஈஸ்வர் வரவேற்றார். தயாரிப்பாளர் இளந்திருமாறன் நன்றி கூறினார்.

நன்றி – ஹீரோ நியூஸ்
« PREV
NEXT »

No comments