சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்திரிகை நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று நாம் வரைவிலக்கணப்படுத்த முடியும். அதாவது உலகில் இடம்பெறும் அரசியல், பொருளாதார மாற்றங்கள், குற்றச்செயல்கள், சமூக விடயங்கள், பாதுகாப்பு விவகாரங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய சுதந்திரமே இந்த சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் எமது நாட்டு நிலைமைகளை ஆராயவேண்டியது இங்கு அவசியமானதாகும். ஊடக சுதந்திரம் எனும் போது உலக நாடுகளின் வரிசையில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவற்றில் இலங்கையானது ஊடக சுதந்திரம் என்ற பிரிவில் 141 ஆவது இடத்தில் இருக்கின்றமை முன்னேற்றமற்ற நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது.
ஒரு ஊடகவியலாளர் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் துன்ப துயரங்களையும் எதிர்கொண்டவண்ணமே சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஊடகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். எமது நாட்டைப் பொறுத்தவரையில் அவ்வாறு பாரிய சவால்களுக்கு மத்தியில் சமூகத்திற்காக சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் விசேடமாக யுத்தகாலகட்டத்தில் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் ஏராளமானவையாகும். அதுமட்டுமன்றி பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு துன்பகரமான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இலங்கையில் பதிவாகியிருந்தன. எமது நாட்டில் கடந்த 17 வருடகாலத்தில் பெருமளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன.
விசேடமாக தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் தராக்கி என பிரபலமாக அறியப்பட்ட சிவராம், ஐயாத்துரை நடேசன், செல்வராஜா ரஜிவர்மன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், பரணி ரூபசிங்கம் தேவகுமார், நிமலராஜன், ரேலங்கி செல்வராஜா உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி 2008 ஆம் ஆண்டு முழு உலகையே அதிர்ச்சிக்குட்படுத்தியவகையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ரிச்சட் டீ சொய்சா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அத்துடன் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயினர். ஒரு சில ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு பின்னர் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டிருந்தனர். கருத்துப்பட ஓவியராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு காணாமல்போன நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லாமல் இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி ஊடக பணியாளர்களும் ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்த உத்தியோகத்தர்களும் இனந்தெரியாதோரின் தாக்குதல்களுக்கு பலியாகிய மற்றும் காயமடைந்த சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இனந்தெரியாதவர்களினால் பல ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களும் பதிவாகியிருந்தன. பல ஊடக நிறுவனங்களும் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு கடந்த காலங்களில் உட்பட்டன. குறிப்பாக கொழும்பில் இலத்திரனியல் ஊடகமொன்று 2008 ஆம் ஆண்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் பிராந்திய பத்திரிகையொன்று 13 தடவைகள் இனந்தெரியாதோரின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடகவியலாளர் பணி என்பது பாரிய சவாலுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக முப்பது வருட யுத்தகாலத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட துன்ப, துயரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் என்பன வார்த்தைகளினால் விபரிக்க முடியாதவையாகும். அந்தளவிற்கு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட வண்ணமே ஊடகவியலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ், ஊடகவியலாளர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களையும், அச்சுறுத்தல்களையும், பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்தளவிற்கு சவால்மிக்கதாகவே ஊடகவியலாளர்களின் பணி காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் எதுவும் இதுவரை முழுமைபெற்றதாக தெரியவில்லை. குறிப்பாக லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த குற்றவாளிகள், மற்றும் சிவராம், ஜி. நடேசன், சுகிர்தராஜன் உள்ளிட்டோரை கொலை செய்தவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியினால் தண்டிக்கப்படவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறிவந்தாலும் அவற்றில் முன்னேற்றமிருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் கடந்த காலங்களில் நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது பேச்சளவிலேயே காணப்பட்டு வந்தது. சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட ஊடகவியலாளர்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலைமையே கடந்த காலங்களில் காணப்பட்டது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் ஊடக சுதந்திர விடயத்தில் குறிப்பிடத்தக்க ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக தகவல் அறியும் சட்டமூலமானது அரசியலமைப்பின் அடிப்படை விடயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க அளவு திருப்தியடையும் நிலையில் நாம் இருக்கின்றோம்.
ஆனால் இன்னும் இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும். சமூகப் பிரச்சினைகள் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டுவந்தமைக்காக சில ஊடகவியலாளர்கள் சமூகவிரோதிகளின் ஆயுதங்களுக்கு இரையாகியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு எந்தவொருவகையிலும் இடமளிக்கக் கூடாது. கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்கவேண்டியதும் அவசியமாகும்.
அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதுமட்டுமன்றி புதிய அரசாங்கமானது எக்காரணம் கொண்டும் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் வகையிலான சூழல்களை ஏற்படுத்தக்கூடாது. ஊடகவியலாளர்கள் தமது பணியை சுதந்திரத்துடனும் அச்சுறுத்தல்கள், தடைகள் இன்றியும் முன்னெடுப்பதற்கு தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். மேலும் ஊடகவியலாளர்களும் தமது தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் சுய தணிக்கையுடனும் பக்கச்சார்பின்றியும் தமது தொழில்சார் தன்மையைப் பேணும் வகையில் செயற்படவேண்டும். எந்தவொரு கட்டத்திலும் தமது தொழில் தர்மம் பாதிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கக்கூடாது.
எனவே தற்போது நாட்டில் ஒரு ஆக்கபூர்வமான அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில் ஊடகவியலாளர்களும் தமது பணிகளை தடைகள் இன்றி முன்னெடுக்கும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான துன்பகரமான நிகழ்வுகள் இதன்பின்னர் இடம்பெறக்கூடாது. ஊடக சுதந்திரத்தில் இலங்கையானது உலகநாடுகள் வரிசையில் மிகவும் உயர்ந்தமட்டத்திற்கு வரவேண்டியது அவசியமாகும். அவ்வாறானதொரு சிறந்தவகையிலான ஊடக சுதந்திரத்தை நோக்கி எமது நாடு பயணிக்கவேண்டும். அதற்கு ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை உரிய முறையில் வழங்கவேண்டும் என்பதுடன் அதற் கேற்ற சூழலை உருவாக்குவதில் அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்
No comments
Post a Comment