Latest News

May 11, 2016

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்!
by admin - 0

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 10.05.2016 செவ்வாய்க்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், பிரித்தானிய தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் அனுசரணையுடனும், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், ஆளும் பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள், அதிர்வு இணையம் ஆகியவற்றின் இணை அனுசரணையுடனும் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது.

இன்று மாலை 6:15 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணிவரை நடைபெற்ற ஒன்றுகூடலிற்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் தலைமை தாங்கினார்.


இந் நிகழ்வில் ஆளும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் பரி (James Berry), போல் ஸ்கலி (Paul Scully), எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபன் ரிம்ஸ் (Stephen Timms), கரத் தொமஸ் (Gareth Thomas), வெஸ் ஸ்ரிறீற்ரிங்க் (Wes Streeting), ஜோன் மான் (John Mann) ஆகியோரும், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொம் பிறேக் (Tom Brake) ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்பொழுது முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த சாட்சியான கள மருத்துவர் உயற்சி அவர்கள், சிங்களப் படைகளால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களை தமிழில் எடுத்து விளக்க, அவற்றை அரசறிவியலாளர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் ஆளும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டனர். கள மருத்துவர் உயற்சி அவர்களால் எடுத்து விளக்கப்பட்ட விடயங்கள் தமக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக இவ்விடத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


இதனையடுத்து அனைவரையும் எழுந்து நின்று முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு ஆளாகிய தமிழ் மக்களுக்கு அகவணக்கம் செலுத்துமாறு நிகழ்வைத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் அழைப்பு விடுக்க அனைவராலும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் புதல்வர் பார்த்தீபன் அவர்கள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த பொழுது தனது தந்தை, தாய், சகோதரன், சகோதரி ஆகியோர் சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்ணீர் மல்க விபரித்த பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கிருந்த மக்களும் கண்ணீர் சிந்தியோடு, அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.


இதன்பொழுது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன், இவ்விடயம் பற்றி அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இருப்பது பற்றிக் குறிப்பிட்டார்.

இதே கருத்தை ஜொவான் ரையன் அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய ஏனைய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது அமர்வு நடைபெற்றது. இதற்கு மருத்துவர் சிவகாமி இராஜமனோகரன் அவர்கள் தலைமை தாங்கினர்.


இவ் இரண்டாவது அமர்வில் அரசறிவியலாளர் கலாநிதி மதுரிகா இராசரத்தினம், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கோபி சிவந்தன், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, ஆளும் பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் அர்ஜுனா சிவானந்தன் ஆகியோர் உரையாற்றினர்


தொடர்ந்து பார்வையாளர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டன.


ஒன்றுகூடலுக்கான நிறைவுரையை மருத்துவர் சிவகாமி இராஜமனோகரன் அவர்கள் ஆற்றினார்.

இந் நிகழ்வைக் கடும்போக்குவாதிகள் ஏற்பாடு செய்திருப்பதாக வதந்திகளைப் பரப்பி இதனை முடக்குவதற்கும், இதில் பங்கேற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுப்பதற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பு பகீரத பிரயத்தனங்களை எடுத்திருந்த பொழுதும் மிகவும் உணர்வுபூர்வமாகவும், வெற்றிகரமாகவும் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றிருந்தது.

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் முதற் தடவையாக நடைபெற்ற உணர்வுபூர்வமான தமிழர் நிகழ்வு இதுவென்று நிகழ்விற்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் குறிப்பிட்டமையும், இதனை ஏனைய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆமோதித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு இவ் ஒன்றுகூடலின் பெறுபேறாக இன்னும் இரண்டு வாரங்களில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் பிரித்தானியப் பிரதமருக்கான கேள்வி நேரத்தில் தமிழர்களின் உரிமைகள் பற்றிக் கேள்வியெழுப்புவதற்குத் தொழிற்கட்சிப் பிரமுகர்கள் இணங்கியமையும் சுட்டிக் காட்டத்தக்கதாகும்.



« PREV
NEXT »

No comments