Latest News

May 10, 2016

கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடாவடிகளுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பின்புலத்தில்.
by admin - 0

யாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி பாடசாலைக்குக் கல்வி கற்பிக்கச் சென்ற ஆசிரியைகள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு வராது சில நிமிடங்கள் பிந்திவந்துள்ளார்கள் என்பதற்காக அப்பாடசாலை அதிபரால் பாடசாலைக் கதவு பூட்டப்பட்டு இந்தப் பெண் ஆசிரியைகள் கதவுக்கு வெளியே பிந்தி வந்த மாணவர்களுடன் வீதியில் நீண்ட நேரமாக எப்போது கதவு திறக்கப்படும் எனக் காத்திருந்த சம்பவம் தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது. இது கிளிநொச்சி நகரப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சம்பவம். கிளிநொச்சியின் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு எத்தனையோ பல அநீதிகளும் அடாவடிகளும் இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்தும் அதிகாரிகளது ஒத்துழைப்புடனும் அரசியல்வாதிகளது செல்வாக்குடனுமே இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தின் தூரப் பிரதேசங்களிலிருந்து கிளிநொச்சிப் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் பஸ் பயணத்தின்போது பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதிலும் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் இன்னும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

கிளிநொச்சியின் கிராமங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாணத்து பெண் ஆசிரியைகள் இரவு 3.00 மணிக்கே எழுந்து உணவு சமைத்தல், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புதல், தமது வயதான பெற்றோருக்குரிய கடமை ஒழுங்குகளைச் செய்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு ஆவாவென்று வெளிக்கிட்டு பஸ் வண்டியில் ஓடிச் சென்று ஏறி மூன்று மணித்தியாலங்களுக்கு மேலக பஸ் வண்டியில் நின்றபடி பயணத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும்போது அங்கே இருக்கும் மனிதத் தன்மையற்றவர்கள் மனிதாபிமானமில்லாமல் பாடசாலையின் கதவைப் பூட்டி ஆசிரியர்களை கதவுக்கு வெளியே வீதியில் காக்க வைப்பார்கள் அல்லது அந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு முன்னே வைத்து அதிபர் கண்டபாட்டுக்கு ஏசுவார் இதை மாணவர்கள் பார்த்துச் சிரிப்பார்கள். சில அதிபர்கள் காலைப் பிரார்த்தனைக்கூட்டத்திற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் கூடியிருக்கும் போது யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்லும்போது ஆசிரியர்களைக் காட்டி எருமைக்கூட்டம் வருகுது பார் என்று கூறுவார்கள்.

இன்று பஸ் பிந்திவிட்டது அதுதான் கொஞ்ச நேரம் பிந்திவிட்டது சேர்... என்று கூறினால் பஸ் பிந்துறது பற்றி எனக்கு ஒன்றும் விளக்கம் தரவேண்டாம் விரும்பினால் நேரத்திற்கு வந்து வேலையைச் செய்யுங்கள் விருப்பமில்லையென்றால் வேலையை விட்டிட்டுப் போங்கோ உங்களுக்கு இதுக்காக அரசாங்கள் சம்பளம் தரவில்லை சம்பளம் என்றால் அந்த நேரத்திற்குப பாய்ந்து பாய்ந்து ஓடுவியள். ஆசிரியர் தொழில் என்பது அந்தக் காலத்தில கல்வித் தகமைக்கப்பால் சாதி தராதரம் பார்த்துத்தான் வழங்கப்படுவது வழக்கம் இப்பதான் கண்டநிண்டதுகள் எல்லாத்துக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி எங்கட உள்ள மதிப்பும் கெட்டுப்போய்விட்டது என்றும் சில அதிபர்கள் கூறியுள்ளார்களாம்.

இதில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான அரிசி, மீன்ரின் போன்ற உணவுப் பண்டங்களைத் திருடும் அதிபர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்காது விட்டால் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் விதங்கள் பலவகை.

இப்படியான மனிதாபிமானமற்ற அடாவடி அதிபர்களால் உண்மையாகவே கடமையுணர்வுடன் மனிதாபிமானத்துடன் சரியாகக் கடமையாற்றும் அதிபர்களுக்கும்தான் அவமானம். நல்ல அதிபர்களுக்கு கல்வி அதிகாரிகள் மத்தியில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை.

கல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆசிரியர்களை என்ன வகையில் பழிவாங்கலாம் என்ற அடிப்படையில்தான் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். பழிவாங்கும் வகையிலான இடமாற்றங்கள் என்பன தற்போதும் தொடர்கின்றன. ஆனால் குற்றவாளிகளாகவுள்ளவர்களின் குற்றங்களை விசாரிக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது வடமாகாண கல்வி அதிகாரிகளால். எடுத்துக்காட்டாக துணுக்காய் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெனிற்றனைப் பாதுகாத்து வரும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு.

கிளிநொச்சியில் சில அதிபர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் செயற்பட்டு அடாவடித்தனம் புரிவதற்கு கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அரசியல்வாதிகளின் பின்புலமும் காணப்படுவதாகப் பலராதும் சுட்டிக்காட்டப்பட்டு விசனம் தெரிவிக்கப்படுகின்றது. 
ஆசிரியர்கள் மீது இப்படியான அடாவடிகளும் அநீதிகளும் கேட்பார் எவருமின்றி தொடர்ந்தவண்ணமேயுள்ளது. 

« PREV
NEXT »

No comments