Latest News

May 18, 2016

முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! – ஈழத்து நிலவன்
by admin - 0

ஈழத்து நிலவன்
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது.

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு.

எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.
உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.

2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என சிங்கள அரசு தப்புக்கணக்கு போட்டது .

பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை. துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக சிங்கள அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின படுகொலையை நிகழ்த்திவிட்டு தெற்கில் சிங்கள அரசும் அதன் படைகளும் கோலாகலமாக வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது.

தமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர அனுதியில்லை. இது கொடிய இன ஒடுக்கு முறையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம்.
பாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.

அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள்.

முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.

உலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா? மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே!! உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.

அப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து? கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா? மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.

முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.
நாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயுத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா?
தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.
எல்லாவற்றிற்கும் மேலாக may 16, 17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா?
முள்ளிவாய்க்கால் ஜநா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது.

ஒன்றா இரண்டா மூன்று நாளில் 46.000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.

உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த சிங்கள படைவீர்ர்களையும் பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.

* சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்
* தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்
* தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த
வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்
இதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது.
எனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.

தமிழீழத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு எதிராக போராடுவதே தேசியம் “தற்காப்பு மக்கள் யுத்தம்” முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு…
தமிழினம் போராடும் தேவை மட்டும் வீச்சுக் கொண்டு வளர்ந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம். சர்வதேசம் எங்கும் தமிழர்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் . சர்வதிகாரம் நீண்டநாள் நின்று பிடிப்பதில்லை என்பது உலக வரலாறு.
ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.

* முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க வேண்டும்.

* முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர், முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி இல்லாமல் சாகக் கூடாது.

என்ன காரணத்திற்காக போராடினோமோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது. தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும்.

உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா?

உலகத்தமிழினமே விழித்திரு… வெறித்திரு… தெளிந்திரு.. ஈழவிடுதலையின் மிள்ச்சிக்காக நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.
– ஈழத்து நிலவன் –
« PREV
NEXT »

No comments