தமிழ் இன அழிப்பு நாள் மே18
ஓயாத ஒப்பாரிகள்
இது கௌரவர்களுக்கும்,
பாண்டவர்களுக்கும் நடந்த போரல்ல
மறவர்களுக்கும்,
மடையர்களுக்கும் நடந்த போரிது
பாரதப்போரில் பாண்டவர்களுக்கு
கிருஸ்ணன் உதவிசெய்தான்
ஈழப்போரில் நம் மறவர்களுக்கு
யார் உதவி செய்தார்?..
கும்பிட்ட தெய்வம் கூட
கண்கட்டி இருந்த நாள்
தலைகுனியா தமிழ் இனம்
தலைதெறித்து கிடந்த நாள்
முள்ளிவாய்க்கால் முளுமையாக
மூச்சிழந்த நாளது..
வீடுகள் எரிந்து சாம்பலாகக் கிடந்தன
வீதியெங்கும் இரத்தமும், சதையுமாய்
எங்கள் சொந்தங்களின் உடல்கள்
சிதறிக் கிடந்தன.
ஆயிரம் சிலுவைகளோடு
அணைந்து போனது - அந்த
உயிர்களின் கனவும், வாழ்வும்.
இறந்து கிடந்த
தாயின் முலைபிடித்து
குழந்தை பால் குடித்ததும்...
இளம் குமரிகளின்
மார்பைக் கிழித்து
பகைவன் பசிதீர்த்ததும்...
பகை என்ற பெயரில்
பச்சிழம் பாலகனை சித்திரவதை செய்து
கொலை செய்ததும்...
இங்குதான் என்பது உலகறியும்
ஆனால்
அங்கு யாரும் சாட்சிகள் இல்லை
அவர்களைத்தவிர...
அயல் நாடென்று சொல்லும்
அத்தனை நாடுகளும்
பகைவர் கையில் ஆயுதங்களை கொடுத்து
வேடிக்கை பார்த்தார்களே தவிர
நம் தமிழ் இன அழிப்பை
நிறுத்தயாரும் பார்க்கவில்லை!
நினைத்தும் யாரும் பார்க்கவில்லை!..
கால்களை இழந்தும்,
கைகளை இழந்தும்,
கட்டிய மனைவி கணவனை இழந்தும்,
பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும்,
பெற்றோர்களை இழந்த பிள்ளைகளும்,
நமக்காக போராடிய போராளிகளும்
இன்னமும் குற்றவாளிகளாக
கூண்டுக்குள்தான் இருக்கிறார்கள்
ஐ.நா. என்ன செய்தது - அந்த
ஆண்டவந்தான் என்ன செய்தான்
எம் விதி இதுவென்றால்...
திரைப்பட பாடலாசிரியர் - கவி.அகிலன் (நெடுந்தீவு)
No comments
Post a Comment