புதிதாக முளைக்கின்ற புலிகளும், உண்மையான புலிகளின் நிலையும் எனும் போது புலிகளின் போராட்டம், தார்மீகம் அத்தனையும் வீண்டிக்கப்பட்டு நாளை தடங்கள் அற்ற விம்பங்கள் மட்டுமே மிஞ்சப்போவது உறுதி. காலம் காலமாக எமை அடிமையாக்கி, எமது உதிரம் உறிஞ்சி ஆளத்துடிக்கும் சிங்களத்தின் வரலாற்றை திருப்பி போட்டது புலிகளின் போராட்ட வரலாறு. ஈகங்களை நெஞ்சில் சுமந்து நெருப்பினில் நடந்தவர்கள் புலிகள். ஈழத்தமிழர் துடிதுடித்து மடிந்த போது வரும் இடர் தவிர்த்து அதை நேர் பாதையாக்கி எமை காத்தவர்கள் புலிகள் அவர்கள் சுயநலம் அங்கே காணவில்லை. எமது மண், எமது உரிமை, எமது மக்கள் என தங்கள் இளமை தொலைத்து, வியர்வை உதிரமாக காட்டிலும், வெயிலிலும், மழையிலும் இடர் கொண்டவர்கள் விடுதலைப்புலிகள். நிதானமான, நேர்மையான தலைமையை கொண்ட தமிழர் சேனைகள் எம்மவர்கள். அன்று சிறு இளைஞர் கூட்டமாக செயற்பட்டு, ஒரு மிகப்பெரிய படையாய் உருவெடுக்க தேசியத்தலைவர் அவர்களுடன் செயற்பட்ட இளைஞர்கள் சுயநலம் கொண்டிருந்தால் இன்று எம் இனத்தின் அடையாளமே எஞ்சியிருக்காது எம் ஈழ தேசத்தில்.
இவை அவ்வாறு இருக்க இன்று பூனையெல்லாம் புலியாக அலைகிறது உலகில். ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாக முடியாது என்பது போல எத்தனை பேர் என்னதான் நாடகம் போட்டாலும் புலியாக முடியாது. புலம், தமிழகம் என அனைத்து பாகங்களிலும் புலிக்கொடிகள் பறக்கிறது அங்கே உண்மையான புலிகள் இல்லை. உண்மையான போராட்ட வீரர்கள் ஈழத்தில் வறுமையில் சாக வெளியே இருக்கும் போராளிகள் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவியும் செய்து விட்டு தங்கள் பெயர் கூட காட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருக்கின்றனர். காரணம் இன்றை சூழல் அப்படி. தான் புலியென்றும், தாங்கள் தான் பிரதிநிதிகள் என்றும் மேடையில் கோசமிட்டுவிட்டு மறு புறத்தில் காட்டிக்கொடுப்புகளையும், துரோகங்களையும் செய்கின்றனர் நவீன புலிகள் இதுவே இன்றைய நிலை. ஒரு நாள் உணவு உண்ண கூட பணமின்றி வறுமையில் வாழும் போராளிகள் பட்டியல் தினமும் நீண்டு கொண்டுதான் செல்கிறது. வருங்காலத்தில் பட்டியலில் பெயர் இருக்காது மரணச்செய்திகளை தவிர. அவர்களை நினைத்து பரிதாப படுவதா அல்லது இங்கே உலாவும் வேசமிட்ட புலிகளை நினைத்து கோப படுவதா என புரிவதில்லை சில நேரங்களில்.
மீண்டும் புலிகள் வரமாட்டார்கள் என்ற துணிவா, அல்லது கூலிப்படைகளின் புலனாய்வு நடவடிக்கையா என் பார்த்தால் அதுவும் உண்மை போலவே தோன்றுகிறது. வழமையை விட தற்பொழுது பார்த்தால் பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, ஜெர்மன் என புலம்பெயர்ந்த நாடுகளின் போராட்டங்கள் குறைந்து மேடை நிகழ்வுகள் தான் நடக்கிறது. வெளியே வரமுடியாத போலியான போராளிகள் அவர்கள் எப்படி வீதியில் இறங்கி போராடுவார்கள். காரணம் அங்கே மௌனமாக இருக்கும் புலிகள் வாய் திறந்தால் இவர்கள் நிலை அடையாளம் அற்றதாகி விடும் என்பதே.
மரணித்த புலிவீரன் மறைந்து விடவில்லை.
மாவீரனாக எங்கள் மனங்களில்
வீரத்தை நிதம்
விதைத்து கொண்டிருக்கிறான்
மௌனிக்கும்
புலியும் அடங்கவில்லை
அவன் மனதிலும்
எரிமலைகள்
கொதிக்கிறது
மாவீரன் வருவான்
புலிவீரன் ஆர்பரிப்பான்
பகை மட்டுமல்ல
துரோகமும் தகர்ப்பான்
காத்திரு….
நன்றி
பவித்ரா நந்தகுமார்
No comments
Post a Comment