Latest News

May 01, 2016

விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகள் – வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு? – பூங்குழலி
by admin - 0

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமிழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இராணும் அடர்த்தியாக நிறுத்தப்பட்டுள்ளது. ‘எகனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி’ வார ஏடு அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையின் படி, ஒரு இலட்சத்து எண்பது ஆயிரம் இராணுவத்தினர் வடக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது. இதன் மூலமாக தமிழர்கள் மனதில் ஒரு நிரந்தர அச்ச உணர்வை ஏற்படுத்த இலங்கை அரசு முயல்கிறது. தமிழர்கள் மனதில் தோல்வி மனப்பான்மையை உருவாக்கவும் அதிலும் முக்கியமாக அதை நிலைப்பெறச் செய்யவும் தன்னாலான அனைத்தையும் இலங்கை அரசு செய்து வருகிறது. ‘நாம் தோற்று விட்டோம். இனி ஒரு போதும் எழவே முடியாது’ என்பதை ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். தோல்வியை விட தோல்வி மனப்பான்மை மிகக் கொடியது. அத்தகைய தோல்வி மனப்பான்மையை தமிழர்கள் மனதில் உருவாக்க முதலாவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் தமிழ் மக்கள் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்று இலங்கை கருதுகிறது. பிரபாகரன் உயிருடன் இல்லை என்று பல வகையிலும் வலியுறுத்தி வந்த இலங்கை அரசு, தற்போது அடுத்த நிலையில், பிரபாகரன் என்ற பிம்பத்தை சிதைப்பதற்கான வேலைகளை நுட்பமாக செய்யத் தொடங்கியுள்ளது. வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டை தரை மட்டமாக ஆக்கியது என்பது இந்த செயல் திட்டத்தின் ஒரு சிறு பகுதியே ஆகும்.

போராளிகள் மக்களிலிருந்து வந்தவர்கள். அதனால் மக்கள் ஒரு போதும் போராளிகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, போராளிகளை கரிசனத்துடன் நோக்குவதான போர்வையில் பிரபாகரன் எனும் பிம்பத்தைத் தனிமைப்படுத்தி உடைக்க நினைக்கிறது. தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த உளவியல் போருக்கு, இலங்கை அரசு கையில் கிடைத்திருக்கும் ஆயுதங்களே ஊடகங்கள். ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது வாய் மூடி வேடிக்கை பார்த்த உலகம் இன்றும் இந்த உளவியல் போரை அறிந்தும் அறியாதது போல வேடிக்கை பார்த்து நிற்கிறது. அன்று முற்போக்கு முகமூடி அணிந்து ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக’ என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசோடு இணைந்து நின்றவர்கள் இன்று வரை இலங்கை அரசின் கருவியாக இந்த உளவியல் போருக்கும் உரம் சேர்க்கின்றனர்.

அதில் முதன்மையான இடத்தில் நிற்கிறது தமிழகத்தில் செயற்பட்டு வரும் காலச்சுவடு பதிப்பகம். விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில், மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொண்டு தொடர்ந்தும் அவதூறுகளை வெளியிட்டு வருகிறது. இப்படியான அவதூறுகளுக்கு நான் உட்பட, பலரும் எதிர்வினையாற்றிய போதும் அவற்றை அலட்சியம் செய்து, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் தனது அவதூறுகளைத் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி இலங்கை சிறையில் இருப்பதாக செய்தி வெளிவந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ‘நலமா தமிழினி’ என்று பண்பற்ற ஒரு தலைப்பில், ஒரு கட்டுரை, இந்த காலச்சுவடு பதிப்பகத்தின் மாத இதழான ‘காலச்சுவடு இதழில்’ வெளியானது. “அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையே கூட பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்” என்று தமிழினியை முன் வைத்து – போராளிகளை அன்பென்றால் என்னவென்று அறியாத கொடூரமானவர்களாக சித்தரிக்கும் முனைப்போடு தொடங்கியது அக்கட்டுரை. 2009ஆம் ஆண்டு நடந்த தமிழினப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளையே காரணமாக்கியதோடு, போராளிகளையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் வேறுவேறாகக் காட்டி, பிரபாகரன் மீது அத்தனைப் பழிகளையும் சுமத்தித் தனிமைப்படுத்த பெரிதும் முயற்சி செய்த கட்டுரை அது. போராளிகளின் அன்றைய நிலை குறித்து அக்கறையோடு பேசுவதான தொனியில் தலைவர் பிரபாகரனை அவர்களிடமிருந்து வேறுபடுத்தி குற்றவாளியாக்க முயன்றது. “இந்தப் போராட்டம் அழிவை மட்டுமே தந்தது. அது வீணானது. 30 ஆண்டுகாலம் தமிழர்களின் வாழ்வை அது சிதைத்துவிட்டது. இனி எதுவும் நடக்கப் போவதில்லை“ என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்வதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட உளவியல் போரின் கருவியாக ‘திறம்பட’ எழுதப்பட்டிருந்தது அக்கட்டுரை.

அன்று அக்கட்டுரையை எதிர்த்து நான் பதில் எழுதினேன். “அவதூறுகளால் அடங்காது விடுதலை நெருப்பு” என்று தலைப்பிடப்பட்ட அந்த பதில் கட்டுரையை, காலச்சுவடு வெளியிட மறுத்ததால், அது “கீற்று“ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. (http://keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/578-2009-10-01-14-48-48)

இன்று அதே காலச்சுவடு பதிப்பகம் தமிழினி எழுதியதாக ‘ஒரு கூர் வாளின் நிழலில்‘ என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளது. நம்ப முடியாத ஒற்றுமை என்னவென்றால், அன்று தமிழினியை நோக்கி எழுதுவதாக எழுதப்பட்ட அத்தனை அவதூறுகளும் இன்று தமிழினியே எழுதியதாக வெளி வந்திருப்பதுதான். அக்கட்டுரை குறித்து நான் குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களையும் இந்நூல் தாங்கி நிற்கிறது – அதுவும் தமிழினியின் பெயரால்!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல் வேறு செயல்பாடுகள் குறித்தும், அதன் உள்ளக கட்டமைப்புக் குறித்தும் அதன் உறுப்பினர் ஒருவர் பெயரால் ஒரு நூல் வெளிவந்துள்ளது. தமிழினி எழுதியதாகச் சொல்லப்படும் இந்நூலின் முற்பகுதியில் 1980கள் தொடங்கி 2008 வரை, இயக்கம் வளர்ந்த விதம், போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகங்களும், மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான நேசமிகு உறவும் பல நிகழ்வுகளினூடாக நுட்பமாக விவரிக்கப்படும் அதே வேளையில் துளித் துளியாக நஞ்சு கலக்கப்பட்டு நூலின் பிற்பகுதி முற்றிலும் நஞ்சாக மாறி நிற்கிறது. இந்த முரணே இந்நூல் தமிழினி எழுதியது தானா? அல்லது எழுத வைக்கப்பட்டாரா? அல்லது அவர் பெயரால் எழுதப்பட்டுள்ளதா? என்ற பல கேள்விகளை எழுப்புகிறது.

நூலின் தொடக்கமும் முதல் சில அத்தியாயங்களும் பல மகிழ்வானதும் நெகிழ்வானதும் ஆன நினைவுகளையும்,  அதே நேரத்தில் ஆழமான ஒரு வேதனையையும் ஒரு சேர தோற்றுவிப்பதாக இருந்தன. பன்னெடுங்காலமாக சிங்களர்களால் கொடூரமான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இறுதியாக இராணுவ ரீதியாகவும் ஒடுக்குமுறைகளை சந்தித்த ஓர் இனம், தன்மானத்துடன் தலை நிமிர்ந்து, இது எம் மண், இது எங்களுக்கே சொந்தம் என்று துணிவுடன் உரிமை கொண்டாடி வாழ்ந்த காலத்தை குறித்தானவை அந்நினைவுகளும் உணர்வும்.

எண்பதுகளின் முற்பகுதியில் போராளி இயக்கங்கள் மாணவர்களிடையே போராட்டத்திற்கான தேவையை எடுத்துரைப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தன. பாடசாலைகளுக்கேச் சென்று மாணவர்களிடம் விவாதித்தன. ஆனால் அப்போதும் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே அவ்விவாதங்கள் மற்றும் கூட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய வயது மாணவர்கள் அவ்விடத்திலேயே இருக்காதவாறு துரத்தப்பட்டுள்ளனர் என்றும், இயக்கங்களில் இணைந்த போராளிகள் இளவயதினரைப் பார்த்து “நீங்கள் படிப்பதற்காகதான் நாங்கள் போராட போனோம். அதனால் நன்றாக படியுங்கோ” என்று கூறுவதாகவும் எழுதப்பட்டிருக்கும் செய்தியானது எவ்வாறு தொடக்க காலம் முதல் இயக்கம் போராட்டத்தில் நேரடியாக குழந்தைகள் பங்கு பெறுவதற்கு எதிராகவே இருந்துள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

மேலும் இயக்கத்தில் நேரடியாக இணைய இயலாத சூழ்நிலையில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் மாணவர் பேரவை மூலமாக அரசியல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களிடம் உலர் உணவு சேகரித்தல், காயப்பட்ட போராளிகளை பராமரித்தல், பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத உயிரிழந்த போராளிகளின் உடல்களுக்கு மலர் மாலை கட்டுதல் எனப் பலவகையான வேலைகள் மாணவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. தனது பாடசாலை மாணவர் இயக்கத்தின் தலைவியாகவும் பாண்ட் வாத்தியக் குழுவின் தலைவியாகவும் இவ்வேலைகளிலும், எழுச்சிக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளிலும், உயிரிழந்த போராளிகளின் வீரவணக்க நிகழ்வுகளில் பாண்ட் அணி மூலம் மரியாதை செலுத்துவதிலும் தமிழினி தீவிரமாக இயங்கியிருக்கிறார். மயானங்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில் தமிழினி மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்றதாக பதிவு செய்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினால் அடிக்கடி நடந்த குண்டு வீச்சுகள் மற்றும் பல்வேறு விதமான தாக்குதல்கள் காரணமாக மாணவர்களின் கல்வி நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் மேலும் அதிகமான உயர் கல்வி மாணவர்கள் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் காலடி எடுத்து வைத்த போது மக்கள் அவர்களை பெரும் எதிர்பார்ப்புடன் வரவேற்றுள்ளனர். ஆனால் தெருவில் செல்லும் இளம் பெண்களை வம்பிழுப்பது, அதனால் இளம் பெண்களை வீட்டில் வைத்திருப்பதற்கே மக்கள் பயந்த நிலை, பாடசாலைக்குள் புகுந்து போராளிகளை தேடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் கண் முன்பே அடித்ததும் அவமானப்படுத்தியதுமான செயல்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் பெரும் மன வேதனையை எழுப்பின என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே மக்களின் ஒற்றை நம்பிக்கையாக எவ்வாறு மேல் எழுந்தது என்பதும் பல நிகழ்வுகளினூடாக விவரிக்கப்பட்டுள்ளன.

“இயக்கம் என்றால் கஷ்டம்.. கஷ்டம் என்றால் இயக்கம்” என்ற முன்னுரையுடன் வரவேற்கப்படும் புதிய போராளிகள், பல கடினமான பயிற்சிகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பயிற்சி என்பது ஆயுத பயிற்சி மட்டுமல்ல. மாணவர் தலைவியாக அரசியல் பணிகளில் பரிச்சயம் உள்ள தமிழினி அரசியல் பிரிவுக்குத் தெரிவு செய்யப்படுகிறார். அரசியல் பயிற்சி என்பதும் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ”காலை 4 மணிக்கு எழுவதும் இரவு பத்து மணிக்கு படுக்கச் செல்வதும், நள்ளிரவு காவல் பணிகளும், சைக்கிளில் டபுள் ஏற்றி பல மைல்கள் ஓட்டுவதும், திரட்டி வந்தத் தகவல்களை பல மணி நேரங்கள் தொகுத்து எழுதுவதுமாக” தமிழினியின் நாள் இறுக்கமான வேலைத் திட்டத்துடன் இருந்துள்ளது. இதைத் தவிரவும் அரசியல் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் கூட்டங்களில் பேச்சாளராகவும் தமிழினி கடமையாற்றியிருக்கிறார்.

அரசியல் பிரிவு என்பது எவ்வாறு மக்களின் நலன்களை பல்வேறு விதத்தில் முன்னெடுக்கும் ஓர் அமைப்பாக இருந்தது என்பதை தன் பணிக்காலம் நெடுக நடந்த பல நிகழ்வுகளின் ஊடாக தமிழினி பதிவு செய்கிறார்.

கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தும்புத் தொழிற்சாலை, அதன் நிர்வாகியாக இருந்த காலத்தில் கிராமத்தில் உள்ள மகளிரை அமைப்பாக்கி அவர்கள் மூலமாக குழந்தைகளுக்கான ஒரு முன் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை உருவாக்கியது என அவரது அனுபவங்கள் நீள்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கம் பல விவசாயப் பண்ணைகளை உருவாக்கி நடத்தி வந்தது. அதில் ஒன்று புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் பாம் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு விவசாயப் பண்ணை. இதன் நிர்வாகியாகவும் தமிழினி செயலாற்றியுள்ளார். இந்தப் பண்ணை சமூகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை தடுத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பண்ணையாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவினரே சமூகக் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கி வந்தனர். தண்டனை என்பது 3 மாதங்கள், 6 மாதங்கள் என இந்த விவசாயப் பண்ணையில் பணி புரிவதாகும். நன்னடத்தைப் பெண்கள் பண்ணை என்று அழைக்கப்பட்ட இப்பண்ணையில் விளையும் பொருட்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இப்பண்ணையின் நிர்வாத்தையும், அதில் உள்ள பெண்களின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, அப்பெண்களுக்கு ”நிர்ணயிக்கப்பட்டிருந்த தண்டனைக் காலங்கள் முடிந்ததும் வாழ்வாதாரமாக 5000 ரூபாய் பணமும், அரிசி, மா, சீனி, பருப்பு என எல்லாமுமாக 25 கிலோ பெறுமதியுள்ள உணவுப் பொருட்களும் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்”.

அது மட்டுமல்லாது, ”அப்பெண்கள் நன்னடத்தைப் பண்ணையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுடைய குடும்பங்களை மாதமொருமுறை சென்று கண்காணித்து மகளிர் முன்னணிப் பொறுப்பாளருக்கு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த்க குடும்பத்தின் தேவைகளை, குறிப்பாக குழந்தைகளு்கான தேவைகளை அந்தப் பிரதேசப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்து உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அதே வேளை அந்தப் பெண்கள் விடுதலையாகி வீடு சென்ற பின்னரும் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்ற நிலைமைகளை ஆராய்ந்து தேவைகளை நிறைவு செய்யவேண்டும்”.

இந்த விவரணையானது, இயக்கம் எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு நிர்வாகத்தை செயற்படுத்தி வந்தது என்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது.  இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவரது குடும்பங்கள் அதன் பின் சிதைந்து போன பல கதைகளை நாம் அறிவோம். ஆனால் ஈழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம், தண்டனை என்பதை மறுவாழ்விற்கான படிக்கல்லாகவே செயல் படுத்தியிருப்பதையும், தண்டனை காலத்தில் குடும்பத்தினரின் நலனையும் பேணி இருப்பதையும் அறியும் போது இத்தகு மனித நேயம் மிகுந்த அரசு நமக்கு இல்லையே என்பதோடு, அப்படியான ஒரு நிர்வாகத்தையும் இவ்வுலகம் நீடிக்க விடவில்லை என்ற ஆதங்கம் எழும்புவதை தவிர்க்க முடியவில்லை.

மக்களிடம் கரிசனத்தோடு நடந்து கொண்ட அதே வேளையில், இயக்கத்திற்குள் எத்தகு குற்றங்களையும் கடினமாகவே அணுகியது இயக்கம். பொருளாதார மற்றும் பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என்ற செய்தியானது, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் எவ்வாறு அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாகவே இயக்கம் இருந்ததை உணர முடிகிறது. அது மட்டுமல்லாது, “இதனால் இயக்கம் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பானதொரு அமைப்பாக இருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் தொடர்புகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்த அதே வேளையில், இயக்கத்திற்குள் காதல் திருமணங்களை இயக்கம் பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது.

சுதந்திரப் பறவைகள் இதழின் பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்த போது, “பெண்களின் பிரச்னைகளைப் பெண்களே வெளிக்கொணர வேண்டும். பெண்களை விட ஆண்கள் அதிகம் சிறப்பாகப் பெண் விடுதலை பற்றிப் பேசுவார்கள். ஏன், நான் கூட உங்களை விடவும் நன்றாகப் பெண்ணியம் பேசுவேன். ஆனால் உங்களின் பிரச்சனைகளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்த ஆண்களாலும் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது. பெண்களின் பிரச்சனைளைப் பெண்கள்தான் பேச வேண்டும், எழுத வேண்டும். அப்போதுதான் அது உண்மையானதாக இருக்கும். ஆகவே சுதந்திரப் பறவையில் பெண்கள் அதிக அளவில் எழுத வேண்டும். எழுத்தாற்றல் உள்ள பெண் போராளிகளை இனங்கொண்டு எழுத்துப் பயிற்சிகள் கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்” என்று தன்னிடம் குறிப்பிட்டதாக தமிழினி எழுதுகிறார்.

ஆயுத பயிற்சி காலம் என்பது, கடினமான வேலைகளுக்குப் பழகியிராத நிலையில் வீட்டிலிருந்து வந்திருந்த இளம் பெண்களுக்கு எத்தனை கடினமானதாக இருந்தது என்பதையும், பயிற்சி நேரத்தில் கடுமையாக நடந்து கொள்ளும் பயிற்சியாளர்கள், மற்ற நேரங்களில் கரிசனத்தோடு அவர்களின் நலன்களை பேணியுள்ளனர். அடிப்படை பயிற்சி கூட எடுத்திராத நிலையில் தனது பொறுப்பில் அரசியல் பிரிவில் இணைக்கப்பட்ட 20 புதிய போராளிகளுடன் போரின் பிடியில் அகப்பட்டுக் கொள்கிறார் தமிழினி. “இவர்களது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கான தண்டனையை நான் அனுபவிக்க நேரிடும்” என்று குறிப்பின் மூலம் புதிய போராளிகளின் நலனின் இயக்கம் கொண்டிருந்த பொறுப்புணர்ச்சியுடன் கூட அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

களத்தில் நின்ற போராளிகள் பல நேரங்களில் உணவுக்கும் உடுத்தும் துணிக்கும் துன்பப்பட்டு நின்றுள்ளனர். யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பிறகு இயக்கத்திற்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. “போராளிகளுக்கு போதுமான உணவும் மருந்து அளிப்பதற்கு கூட முடியவில்லை” என்று நிதி பொறுப்பாளர் தமிழேந்தி ண்ணீர் விட்டு அழுது கொண்டே பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கூறியதாக தமிழினி குறிப்பிடுகிறார். கஞ்சிக் காலம் என்று குறிக்கப்படும் அக்காலத்தில் “சொற்பமான அரிசியும் நிறைய தண்ணீரும் உப்பும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சி”யே போராளிகளுக்கு உணவாக இருந்தது. களத்தில் நின்ற ஒரு பெண் போராளியை தான் சந்திக்க நேர்ந்த போது பின் பக்கம் நைந்து போன தனது கால்சட்டையை காட்டி தன்னை அடுத்த முறை சந்திக்க வரும் போது உடுப்பு ஒன்று எடுத்து வருமாறு அவர் கூறியதாக தமிழினி எழுதுகிறார்.

இத்தகு கடினமாக சூழ்நிலைகளிலும் போராளிகள் இயக்கத்தை விட்டுவிட்டுச் செல்லாமல், தனது இலட்சிய கனவை நோக்கிய பயணத்தில் முனைப்புடன் இருந்துள்ளனர். இத்தகு இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும் மட்டுமே இயக்கத்தின் பெரும் சொத்தாக இருந்துள்ளது.

இவ்வாறு தமிழினியின் நேரடியான அனுபவங்களின் ஊடாக 1980-கள் தொடங்கி ஈழ வரலாற்றின் நெருக்கமான காட்சிகள் பல்வேறு நிகழ்வுகள் மூலம் விவரிக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் நேர்மறையாக விவரிக்கப்பட்டதன் இறுதியிலும், ஏதோ அது தவறானது என்பது போன்ற ஒரு எதிர்க் கருத்தும் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல் நெடுகவும் இரண்டு விதமான விவரணைகள் உள்ளன. ஒன்று நடந்த நிகழ்வுகளின் விவரணைகள். மற்றொன்று நடந்த நிகழ்வினைப் பற்றிய கருத்து. கருத்துகளை ஒதுக்கி விட்டு நடந்த நிகழ்வுகளின் விவரணைகளை மட்டும் படித்தால் ஒரு விதமான பார்வையும், அக்கருத்துகளைப் படித்தால் முற்றிலும் நேர் எதிரான பார்வையும் ஏற்படும்படியாக உள்ளது. ஆக, நூலின் முற்பகுதியில் பல்வேறு நிகழ்வுகளை நேர்மறையாக விவரித்ததன் இறுதியிலும், ஏதோ அது தவறானது என்பது போன்று நெருடல்களை ஏற்படுத்திய எதிர்க் கருத்துகள் திட்டமிட்டு, மிக நுட்பமாக, போகிற போக்கில் நுழைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எடுத்துக்காட்டாக, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்திடம் பிடிபட்ட பின்னர் இயக்கத்திற்கு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும், போராளிகளின் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை கூட சரிவர சந்திக்க இயலாமல் இயக்கம் கஷ்டப்பட்டதையும் இந்நூல் விவரிக்கிறது. அதை சீர் செய்யும் நோக்கத்துடன் விவசாயப்பண்ணைகளை அமைத்ததுடன், மக்களிடம் வரி விதிப்பையும் இயக்கம் மேற்கொண்டது என்றும் எழுதிவிட்டு, இந்த வரி விதிப்புதான் மக்களுக்கு இயக்கத்திடம் வெறுப்பேற்பட முக்கிய காரணமாக இருந்தது என்பது ஒரு குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது.

தனிப்பட்ட இயக்கம் என்ற அளவிற்கு மேலாக தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் நிர்வாகத்தையும் கவனிக்கும் நிலையில் மக்களின் பங்காக வரி வசூலித்தது தவறானது என்று தமிழினி கருதியிருந்தால் அதனை தலைமையிடமே எடுத்துச் சொல்லும் அளவிற்கு அவர் இயக்கத்தில் உயர் பொறுப்பிற்கு வந்த பின்னர் அதை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று அதை வெளிப்படுத்தியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

முரண்கள் இத்துடன் நிற்கவில்லை.

ஏ9 பாதை திறப்போடு தொடங்கும் நூல், அந்த நிகழ்வானது எந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விரிவாக விவரிக்கிறது. ”இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள கண்டி நகரத்தையும் வடக்கு முனையாகிய யாழ்ப்பாண நகரத்தையும் இணைக்கும் இந்த ஏ9 வீதி இலங்கையின் பல நகரங்களை ஊடறுத்துச் செல்கின்றது. 1984 தொடக்கம் 2006 வரை பல  தடவைகள் இந்த வீதி, மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு மூடப்பட்டு வந்திருந்தது. இந்தப் பின்னணியில் 2002 பிப்ரவரி மாதம், இவ்வீதியின் இருபது சதவீதமான பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் ஏ9 நெடுஞ்சாலை திறப்பு நிகழ்வானது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது” என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இறுதியில் “விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தின் உச்சத்தில் நின்றுதான் இதனை சாதிக்க முடிந்தது” என்பதை நூல் சுட்டிக்காட்டுகிறது. அடுத்த வரியே “அந்த இராணுவ பலத்தை அரசியல் மற்றும் இராஜதந்திர பலமாக மாற்றியமைப்பதில் புலிகள் அமைப்பு தோல்வியடைந்து விட்டது“ என்று குறிப்பிடுகிறது. இதை ஒரு நேர்மையான விமர்சனமாகவே கூட எடுத்துக் கொள்ளலாம்.

போர் நடைபெறும் சூழலில் சமாதானத்திற்கான வாசல் என்பது இராணுவ பலத்தின் வசமே உள்ளது என்பது அரசியலின் ஆரம்பப் பாடம். உலக அரசியல், அரசுகளுக்கு மட்டுமே சார்பானது. அவ்வாறு அரசியல் ரீதியாக பலமான இடத்தில் இருக்கும் இலங்கை அரசை சமாதானத்தை நோக்கி இழுத்து வர வேண்டுமானால், எதிர்த் தரப்பினர் ஒரு பலமான இராணுவ வெற்றியைப் பெற்றாக வேண்டும். அந்த இராணுவ வெற்றியை விடுதலைப் புலிகள் பெற்றதனாலேயே ஏ9 பாதையினூடாக சமாதானத்தின் வாசல் திறக்கப்பட்டது என்பதை இந்நூல் தெளிவாகவே கூறுகிறது.

ஆனால் நூலின் பிற்பகுதிகளில், போர் வெற்றிகளுக்கு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அதீத முக்கியத்துவம் கொடுத்தார் என்றும் ஓரிடத்தில் குறிப்பாக அவர் சண்டை வெறி மிக்கவராக இருந்தார் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்க முயலும் வகையில் எதிர் மறையாக எழுதப்பட்டுள்ளது. இராணுவ பலத்தின் மீதுதான் அரசியல் மற்றும் இராஜதந்திர பலத்தை கட்டி எழுப்ப முடியும் என்று முன் அத்தியாயங்களில் எழுதிவிட்டு, அத்தகைய இராணுவ பலத்தை உறுதிப்படுத்த இயக்கத்தின் தலைவர் எடுத்த முயற்சிகளை எதிர்மறையாகக் குறிப்பிடுவது என்பது தன்னளவில் முரண்பட்டு நிற்கிறது.

இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் என்று அறியப்பட்ட மாத்தையா, கருணா போன்றோரை மிகுந்த மரியாதையுடன் மாத்தையா அண்ணர், கருணா அம்மான் என்று விளிக்கும் நூல் அதற்கு நேர் எதிராக, நடேசன், தமிழ்ச்செல்வன் போன்றவர்களை வெறுமனே பெயரிட்டு விளிப்பதும், உச்சமாக, “விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்”, ”திரு. பிரபாகரன்”, ”பிரபாகரன்” என்று எழுதப்பட்டிருப்பதும் விசித்திரமாக துருத்திக்கொண்டு நிற்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மே 2009இல் தோல்வியுற்றது என்றும் அதற்கு இயக்கம் எடுத்த முடிவுகளே காரணம் என்றும் எழுதியிருப்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் இலங்கை இராணுவத்தின் அத்தனை போர்க்குற்றங்களுக்கும் விடுதலைப் புலிகள் தான் காரணம் என்று கூறியிருப்பதைதான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இறுதி வரை களத்தில் நின்று போராடியவர் தமிழினி. இறுதி வரை போர்க் களத்தில் நின்ற போராளிகள், மக்கள் என ஒவ்வொருவரது அனுபவமுமே இன்று ஈழத் தமிழரின் விடிவுக்கான அடித்தளம். 2009-10-ஆம் ஆண்டுகளில் அவ்வாறு இறுதி வரை களத்தில் நின்று உயிர்பிழைத்த பலரது வாக்குமூலங்களைத் திரட்டி அய். நா. வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவள் என்ற முறையில் ஒவ்வொருவரின் அனுபவமும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறிவேன். அப்படி பலரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே அய். நா. வின் அறிக்கைகள் பலவும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உறுதி செய்துள்ளன.  டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை தொடங்கி, அய். நா. வின் வல்லுநர் குழு அறிக்கை, பிரான்சிஸ் ஹாரிசன் எழுதிய “Still Counting the Death’, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை, சானல் 4 வெளியிட்ட ‘Killing Fields of Sri Lanka’ – தொடர் ஆவணப் படங்கள் போன்ற அனைத்தும் போரின் போதும், போருக்குப் பின் கைது செய்யப்பட்ட, சரணடைந்த மற்றும் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலும் இலங்கை இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை பட்டியல் போட்டு காட்டியுள்ளன. அதன் அடிப்படையிலேயே இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான உத்தரவினை அய். நா. மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விசாரணையின் கலவையான இந்த விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஏறத்தாழ 18 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர், மே 2009 வரை போர்க்களத்தில் நின்று செயலாற்றியவர், இராணுவத்திடம் சரணடைந்த பல்லாயிரம் போராளிகளில் ஒருவர், அதிலும் அனைவரும் அடையாளம் காணத்தக்க முதல் நிலை தளபதிகளில் ஒருவர், ஏறத்ததாழ மூன்று ஆண்டுகள் இலங்கை அரசின் சிறையிலும் புனர்வாழ்வு நிலையத்திலும் இருந்த ஒருவர் வெளியே வந்து தன்னுடைய அனுபவங்களை நூலாக எழுதுகிறார் என்றால் அது எனக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிலும் தமிழினி தவிர சரணடைந்த பிற முதல் நிலை பொறுப்பாளர்கள் பலருடைய கதியும் என்ன ஆயிற்று என்பதே தெரியாத நிலையில், தமிழினி விடுதலையாகி வெளிவந்தது தமிழ் மக்கள் மத்தியில் எத்தகையதொரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது என்பது அவரது இறுதி நிகழ்விற்கு திரண்ட மக்கள் கூட்டமே சான்று.

வே. பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை போன்று அரசியல் ரீதியாக புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களாக இருக்கட்டும், பேபி சுப்ரமணியம் (எ) இளங்குமரன் போன்ற மூத்த உறுப்பினர்களாக இருக்கட்டும், இவர்களின் நிலை என்ன என்பதை அறிய அய். நா. உட்பட பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் முயன்ற போதும் அவர்களைப் பற்றிய குறைந்த பட்ச தகவல்களைத் தரவும் இலங்கை அரசு மறுத்துவிட்டது. அவர்கள் தங்களிடம் இல்லை என்று அது மறுக்கவும் இல்லை. இவர்கள் உட்பட ஏறத்தாழ 11 ஆயிரம் போராளிகள் இலங்கை அரசின் பிடியில் இருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களை சட்ட ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களின் இருப்பிடத்தை அறிவிக்க வேண்டும் என்பதையே ஒற்றைக் கோரிக்கையாகக் கொண்டு தமிழீழப் பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் இன்றும் நடந்து வருகின்றன.

எழிலன் (எ) சசிதரன் என்ற மூத்த அரசியல் பிரிவு உறுப்பினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை நேரடியாக கண்ட சாட்சியான அவரது மனைவி ஆனந்தி சசிதரன், தன் கணவரின் நிலையை தெரிவிக்கக் கோரி ஏழு ஆண்டுகளாகப் போராடி வருகிறார். இலங்கை அரசு வெளியிட்ட புனர்வாழ்வு மய்யத்தின் புகைப்படம் ஒன்றில் தன் மகன் இருப்பதை அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய தகவல்களை அறியத் தருமாறு கேட்டுப் போராடிய பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயது மகள் விபூசிகா ஆகியோரை பொய்யானக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசு கைது செய்தது. போரின் இறுதிக் கட்டங்களில் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தக் கேள்வியையும் எழ விடாது அமுக்குவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்நூலின் பிற்பகுதி 2009 மற்றும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளை விவரித்த போதும், போர்க்குற்றங்கள் குறித்தான எந்த பதிவையும் செய்யவில்லை என்பதோடு இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கும் விடுதலைப் புலிகளையே குற்றம் சாட்டுகிறது.

எடுத்துக் காட்டாக, விடுதலைப்புலிகளின் செயலகங்களை இலங்கை வான்படை குறிவைத்துத் தாக்கியது என்றும் அதில் கேணல் சங்கர் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் எழுதிவிட்டு, அடுத்த பத்தியிலேயே வல்லிபுனம் எனும் இடத்தில் அமைந்திருந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய செஞ்சோலையில், முதலுதவி பயிற்சி பெற வந்திருந்த மாணவிகள் மீது நடந்த இலங்கை அரசின் வான்படை தாக்குதலில் ஏற்பட்ட அழிவிற்கு, 61 மாணவிகள் கொல்லப்பட்டதற்கு காரணம் இயக்கம்தான் என்று எழுதியிருப்பது வலிந்து குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இப்படி பல நிகழ்வுகளுக்கு புலிகளை பொறுப்பாக்கும் இந்நூல், அதற்கு சாட்சியாக இருந்த தமிழினி இதை ஏன் கேள்வி கேட்கவில்லை அல்லது பொறுப்பாளராக இருந்த அவர் ஏன் அதற்காக செயலாற்றவில்லை என்பதற்கான ஒற்றைப் பதிலாக “இயக்கத்திற்குள் கட்டளைகளை மீறுவதும் கேள்வி கேட்பதும் தவறு” என்று கூறப்படுகிறது. இன்றைய நிலையில் நின்று அன்றைய நிகழ்வுகளுக்கான காரணங்களை அலசி அதற்கு காரணம் இயக்கம்தான் என்று எழுதப்பட்டிருந்தால் அது வேறு. ஆனால் அக்கால கட்டத்திலேயே அதை அவர் விரும்பவில்லை என்று எழுதப்பட்டுள்ளது. எனில், தொடர்ந்தும் அதை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன? எத்தனையோ பேரை போல அவரும் இயக்கத்தை விட்டு அமைதியாகவே வெளியேறி இருக்கலாமே என்ற கேள்விக்கும் இந்நூலில் பதில் இல்லை.

அய். நா. அவையின் வல்லுநர் குழு அறிக்கையில் இலங்கை அரசின் மீதான போர்க் குற்றங்களில் ஒன்று மக்கள் தங்கியிருந்த பகுதிகளில் நேரடியாக தாக்குதல் தொடுத்தது என்பதாகும். விடுதலைப் புலிகள் தங்கள் கனரக ஆயுதங்களை மக்களிடையே வைத்திருந்ததால்தான் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நூல் கூறுகிறது. ஆனால் அய். நா. அறிக்கையோ செயற்கை கோள் படங்களின் மூலமாக, தாக்குதல் நடந்த பகுதிகளில் புலிகளின் கனரக ஆயுதங்கள் இல்லை என தெளிவாகக் கூறுகிறது.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீதான அய். நா. விசாரணை நடைபெறும் இத்தருணத்தில் முக்கியப் போர்க்குற்றங்களாக உலக அளவில் பேசப்படும் “வெள்ளைக் கொடி படுகொலை” மற்றும் “இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறையும் கொலையும்” – ஆகிய இரு நிகழ்வுகள் பற்றி சிறு குறிப்பு கூட இந்நூலில் இல்லை என்பது உண்மையிலேயே பெரும் வியப்பளிக்கிறது. வெள்ளைக் கொடி படுகொலை என்பது தமிழினி செயலாற்றிய அரசியல் பிரிவினைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தன்னுடன் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அக்கால கட்டத்தில் தமிழினி கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் நிச்சயம் அவர் இது குறித்து அறிந்திருப்பார். ஆனால் அதை பற்றிய அவரது கருத்து எதுவும் போகிற போக்கிலான ஒற்றை வரியாகக் கூட குறிப்பிடப்படவில்லை. இசைப்பிரியாவின் கணவரை முள்ளிவாய்க்காலில் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்லும் வழியில் தான் சந்தித்ததாக குறிப்பிடும் இடத்தில் கூட, பிற்காலத்தில் இசைப்பிரியாவுக்கு நேர்ந்ததைப் பற்றி தான் கேள்விப்பட்டதாகக் கூட எழுதப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்தை அளிக்கிறது.

ஒருவர் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம். தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் அத்தனை செயற்பாடுகளிலும் உடன்பாடற்று இருக்கலாம். பிற்காலத்தில் அதனை கேள்விக்குள்ளாக்கலாம். இவையெதும் நடக்க முடியாதது அல்ல. இயக்கத்தில் 18 ஆண்டு காலம் பணியாற்றியவர் என்ற முறையில், 2009-இல் ஏற்பட்ட அழிவிற்கான காரணங்களை தமிழினி ஆராய முற்படலாம். இயக்கத்தின் மீது அவருக்கு விமர்சனங்கள் இருக்கக் கூடும். ஆனால் மக்களை மிகவும் நேசித்த அவர், தனது விமர்சனங்களை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும், தவறுகளிலிருந்து பாடம் கற்க உதவுவதாகவும், குறிப்பாக அடுத்த கட்டப் போராட்டத்திற்கு வழிகாட்டும் விதமாகவுமே வெளிப்படுத்தியிருப்பார். இயக்கத்திலிருந்து தன்னை வெளியே நிறுத்தி யாரோ போன்றதொரு தொனியில் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருக்க மாட்டார்.

அதன் உச்சமாக இலங்கை இராணுவத்தினரையும் பிற அரசு அதிகாரிகளையும் வலிந்து நல்லவர்களாக காட்டும் முயற்சியை நூலின் பிற்பகுதி நெடுகிலும் காண முடிகிறது. அதிலும் பல முரண்கள். கருணா பிரிந்த பிறகு கிழக்கு மாகாணத்தில் நடந்த போராளிகள் மீட்பு நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தினர் கருணாவைச் சேர்ந்தவர்களை காப்பாற்றி அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டு பாதுகாத்ததாக குறிக்கப்பட்டுள்ளது. 2009 மே மாதம் மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்கியவுடன் தங்கள் சூட்டுக்களை நிறுத்திவிட்டு மக்களை ‘மீட்பதில்’ இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டதாகவும், மக்கள் அனைவரும் இராணுவத்தின் பக்கம் வந்த பிறகு, போராளிகள் தொடர்ந்தும் வெடித்துக் கொண்டிருந்ததால் இராணுவத்தினர் அங்குச் சென்று போரிட்டதாகவும் குறிப்பு உள்ளது. முக்கியமாக, புனர்வாழ்வு நிலையத்தில் இலங்கை அரசு மற்றும் இராணுவ அதிகாரிகள் தாயைப் போல அரவணைத்து அன்புடன் நடத்தினார்களாம்.

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் இலங்கை அரசு அதிகாரிகளின் அன்பை தாளாது ஆனந்த அதிர்ச்சியில் மாண்டார்கள் போலும்! அம்னஸ்டி இன்டர்நேஷனலும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும், ஆனந்தி சசிதரனும் ஜெயக்குமாரியும் திட்டமிட்டு பொய் பேசுகிறார்கள் போலும்.

சோதனை என்ற பெயரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து பிரான்சிஸ் ஹாரிசனும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையும் விரிவாகக் கூறுகின்றன. ஆனால் ”உடல் சோதனைக்குப் பிறகு” என்று மிக எளிதாக அதனை கடக்கிறது நூல். தமிழகத்தில், தோழர்களை காண பார்வையாளராக சிறைக்குச் செல்லும் போது பெண் காவலர்கள் மேற்கொள்ளும் உடல் சோதனை என்பதே மிகவும் அருவருக்கவும் கூசவும் தக்கதாக இருக்கும் நிலையில் வன்மம் மிகுந்த ஒரு இராணுவம் அதனை எப்படி மேற்கொள்ளும் என்பதை எளிதில் ஊகிக்க முடியும். ஓரிடத்தில் “அருவருப்பான” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தவிர அந்த உடல் சோதனையின் தீவிரம் எங்கும் கோடிட்டுக் கூட காட்டப்படவில்லை. தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெண் இப்படியானவற்றை வெளிப்படுத்துவது அவமானத்திற்குரியது என்று கருதும் நிலை உள்ளதால் அது எழுதப்படவில்லை என்று நினைத்தாலும், தனக்கு நேர்ந்ததாக அல்லாமல், பொதுவாகக் கூட அவை சுட்டிக்காட்டப்படவில்லை என்பது நெருடுகிறது.

நேர்த்தியான திட்டமிடலோடு, பள்ளங்களைத் தவிர்த்துச் செல்லும் பயணியைப் போல, இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய எதையும் தொடாமல் இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

புனர் வாழ்விலிருந்து வெளிவந்த பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் தமிழினி உயிருடன் இருந்துள்ளார். ஆனால் அவர் இறந்து நான்கே மாதங்களில் நூல் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்நூலை யார் வெளியிட்டுள்ளார்கள் என்பதும் நூலுக்கு வெளியே, ஆனால் நூல் தொடர்பாக உள்ள முரண்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழினி 2013ஆம் ஆண்டு சூன் மாதம் 26-ஆம் நாள் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதன் பின்னர் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புற்று நோயால் மரணமடைகிறார். 2009க்கு பிறகு நடைபெறும் இனப்படுகொலையின் தொடர்ச்சி குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி புனர்வாழ்விற்கு பிறகு புற்றுநோயால் இறந்த புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் தமிழினி 99-ஆவது நபர் என்கிறார். மேலும் ”இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலைசெய்யப்பட்டவர் தமிழினி” என்றும் பதிவு செய்துள்ளார்.

”வன்னி இறுதி இனஅழிப்பிற்கு நேரடியாக முகம் கொடுத்த மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாகத் தேங்கி உள்ளது. விளைவாக இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவைக் குறைக்கும் நச்சு பதார்த்தம் பரவியுள்ளது. இதனை Genocidal Factors எனலாம். இதனால் அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஓர் உயிர் வாழும் ஆதாரமாகும். மேலும் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகணைச் சிதறல்கள் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும் (living genocidal bio makers)” என்று சமாதானத்திற்கான தமிழ் மருத்துவர்களின் ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டிக் கூறுகிறார்.

பரணி கிருஸ்ணரஜனியின் இந்தப் பதிவு வெளியான உடனேயே தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் அதனை மறுத்து, புலிகள் இயக்கத்திற்கு ஓய்வின்றி வேலை செய்ததாலேயே தமிழினிக்கு புற்று நோய் ஏற்பட்டது என்ற அரிய கண்டுப்பிடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு பதிவுக்கு இவர் ஏன் இந்த அளவுக்கு பதறி துடித்து பதில் எழுத வேண்டும் என்ற நியாயமான சந்தேகம் நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மிக வெளிப்படையாக விடுதலைப் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டில் நிற்கும் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பொன். காந்தன், ஆனந்த சங்கரி போன்ற வெளிப்படையான, நீண்ட கால புலி எதிர்ப்பாளர்கள் உரையாற்றுகிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்நூல் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்நூலை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம், ‘காலச்சுவடு’ என்ற தனது மாத இதழில் ப்ரேமா ரேவதி எழுதி 2009ஆம் ஆண்டு வெளியிட்டக் கட்டுரையின் வரிகளை இந்த நூலின் பின் அட்டையில் அச்சிட்டு, அதற்கு கீழ் ‘தமிழினி’ என்றும் அச்சிட்டுள்ளது. கவிஞர் தீபச்செல்வன் இதை சுட்டிக்காட்டியவுடன் “அய்யோ எங்களுக்கு எதுவும் தெரியாது. தமிழினியின் கணவர் கொடுத்ததை அப்படியே அச்சிட்டோம்” என்கிறது காலச்சுவடு. தமிழினியின் கணவர் ஜெயக்குமாரனோ தான் அதை தமிழினியின் எழுத்துக்கள் என்று நம்பியதாக குறிப்பிடுகிறார். ஒரு வேளை அவர் கூறுவதை உண்மை என்றே வைத்துக் கொள்ளலாம். தனது இதழில் வெளியான அத்தனை கட்டுரைகளின் வரிகளையும் ஒரு பதிப்பகம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்றும் வைத்துக் கொள்வோம். ஆனால் அக்கட்டுரையை எழுதிய ப்ரேமா ரேவதியைக் கொண்டே இந்நூல் பிப்ரவரி 27 அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்படுகிறது. (http://sankathi24.com/news/ஒரு-கூர்வாளின்-நிழலில்தமிழினியின்-நூல்-வெளியீடு) ஆனால் மார்ச் 19 அன்று தீபச்செல்வன் சுட்டிக்காட்டும் வரை கள்ள மவுனம் சாதித்துள்ளார் ப்ரேமா ரேவதி. அவருக்கும் அவரது வரிகள் மறந்து விட்டன என்பதை நாம் நம்பத்தான் வேண்டும்.

2009இல் தமிழினி சிறையில் இருந்த போது தனது கட்டுரையை வெளியிட்ட காலச்சுவடு இன்று அவர் மறைந்துவிட்ட நிலையில் இந்நூலை வெளியிட்டுள்ளது. அன்றும் சரி, இன்றும் சரி, தமிழினி அவர்களால் பதில் சொல்ல முடியாது என்ற நிலையில் நின்றே இச்செயல்களை காலச்சுவடு புரிந்துள்ளது.

அன்று அக்கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினைகளை அலட்சியம் செய்யும் தந்திரத்தைக் கையாண்டு ஊடக அறத்தைக் கொன்றக் காலச்சுவடு, இன்று இந்நூலுக்கு எழும் எதிர்வினைகளையும் தனது வியாபாரத்தைப் பெருக்கும் கருவிகளாகவே கருதும் என்பதில் அய்யம் இல்லை.  அத்துடன் இலங்கை அரசின் கருவியாக தான் தொடுத்துள்ள இந்த உளவியல் போரின் வெற்றியாகவே அதை பார்க்கக் கூடும்.

ஆனால், சற்றும் வரலாற்றுப் பார்வையின்றி, எதற்கு எதிர்வினை எது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னான இனப்படுகொலைகளைப் பற்றிய பார்வையே இன்றி, தமிழ் மக்களின் இன்னல்களுக்கு விடுதலைப்புலிகளை காரணமாக்கிய அரை வேக்காட்டுத்தனமான காலச்சுவடின் கட்டுரையாளரைப் போன்றவர் இல்லை தமிழினி. மாணவராக இருந்த காலம் தொடங்கி, மாணவர் தலைவராகவும், 19 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு தொடக்கம் முதல் அரசியல் துறையில் மக்களிடையே பணிபுரிபவராகவும், போராளிகளுக்கு வரலாறு மற்றும் அரசியல் வகுப்புகள் எடுப்பவராகவும் 18 ஆண்டுகாலம் பணியாற்றியவர். ஆழ்ந்த வாசித்தல் அனுபவமும், நேரடியாக மக்களிடையே களப்பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். அவர் அக்கட்டுரையாளரைப் போல வரலாற்று அறிவின்றி புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவரையும் தமிழர்களின் இன்னல்களுக்கு பொறுப்பாக்குவார் என்று எவரும் நம்ப மாட்டார்கள். ஒரு தோழர் சொன்னது போல, “தமிழினி அக்காவுக்கு விசர் பிடித்திருந்தால் கூட இப்படி எழுத மாட்டார்”.

புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களையும் சிறுமைப் படுத்தும் நோக்கத்தோடு மட்டுமல்லாது இலங்கை அரசை தூய்மையானதாக காட்டும் நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது இந்நூல்.

இலங்கை அரசின் மீதான அய். நா. வின் இரு முனை விசாரணை தொடங்கியுள்ள நிலையில், தன்னை பன்னாட்டுச் சட்டங்களின் பிடியிலிருந்து காத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது. தமிழினி போன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்தத் தளபதி ஒருவரே இலங்கை அரசுக்கு சான்று கொடுத்துள்ளார் என்பது உலக அளவில் இலங்கை அரசின் நிலைக்கு வலு சேர்ப்பதாகும். அதனால்தான் இந்நூலை சிங்களம், ஆங்கிலம் என மொழிபெயர்ப்பதில் தீவிரம் காட்டுகிறது.

மேலும் தமிழர்கள் பெரிதும் மதிக்கும் தமிழினி அவர்களின் பெயராலேயே, அனைத்துக் குற்றங்களையும் பிரபாகரன் மீது சுமத்துவதன் மூலம், தமிழர்களின் உளவியல் பலத்தை அடியோடு சிதைக்கலாம் என கருதுகிறது.

மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததன் மூலம்,  விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த அடையாளங்களை தமிழ் மண்ணிலிருந்து அகற்ற நினைத்த இலங்கை அரசு, தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அந்நினைவுகளை அகற்றுவதற்கான முதல் படியாக, புலிகள் இயக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்த நினைக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழர் எழுச்சியின் அடையாளமாக இருக்கும் பிரபாகரனின் பிம்பத்தை அடியோடு சிதைக்க நினைக்கிறது. இலங்கை அரசை காட்சியிலிருந்து துப்புரவாக அப்புறப்படுத்திவிட்டு பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனின் விருப்பத்தின் பேரிலேயே இந்தப் போரும் இத்தனை அழிவுகளும் நடந்ததாக தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என இலங்கை அரசு விரும்புகிறது. அந்த விருப்பம் இந்நூல் நெடுகிலும் வெளிப்பட்டுள்ளது.

தமிழினி தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் குறித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு திரைக்கதையாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில உண்மைகளை இடை இடையே தெளித்து விட்டு பல்லாயிரம் பொய்களின் நிறத்தை மறைத்து விடலாம் என இந்நூலை வெளியிட்டவர்கள் நினைக்கலாம். ஆனால் அந்த உண்மைகளின் பலமே பொய்களை அப்பட்டமாக வெளிப்படுத்த வல்லது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மழை வெள்ளத்தில் கழிவுகள் ஒதுக்கப்பட்டு தெளிந்த நீர் கரைபுரண்டு ஓடுவது போல அந்த வலிமை மிக்க உண்மைகளின் முன் இவர்களின் பொய்கள் பரிதாபமாக உதிர்ந்து விழுகின்றன. அந்த உண்மைகளில் தமிழினியின் உருவம் அழியாமல் நிற்கிறது.

சிங்கள அரசின் சின்னமான கூர் வாளை ஏந்திய சிங்கத்தைக் குறிக்கும் வண்ணம் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்று இந்த நூலுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. கூர் வாளின் முனையில் தமிழினிக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களை மறைத்து, கூர் வாளின் நிழலில் நின்று இந்நூலை வடிவமைத்துள்ளனர். இத்தலைப்பே அவர்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. துவக்கு – வாளின் முனையை எதிர்கொள்ளுமே ஒழிய – அது ஒரு போதும் வாளின் நிழலில் இளைப்பாறாது.

 – பூங்குழலி
« PREV
NEXT »

No comments