Latest News

May 25, 2016

ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
by admin - 0

இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில் இடம்பெற்றுள்ளான். இவனும், குடும்பத்தினரும், ஆறு ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினர். 2013, நவம்பரில், மனைவி, மூன்று குழந்தைகளுடன், ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, போரில் பங்கேற்க முயன்றுள்ளான். ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன், அவனால் தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளான். பின், 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து, சிரியா சென்றுள்ளான். அது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில், அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறான்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி, குல் முகம்மது மரைக்காயர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவன். இவன், ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியை செய்து வந்தான். 2014ல், இவனை, சிங்கப்பூர் அரசு நாடு கடத்தியுள்ளது. 2015க்கு பின், குல் முகம்மது பற்றிய தகவல் தெரியவில்லை. தற்போது, ஐ.எஸ்., வெளியிட்ட வீடியோவில் அவன் இடம்பெற்றுள்ளான்.

கடந்த வாரம் வெளியான வீடியோ, 10 மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பயங்கரவாதிகளில் ஒருவனான, சாஜித், 2015, செப்டம்பரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டான். இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்.
« PREV
NEXT »

No comments