Latest News

May 16, 2016

ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதியில் ‘மை’ பிரச்சினை... கள்ள ஓட்டு அபாயம்.. மறுதேர்தல் நடத்த கோரிக்கை!
by admin - 0

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அழியக்கூடிய மை பயன்படுத்தப்படுவதால் கள்ள ஓட்டுப் போடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானார். இதனால் சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.

இத்தொகுதியில் திமுக சார்பில் சிம்லா ராஜேந்திரனும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புதுவார்டு நேருநகர் 8வது தெருவில் உள்ள இசிஐ மெரிட் மேல்நிலைப்பள்ளியில் 14 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு காலையில் திடீரென சிறிதுநேரம் மின்சாரம் தடைபட்டது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது. அதற்குப் பின்னர் வாக்களிக்க வந்தவர்களின் கைகளில் வைக்கப்பட்ட மை, எளிதாக அழிவதாக எதிர்க்கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வழங்கிய அழியாத மை எப்படி மாறியது என திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். மின் தடை ஏற்பட்ட போது, தேர்தல் ஆணையம் அளித்த அழியாத மை மாற்றப்பட்டு, எளிதில் அழியும் மை மாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கள்ளஓட்டு அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகரில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லக்கானி பதில்: இதற்கிடையே, வாக்குப்பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஆர்.கே.நகர் மை மாறிய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்' எனப் பதிலளித்தார்.


« PREV
NEXT »

No comments