Latest News

May 07, 2016

திட்டமிட்டவாறு தமிழினத்தை அழிக்க சதித்திட்டம்!
by admin - 0

தமிழ்ச் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாசாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாகவே தற்போது வடக்கில் நடைபெறும் வாள்வெட்டுக்கள், போதைப்பொருள் பாவனைகள் என்பன இடம்பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

கற்றவர்களும் சமயப்பற்றுடையவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் கடமை வீரர்களும் விளைந்த இப்பூமியில் இன்று கல்விக்கு பஞ்சம், சமயத்துக்குப் பஞ்சம், கலையில் வஞ்சம், கடமையில் வஞ்சம். சுய நலத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம். எமது இளைய சமுதாயம் தான்தோன்றித்தனமாக நினைத்த நினைத்த மாத்திரத்தில் மிகப் பாரிய குற்றச் செயல்களில், பாலியல் சேட் டைகளில் ஈடுபடுகின்றார்கள்.

மிகப்புகழ் பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற திறமை மிக்க பல மாணவர்கள் கூட இன்று பாரிய குற்றச் செயல்களில்ஈடுபட்டு வருவதை நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் நேரடியாகவும் அறிந்தும் கேள்விப்பட்ட வண்ணமும் உள்ளோம். நல்ல குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியர் கூட இவ்வாறான பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மூல காரணம் என்ன? என்ற கேள்வி எம்முன் பூதாகாரமாக எழுந்து நிற்கின்றது.

மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களை ஆசிரியர்கள் தண்டிக்க முடியாதபடி வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாணவ மாணவியரை முறைத்துப் பார்த்தாலே வழக்குத்தாக்கல் செய்யக் கூடிய சட்டங்களுக்கு மத்தியில் மாணவ மாணவியரின் நலன்கள் ஒருபுறம் பாதுகாக்கப்படுகின்ற போதும் இன்னொரு புறத்தில் சில வேளைகளில் அவை தீமையாகவும் அமைந்துவிடுகின்றன. 

தண்டனைகளால் மட்டும் மாணவ மாணவியரைத் திருத்திவிடலாம் என்ற கருத்தும் பிழையானது என்றே எண்ணுகின்றேன். பிள்ளைகளைத் தண்டிப்பதை விட அவர்கள் மீது அன்பு செலுத்துவதன் மூலம் அவர்களின் உள்ளங்களை வென்று நடப்பதன் மூலம் கல்வியின்பால் அவர்கள் கூடிய சிரத்தை எடுக்க வைக்க முடியும். 

யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கல்வியில் முத லிடம் வகித்தது. மீண்டும் 2009ற்கு பின்னர் படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்ற போதும் இன்னும் முழுமையான நிலையை அடையவில்லை. க.பொ.த.உயர்தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றாலும் அறிவு ரீதியாக நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம். இந்நிலை மாற்றப்பட வேண்டும். 

போர்க்காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்த சமூகம், போர் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மன வேதனையைத் தருகின்றது. வேண்டுமென்றே தமிழ் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி,கலாசாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைக ளாக இவை அமைந்துள்ளனவோஎன்று எண்ணத் தோன்றுகின்றது. 

எம்மைச் சுற்றி ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற்படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோக்கள் கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம்.

அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம்.எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப் பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும். 

இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீதிபதிகள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்து கடுமையான முயற்சிகனை மேற்கொண்டிருக்கும் அதேநேரம் அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் இவை பற்றிய மக்கள் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது முக்கியம் என முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments