Latest News

May 13, 2016

தேசியத்தலைவர் மீண்டும் வருவார் -சி.வி
by admin - 0


தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் தலைவர்  பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எழுத்தாளர் குசால் பெரேராவின் நூல் வெளியீடும் திறந்த கலந்துரையாடலொன்றும் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசத்தைக் கட்டியெழுப்புதலும் நல்லிணக்கமும் 

தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக அவதானம் செலுத்துகையில் இலங்கை என்றொரு தேசமுள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கு உள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக நாம் கலந்தாலோசிக்கினறபோதும் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவே நாம் தற்போது ஆலோசிக்கின்றோம்.

பல்வேறுபட்ட வேறுபாடுகளுக்கு மத்தியில் நாட்டினை கட்டியெழுப்புவது தொடர்பாக தற்போது இங்கு பேசப்படுகின்றது. இலங்கைத்தேசத்தைக் கட்டியெழுப்புகின்றோம் என்ற நிலைப்பாட்டில் நாம் இணக்கம் கொண்டிருக்கவில்லை.

தேசத்தை கட்டியெழுப்புவதானது ஒரு பாரிய கட்டடமொன்றினை பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புவதற்கு சமனானதாகும். அதற்கு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புக்கள் அவசியமாகின்றன. அதனைப்போன்றே தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் கூறமுடியும்.

தேசத்தைக் கட்டியெழுப்புதலும் நல்லிணக்கமும் தொடர்பாக நோக்கும்போது சிதைவுகளை கொண்டிருக்கும் கட்டடமொன்றை மீளவும் நிர்மாணிப்பதற்குச் சமமானதாகும்.

ஒரு கட்டடமொன்றில், தவறான திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான கோளாறுகள் சுரண்டல்கள், இயற்கையான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்றே எமது தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் நோக்கவேண்டிய தேவை உள்ளது.

இலகுவான தெரிவாக கட்டடத்தை முழுமையாக அழித்துவிட்டு புதிய புதிய கட்டட வரைஞர்கள் ஒப்பந்தக்காரர்களை வாடகைக்கு அமர்த்தி ஆரம்பத்திலிருந்து கட்டடத்தை அமைக்க முடியும். ஆனால் அதே கட்டட கலைஞர்கள் அதே தவறினை விடுவார்களா, இல்லையா, என்பது தொடர்பில் நாம் எவ்வாறு அறிந்துகொள்ளமுடியும்?

இதன்காரணமாக பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களேயே முதற்படியாக நாம் ஆராயவேண்டும். பிரச்சினைக்குரிய சரியான காரணங்களை கண்டறியாமலும் தவறுகளை அடையாளம் காணாமலும் எம்மால் தீர்வினை வழங்கமுடியாது. காரணங்களை கண்டறியும் செயற்பாடு மிகவும் நேர்மையானதாக இருக்கவேண்டும்.

எனது நோக்கின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தில் மிகவும் அடிப்படை நடவடிக்கையாக நேர்மையான சுயசோதனைகளை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

சுயசோதனை

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடாதென சிங்கள சமூகத்தவர்களின் பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றனர். இதேசமயம் அந்த விசாரணைக்குரிய அவசியம் இருப்பதாக பெரும்பான்மையான தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.

மக்கள் மத்தியில் இருக்கும் துருவமயப்படுத்தப்பட்ட சமூகங்களுடன் நாம் இதனை எதிர்நோக்குகிறோம். சுயசோதனையானது நல்லிணக்கத்திற்கான முதலாவது அடிப்படை நடவடிக்கையாக இருக்கும். இதனை உறுதிப்படுத்துவதற்காக அவசியமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். எந்தவிதமான பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் ஆயுத குழுவினர் பூச்சிய இழப்பு போரை நடத்தினார்கள் என்றோ, அனுமதித்த சேதங்களை, இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றோ கூறமுடியாது.

1956ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தர பிரஜைகளை உருவாக்குவதற்கான முதலாவது அரசியலமைப்பு படியாக கருதப்படும் 1972 அரசியலமைப்பு வரை சிங்களமயமாக்கலின் செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பான்மை சமூகம் மீளாய்வு செய்யவேண்டிய தேவை உள்ளது.

உரிமை மறுப்பு

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை குறைத்து மதிப்பீடு செய்தல், திவிநெகும போன்ற சட்டமூலங்கள் மூலம் தமிழ் மக்களை தரப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் காலனித்துவ மாற்றங்களுடாக குடியியல் ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தரப்படுத்தல்கள் மூலம் சமத்துவத்துக்கான அரசியல் ரீதியான உரிமை தமிழ்பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்றக் குழுவினர்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் நிலங்களுக்குள் சென்றிருந்தமை தொடர்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தமை ஒரு துயரம் நிறைந்த சம்பவமாகவே கருதப்படவேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மறுமுனையில் சட்டத்திற்கு முரணான தேவையற்ற காரணிகளுக்காக தனியார் நிலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் ஊடுருவியிருக்கும் அல்லது ஆக்கிரமித்திருக்கும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர்.

மோதல்களுக்கான காரணங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து பிரச்சினைகளுக்கான தீர்வினை தருவதற்கான சுழலினை உருவாக்குவதே அடுத்த பாரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

வரவேற்பு

அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கோரியுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதொரு விடயம். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் தொடர்பில் பலர் கடுமையான விமர்சனங்களை வடமாகாணம் மீது முன்வைத்திருந்தனர்.

இவ்வாறான தீர்மானங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கெதிராக வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. முதலில் அரசியலமைப்பினை திருத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தங்களும் வரையறை ரீதியாக அரசியலமைப்புக்கு முரணானதாகவே உள்ளது. அரசியலமைப்பில் மாற்றங்களை முன்வைப்பதற்காக மக்கள் முயற்சிகளை மேற்கொள்ளும்போது அது அரசியலமைப்புக்கு முரணான விடயமென்ற அர்த்தத்தில் இதனை கூறவில்லை.

தருணம் உருவாகியுள்ளது

மீண்டும் அரசியல் நன்மைகளுக்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்து சகல தரப்பினரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு ஒன்றிணைய வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. அரசியலமைப்பு தொடர்பாக வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த தீர்மானம் நாட்டினை பிளவுப்படுத்தும் ஒன்றாக சில ஊடகங்கள் கூறியிருந்தன. தமிழ் பேசும் மக்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுகள் தமது சிங்கள சகோதரர்களுக்குரிய சம உரிமைக்காகவே முன்மொழியப்பட்டிருந்தது.

பிரிவினைக்கான கடுமையான முன்மொழிவுகளாக அவை இருந்தன. பிராந்தியங்களுக்கான முன்மொழிவுகள் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தியா இதனை செய்திருந்ததுடன் தொடர்ச்சியாக அவ்வாறு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தினை உருவாக்கியிருந்தமை இதற்கான ஒரு வெற்றிகரமான மாதிரியாகும். நாமும் சிங்கள பெரும்பான்மை பகுதிகளில் பிரதிநித்துவத்தையும் கோரவில்லை. அல்லது சிங்கள பெரும்பான்மை பகுதிகளை இரண்டாக பிரிக்குமாறு கோரியிருக்கவில்லை. சிங்கள பெரும்பான்மை பகுதிகளுக்குரிய தீர்மானங்கள் சிங்கள மக்களாலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

இராணுவ ஆக்கிரமிப்பு

நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களின் காணிகளில் இணுவத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது சரியான விடயமாக இருக்காது. வடக்கில் சிவில் சுழலை உடனடியாக உருவாக்கவேண்டியது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும். வடமாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்பதற்கான பாதுகாப்பான கவலைகள் இல்லை.

இராணுவத்தினர் குறைக்கப்பட்டு கடந்த ஏழு வருடங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் நாம் ஏற்கனவே மீளக்கட்டியெழுப்புதல், மீளெழுச்சி, நல்லிணக்கம் போன்றவற்றுக்கான பாதையில் பயணித்துக்கொண்டிருப்போம்.

தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாகவிருந்தால் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுப்பதற்கு எவரையும் குற்றச்சாட்டமுடியாது.

முதலில் அரசியல் பிரச்சினையே

1979ஆம் ஆண்டு மகாவலி திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தகாலத்தில் மாகாணசபைகள் காணப்படவில்லை.1987ஆம் ஆண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்றுவரையில் மகாவலித்திட்டத்தின் மூலமாக ஒருதுளி தண்ணீர் கூட வடக்கு மக்களுக்காக கொண்டுவரவில்லை. ஆனால் மகாவலி எல்லை வலயத்தில் காணப்படும் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டு 4ஆயிரத்து 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஒருபுறந்தள்ளிவிட்டு மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீட்டுடன் பொருளதார மேம்பாடு என்ற வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவையும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் முதலில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னர் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து பொருளாதார மேம்பாடு குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கமுடியும்.

மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக கூட வடக்கின் பூநகரி பிரதேசத்தில் மின்சாரத்தை வழங்குவதற்கு சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்ற திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஹரீன் பீரிஸ் ஆகியோர் இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்கள். அதிகாரிகளை அழைத்து அவர்களை மக்களிடத்தில் நேரடியாகச் சென்று இச்செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளாகள்.

அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கும்போது ஒருவார்த்தை கூட கூறாது நேரடியாகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது எவ்வாறு நியாயமாகும். மக்களுக்கு இவ்வாறான விடயங்களை கூறி அவர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

இதேபோன்றுதான் 65ஆயிரம் வீட்டுத்திட்ட செயற்பாடும் காணப்படுகின்றது. 2.1மில்லியன் ரூபா வீடொன்றுக்கு செலவிடப்பட்டு அத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதிலுள்ள குறைபாடுகளை நாம் சுட்டிக்காட்டும் போது 85ஆயிரம் மக்கள் விண்ணபித்துள்ளார்கள் எனக் காரணம் காட்டப்படுகி்ன்றது. 85ஆயிரம் மக்களுக்கு வீடுகள் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறான பொருத்தமற்ற வீடுகள் அல்ல.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்கின்றன. மாகாண சபை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு மத்தியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே பொருளாதார செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே தான் முதலில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகின்றது.

விசாரணை

ஒருநாட்டின் படைகள் மீதே சர்வதேச விசாரணை கோரப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் ஊழியர்கள். இந்த நாட்டை வழிநடத்துபவர்கள். அதனடிப்படையில் தான் சர்வதேச விசாரணையொன்று வலியுறுத்தப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் இருதரப்புக்கிடையிலான மோதலின்போது தவறிழைத்ததாக கூறப்படும் ஒருதரப்பு இல்லையென்பதற்காக தவறிழைத்ததாக கூறப்படும் மற்றத்தரப்பை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்பது நியாயம்.

விசாரணைகள் நிச்சயமாக முன்னெடுக்கப்படவேண்டும். விசாரணைகளின் ஊடாக தவறிழைக்கப்படவில்லை என்பது நிரூபக்கப்படுமாகவிருந்தால் அதனை ஏற்கமுடியும். அதேபோன்று விசாரணைகளின் பிரகாரம் தவறுகள் கண்டறியப்பட்ட சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட அடுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் திட்டமிட்ட முறையில் விசாரணைகளை தடுக்க முடியாது. விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது.

பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும்

சில தமிழ்க்குழுக்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் நல்லிணக்கத்தை அடைவதற்காக போர்க்குற்ற விசாரணைகளை கைவிடுவதற்கு சாதகமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றார்கள். பொறுப்புக்கூறலை விடுத்து நல்லிணக்கத்தை அடையமுடியமா என எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த வடக்கு முதல்வர்,

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. பொறுப்புக்கூறலானது சட்டரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்னூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் இராணுவத்தினர் ஒருவர் தவறிழைத்துவிட்டார். தமிழரே உங்களுக்கு சில விடயங்களை வழங்குகின்றோம்.

தவறு தொடர்பான விடயத்தை கைவிடுங்கள் என கோருவதாக வைத்துக்கொள்வோம். அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது நீதித்துறை சார்ந்தது. தவறு இழைக்கப்பட்டாலோ அல்லது இழைக்கப்படா விட்டாலோ அது விசாரணைகள் ஊடாகவே தெரியவரும். விசாரணைகள் இறுதியில் தான் அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்க முடியும்.

ஆனால் நல்லிணக்கத்திற்காக பொறுப்புக்கூறலை கைவிடமுடியாது. இந்த நாட்டில் அவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இதைசெய்யுங்கள். நாங்கள் உங்களுக்கான விடயத்தை கைவிடுகின்றோம் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஒருவர்த்தகச் செயற்பாடு போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மக்களுக்கு நன்மைகிடைப்பதற்காக வர்த்தகப் பேரம்பேசல்களில் ஈடுபடலாம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கள், இன்று சமூகத்தில் பெண்களை தலைமைத்துவங்களாக கொண்டு பரிதவிக்கும் குடும்பங்களுக்கான பொறுப்புக்கூறலை நல்லிணக்கத்திற்கான பேரம்பேசமுடியாது.

சமஸ்டி

தினேஸ்குணவர்த்தன விக்கினேஸ்வரன் சமஸ்டி தொடர்பாக பேசுகிறார். அதுதொடர்பாக அவருக்கு பேச உரிமையில்லை. நாட்டை பிரிக்கப்பார்க்கின்றார். போன்ற கடுமையான கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். நான் பிலிப்குணவர்த்தனவை ரோயல் கல்லூரயில் சந்தித்தபோது சமஸ்டி பாதகமானது எனக்கூறினேன். அப்போது ஏன் அப்படிக்கூறுகின்றீர்கள். எஸ்.டபிள்யு.டி.பண்டாரநாயக்க 1926ஆம் ஆண்டு சமஸ்டி இந்த நாட்டிற்கு சிறந்தது எனக் கூறியுள்ளார் என்றார். தினேஸ்குணவர்த்தனவின் தந்தையாரும் இடதுசாரியுமான பிலிப்குணவர்த்தன 1958ஆம் ஆண்டு எனக்கு கூறிய பதிலாகும்.

பலவருடங்களாக சமஸ்டியானது பிரிவினை என்றே காட்டப்பட்டு வந்திருக்கின்றது. சமஸ்டி என்பது என்ன எனச் சற்று பார்ப்போம். பிலிப்குணவர்த்தனவின் தாய்வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகப்பாரிய பிரதேசத்தில் உள்ளது. தினேஸ்குணவர்த்தன, இந்திக குணவர்த்தன உட்பட அனைவரும் ஆரம்பத்தில் அந்த தாய்வீட்டில் தான் இருந்தார்கள். அவர்கள் திருமணம் செய்த பின்னர் அந்த தாய்வீடு அமைந்திருந்த பாரிய காணியில் தான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அந்த இடத்திலேயே இருந்தர்கள். தற்போதும் இருக்கின்றார்கள். அது தான் சமஸ்டி.

இலங்கையில் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சமஸ்டி இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாகாணசபைக்கு காணப்படும் அதிகாரங்கள் தொடர்பில் தான் பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசாங்கம் அதிகமான அதிகாரங்களை வழங்கி மாகாணசபைகளை முடக்கி வைத்திருக்கின்றது. அவ்வப்போது அதிகாரங்களை வழங்கினாலும் வலது கையால் தந்து இடது கையால் எடுக்கும் நிலைமையே உள்ளது. ஆகவே தான் நாங்கள் சமஸ்டி அரசியலமைப்பைக்கோருகின்றோம்.

அவ்வாறான அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்திலேயே தனித்துவமான மக்கள் கூட்டம் தமக்கான தீர்மானங்களை எடுப்பதற்கும் நிருவகிப்பதற்கும் வழியேற்படும். இதனால் நாடு பிளவடையாது. ஒருமித்த இலங்கையின் உள்ளே ஏற்பாடுகள் அமையவேண்டுமெனக் கோருகின்றோம். இதன்மூலமே அனைத்து மக்களும் கூட்டுறவுடன் ஐக்கியமாக வாழும் எதிர்காலச்சூழல் ஏற்படும் என்றார்.
 
« PREV
NEXT »

No comments