Latest News

May 31, 2016

யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தி!
by Unknown - 0

யாழ்ப்பாணத்தின் மிகப் பெரும் அறிவுப் பொக்கிசங்களில் ஒன்றான யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தென்னிலங்கையில் இருந்து சென்ற குண்டர்களால் யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

இலங்கையின் சமாதானமும், சகவாழ்வும் அன்று முதல் தீப்பற்றிக் கொள்ளத் தொடங்கியது.

யாழ். பொது நூலகம் 1933ஆம் ஆண்டு எம்.கே.செல்லப்பா என்பவரின் தனிமனித முயற்சியில் தனியார் நூலகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1936ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ். நூலகம் நகர சபையினால் பொறுப்பேற்கப்பட்டது.

அன்றைய நகர சபையின் அயராத முயற்சி காரணமாக பல்வேறு நாடுகளின் நிதியுதவி மற்றும் உலகின் பல்வேறு பாகங்களில் வெளியான நூல்களைக் கொண்டு யாழ். நூலகம் அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியது.

பின்னர் வந்த காலக்கட்டத்தில் தென்னிந்திய கட்டடக்கலை நிபுணர் எஸ்.ஆர்.இராமநாதனின் வடிவமைப்பில் மூன்று மாடிகளைக் கொண்டதாக யாழ். நூலகம் புதுப்பிக்கப்பட்டது.

இதனை 1959ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி அன்றைய யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்த நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் காலப்பகுதியில் கீழைத்தேய தேசங்களின் அபூர்வமான நூல்களையும் தன்னகத்தே கொண்ட யாழ். நூலகம் கீழைத்தேய உலகின் அறிவுச் சுரங்கமாக போற்றப்படத் தொடங்கியிருந்தது.

இதன் பின்னர் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிய அமெரிக்கன் சென்டர் எனும் நூலகம் மூடப்பட, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வ நூல்கள் பலவும் யாழ். நூலகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அபூர்வமான நூல்களை யாழ். நூலகம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தொடங்கிய விரிசலின் இடைவெளியில் ஓங்கி எழுந்த இனவாதத் தீயின் நாக்குகள் யாழ். நூலகத்தை முற்றாக இரையாக்கிக் கொண்டன.

1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நடந்த அந்த வரலாற்றுத் துயர் சம்பவத்தின் பின்னர் வடக்கும் தெற்கும் இணைய முடியாத இருதுருவ தேசங்களாக மாறி யுத்தமொன்றை எதிர்கொள்ள நேரிட்டது.

அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் தான் வடக்கிற்கான நல்லுறவுப் பாலம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது.

கடோலய் பொதய் (ஒரு செங்கல், ஒரு நூல்) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நல்லுறவு செயற்திட்டத்தின் ஊடாக தென்னிலங்கையில் சேகரிக்கப்பட் செங்கள் கட்களைக் கொண்டு யாழ். நூலகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

நூலகத்துக்கான புத்தகங்கள் மற்றும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி என்பன தென்னிலங்கையின் பொதுமக்களாலும், அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பள அன்பளிப்பாலும் நடைபெற்றது.

தற்போதைய நிலையில் 30 ஆயிரம் வாசகர்கள் மற்றும் 2200 உறுப்பினர்களைக் கொண்டுள்ள யாழ். நூலகத்தில் ஒரு இலட்சத்தை அண்மித்த எண்ணிக்கையில் நூல்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட நூலகம் தேசத்தின் சகவாழ்வுக்கு தீவைத்தது போன்றே மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் நாட்டின் நல்லிணக்கத்துக்கான வழியும் பிறந்துள்ளது.

அந்த வகையில் யாழ். நூலகம் ஒரு அறிவுச் சுரங்கம் மாத்திரமன்றி தேசத்தின் அமைதியின் சின்னமுமாகும்.

எது எவ்வாறு இருப்பினும் எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.
« PREV
NEXT »

No comments