Latest News

May 22, 2016

கிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு! விவசாயிகள் கவலையில்!!
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. கடன்பட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் செய்வதறியாது பெருங்கவலையில் மூழ்கியுள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தமையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழ்விடங்களுக்குள்ளும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள்ளும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டு வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்துள்ள நெற்பயிர்ச்செய்கை, சிறுதானியப் பயிர்ச்செய்கை என்பவற்றின் விபரம் மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரங்களின்படி அக்கராயன் பகுதியில் 2790 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் 2500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது. வன்னேரிக்குளம் பகுதியில் 121 ஏக்கர் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது. இதேவேளை இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1500 ஏக்கர் சிறுதானியப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாகத் விபரங்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இம்முறை இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கிளிநொச்சியின் ஏனைய குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கையே இடம்பெற்றிருந்தது என்பதும் அதுகும் தற்போது பெய்த கனமழை வெள்ளப் பெருக்கால் அழிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிளிநொச்சியில் பெய்த பெருமழையினால் குளங்களில் நீர் தேங்கியுள்ளமையைப் பயன்படுத்தி வெள்ளப்பெருக்கினால் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களில் துரிதமாக மீள்விதைப்பை மேற்கொள்வது பற்றிய முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள போதிலும் இலங்கையில் அசாதாரண காலநிலை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் கடன்பட்டு பெருமளவு பணத்தைச் செலவுசெய்து மீண்டும் விதைத்துப் பயிரழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனும் கவலையுடனும் விவசாயிகள் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மீள்குடியேற்ற ஆரம்ப காலங்களில் வங்கிளிடமிருந்து கடனாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கினால் வயல் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களைத் தற்போதுவரை திருப்பிச் செலுத்தமுடியாது அவலப்பட்டு நிற்கும் விவசாயிகள் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விவசாயிகளால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டு பயிர்ச்செய்கையில் ஈடுப்ட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளது விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியபோதிலும் அப்படியான செயற்பாடுகள் எவையும் இடம்பெறாதமையால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகள் வங்கிக்கடன் சுமையுடன் மென்மேலும் இயற்கையின் சீற்றத்தினால் பயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்டுக் கலங்கிநிற்கின்றார்கள்.
« PREV
NEXT »

No comments