போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா. கள மருத்துவர் உயற்சி அவர்கள் வழங்கிய நேர்காணலின் முதலாவது பாகம் இது.
கேள்வி:- நீங்கள் தமிழீழ தாயகத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கள மருத்துவராகப் பணிபுரிந்தவர். யுத்த காலத்தில் நீங்கள் முன்னெடுத்த பணிகளை விபரியுங்கள்.
பதில்:- நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கள மருத்துவராகக் கடமையாற்றினேன். 2006ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கும் பொழுது மணலாறு கொக்குத்தொடுவாய் பகுதியில் கள மருத்துவராக நான் பதவியேற்றேன். அங்கிருந்து யுத்தம் முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் முடியும் வரைக்கும் அந்தப் பகுதிக்குரிய கள மருத்துவராக வேலை செய்தேன்.
கேள்வி:- எவ்வாறான பணிகளை முன்னெடுத்தீர்கள் - கள மருத்துவர் என்ற வகையில்?
பதில்:- என்னுடைய பணி என்னவாக இருந்தது என்றால் - கள மருத்துவம் என்பது வித்தியாசமான ஒன்றாக இருந்தது. வித்தியாசமானது என்பதை விட ஒரு கடினமான பணி. அது எப்படியயன்றால் யுத்தம் நடக்கும் இடம் அல்லது ஒரு விமானத் தாக்குதல் நடக்கும் இடத்தில் - அந்த இடத்தில் காயப்பட்ட ஆட்களை - அந்த ஸ்பொட்டில் (இடத்தில்) வைத்து என்ன ரிறீற்மன்ற் (சிகிச்சை) செய்ய வேண்டுமோ, அந்த ரிறீற்மன்ரை (சிகிச்சையை) செய்து, பின்னுக்கு மெயின் தியேட்டருக்கு (பிரதான சத்திர சிகிச்சை மையத்திற்கு) கொண்டு வருவதுதான் எங்களுடைய பிரதான பணியாக இருந்தது.
அந்தக் கள முனைகளில் உள்ள சப் மெடிசின் (உப மருத்துவப் பிரிவு) என்று சொல்வது - கள முனைகளில் உள்ள சப்பில்தான் (உப மருத்துவப் பிரிவில்) நான் கூட நிற்பேன் அல்லது மெயினில் (பிரதான மையத்தில்) நிற்பேன் - இரண்டு இடங்கள் இருக்கும். அங்கிருந்து காயப்படும் ஆட்களை, அதில் வைத்து காயங்களைக் கட்டி, பின்னர் அவர்களுக்கு ரிறீற்மென்ற் (சிகிச்சை) - அதாவது சேலைனோ அல்லது பிளட்டோ (குருதி), அதே மாதிரி ஐ.சி.ரி - கால், கை முறிந்திருந்தால் அதற்குரியவை ‡ அவருடைய உயிரைக் கொண்டு வந்து பிரதான மருத்துவமனை தியேட்டர் உள்ள - சத்திர சிகிச்சைக் கூடம் உள்ள இடத்திற்கு கொண்டு வரும் வரைக்கும் அந்த உயிரைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய கடமை என்னிடம் இருந்தது.
கேள்வி:- நீங்கள் முன்னெடுத்த இந்தப் பணிகளிலே பொதுமக்களுக்கான பணிகளையும் முன்னெடுத்தீர்களா? அல்லது போராளிகளுக்கு மட்டுமான களப் பணிகளை முன்னெடுத்தீர்களா?
பதில்:- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே பொதுமக்களுக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் போராளிகள் வேறு, பொதுமக்கள் வேறு என்று ஒரு காலமும் வேலை செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு இடத்தில் விமானத் தாக்குதல் நடந்தால், அந்த இடத்தில் காயப்படும் பாடசாலை மாணவர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தால் என்ன, அந்த இடத்திற்கு உடனடியாக நான் நேரே போய், அங்கே உள்ள காயக்காரர்களை எடுத்து, எங்களுடைய மருத்துவமனையில் கொண்டு வந்துதான் நாங்கள் ரிறீற்மன்ட் (சிகிச்சை) செய்வோம். பொதுமக்கள் என்று நாங்கள் ஒரு பொழுதும் பிரித்துப் பார்த்ததும் இல்லை. பொதுமக்கள் காயப்பட்டார்கள் என்று நாங்கள் விட்டதும் இல்லை.
கேள்வி:- ஆனால் உங்களுடைய பெரும்பாலான நேரம் களமுனையில்தானே இருந்திருக்கும்?
பதில்:- களமுனையில் தான் இருந்தது. எங்களுடைய மெயின் (பிரதான) மருத்துவமனை என்று சொல்வது களமுனையில் இருந்து ஒரு ஆறு கிலோமீற்றர் பின்னால்தான் இருக்கும். அதாவது ஆறு கிலோமீற்றர் பின்னால் இருக்கும். அந்த மெயின் மருத்துவமனை உள்ள இடம் பொதுமக்கள் உள்ள இடங்களாகத்தான் இருக்கும் - ஆறு கிலோமீற்றர் பின்னால். அந்த இடத்தில் எங்களுடைய வாகனங்கள் - காயப்பட்ட ஆட்களை ஏற்றும் வாகனங்கள் இருக்கும். விமானத் தாக்குதல்கள் சரி, செல் (எறிகணை) தாக்குதல்கள் சரி கூடுதலாக மக்கள் இருக்கும் பகுதிகளில் தான் நடந்தது. கள முனையில் ரவைகளோ - ரவுண்ஸ்களோ - வராமல் இருக்கும் - சனத்திற்குப் படாமல் இருக்கும். ஆனால் பின்பகுதியில் உள்ள சனங்களுக்கு செல் தாக்குதல்களுக்கும், விமானத் தாக்குதல்களுக்கும் எந்தக் குறையும் இருக்கவில்லை. இந்த இரண்டும் - செல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் - ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் நிறையப் பொதுமக்கள் - ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து பொதுமக்களாவது எங்களிடம் வருவார்கள் - யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில். பின்னர் யுத்தம் முடிவு பெறும் காலத்தில் நூற்றுக்கு நூறு வீதமான காயங்கள் என்று சொல்வதை விட நூற்றுக்குத் தொண்ணுVறு வீதமான காயங்கள் பொதுமக்களுடைய காயங்களாகத்தான் எங்களிடம் வந்து கொண்டிருந்தது.
கேள்வி:- மக்களுக்கான மருத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கு, அல்லது போராளிகளுக்கான மருத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கு உங்களுக்கு மருந்துகள் தேவைப்பட்டிருக்கும். இந்தத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தீர்கள்?
பதில்:- எங்களிடம் ஸ்ரொக் (கையிருப்பு) இருந்தது - விடுதலைப் புலிகளின் மருத்துவ ஸ்ரொக் இருந்தது. அதாவது அரசாங்கம் அனுப்பும் மருந்தை வைத்து பொதுமக்களுக்கு ஒரு பத்து வீதம் கூட பூர்த்தி செய்ய இயலாது. அது உலகறிந்த உண்மை. அதை ஐ.சி.ஆர்.சி (செஞ்சிலுவைச் சங்கம்) அங்கிருக்கும் பொழுது அந்த விபரத்தை வெளியிட்டிருந்தது - சிறீலங்கன் கவண்மன்ற் (அரசாங்கம்) அனுப்பும் மருந்து காணாது என்று சொல்லி. எங்களுடைய போராளிகளுக்கென்று நாங்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களைத்தான் நாங்கள் பொதுமக்களுக்கும் பயன்
படுத்துவோம்.
கேள்வி:- மருந்துப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது என்ன செய்வீர்கள்?
பதில்:- எங்களுக்கு மருந்தால் பற்றாக்குறை இருக்கவில்லை. ஏனென்றால் போராளிகள் - எங்களுடைய மேலிடங்களில் இருந்து - மருந்துகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு பொழுதும் இது போராளிக்குரிய மருந்து, இது பொதுமக்களுக்குரிய மருந்து என்று பிரித்துப் பார்க்கவுமில்லை: வேலை செய்யவுமில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் இந்த யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது சாதாரணமாக சிறீலங்காவின் கவண்மன்ற் கொஸ்பிட்டல்களில் (அரசாங்க மருத்துவமனைகளில்) - சின்னச் சின்ன கொஸ்பிட்டல்களில் கூட - இருந்த மருத்துவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அரசாங்க மருத்துவர் ஒருவராக இருந்தால், மிகுதி ஐந்து பேரும் போராளி மருத்துவர்களாகத்தான் இருப்பார்கள். அது போராளி மருத்துவர்கள் என்பது வெளியால் உள்ள யாருக்கும் தெரியாது. நாங்கள் போராளிகள் என்று அவர்கள் இராணுவ உடையை அணிந்து கொண்டு வேலை செய்வதில்லை. அவர்களும் ஒரு சாதாரண மருத்துவராகவும், சாதாரணமாக வேலை செய்யும் ஒரு ஆளாகத்தான் வேலை செய்வார்கள். அது நிறைய மக்களுக்கும் தெரியும். போராளிகள் என்று உடுப்பைப் போட்டுக் கொண்டு நாங்கள் வேலை செய்தால், அது இலங்கை விமானப் படைக்கு இது போராளிகளின் இடம் என்று சொல்லி விமானத் தாக்குதல்களை செய்து விடுவார்கள் என்பதால் சாதாரண பொதுமக்களாகத்தான் வேலை செய்தோம்.
கேள்வி:- நீங்கள் அப்படி ஏதாவது மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறீர்களா?
பதில்:- நான் என்னுடைய போராட்ட வாழ்க்கையில் இரண்டு விடயங்களுக்குத்தான் போராளிகளின் அங்கி - அதாவது இராணுவ உடை - அணிவேன். ஒன்று மாவீரர் தினத்திற்கு. இரண்டாவது என்னுடன் இருந்த யாராவது ஒரு மருத்துவரோ அல்லது என்னுடைய ஒரு நண்பனோ வீரச்சாவடைந்தால் அவருடைய அந்த நிகழ்விற்குத்தான் போராளி உடுப்பு அணிவேன். மற்றும்படி, வெளியால் சனங்களுக்கு எல்லாம் தெரிந்தது இவர் ஒரு கள மருத்துவர் என்றால் கவண்மன்ற் (அரசாங்க) - சிறீலங்கன் கவண்மன்ற் - டொக்டர் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும்.
பின்னர் என்னை இராணுவ யூனிபோர்மில் (சீருடையில்) பார்க்கும் பொழுதுதான் கேட்பார்கள் நீங்கள் இயக்கமா? என்று. நான் ஒரு ஆள் அப்படி எனும் பொழுது எல்லா மருத்துவர்களுமே இப்படித்தான் வேலை செய்தார்கள். அங்கு, வன்னியில் உள்ள மக்கள் முழுப் பேருக்குமே தெரியும் எல்லா கொஸ்பிட்டல்களிலுமே (மருத்துவமனைகளிலும்) போராளி மருத்துவர்கள்தான் தங்களுக்கு வேலை செய்கின்றார்கள் என்பது.
கேள்வி:- நீங்கள் பணிபுரிந்த ஒரு பொது மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட முடியுமா?
பதில்:- நான் முல்லைத்தீவு மருத்துவமனையில் வேலை செய்தேன் - சண்டை நடைபெறும் பொழுது. பின்னர் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்த பிரதான மருத்துவமனையில் வேலை செய்தேன்.
கேள்வி:- நீங்கள் பணிபுரிவது அரசாங்கத்திற்குத் தெரியாதா?
பதில்:- இல்லை தெரியாது. நாங்கள் பணிபுரிவது தெரிந்திருந்தால், அந்த மருத்துவமனைகளும் தாக்கப்பட்டிருக்கும்.
கேள்வி:- நீங்கள் இறுதி யுத்தத்தில் - அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியிலே - ஒரு மருத்துவமனையைப் பொறுப்பேற்று நடத்தியவர் என்று அறிகின்றோம். அந்தப் பணிகளைப் பற்றிச் சற்று விபரமாகக் கூற முடியுமா?
பதில்:- முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகளாக இருந்தவற்றில் கடைசியாக இராணுவத்திடம் பிடிபட்ட மருத்துவமனை நான் வைத்து நடத்திய மருத்துவமனை. அந்த மருத்துவமனைக்குப் பெயர் அலன் மருத்துவமனை. யுத்தம் ஆரம்பிக்கப்படும் காலத்திற்கு முன்னரே அந்த மருத்துவமனை எங்களிடம் இருந்தது. அப்பொழுது அது போராளி மருத்துவமனையாக இருந்தது.
பின்னர் முள்ளிவாய்க்காலிற்குள் மக்கள் வந்து செறிவாகும் பொழுது அது சாதாரண பொதுமக்கள் மருத்துவமனையாக மாற்றம் பெற்றது. ஏனென்றால் வேறு மருத்துவமனைகள் இருக்கவில்லை. வேறு ஒரு மருத்துவமனையை வைத்துச் செய்யக்கூடிய வசதியும் இருக்கவில்லை. நான் வைத்திருந்த மருத்துவமனையை பொது மருத்துவமனையாக மாற்றினோம். 16ஆம் திகதி நடுச் சாமம் வரையும் அந்த மருத்துவமனை இயங்கியது. 16ஆம் திகதி தான் அந்த மருத்துவமனையை சிறீலங்கா இராணுவம் முற்றுகையிட்டது.
கேள்வி: நீங்கள் என்ன பணிகளைச் செய்தீர்கள்? விபரமாகக் கூற முடியுமா?
பதில்: பெரிய காயங்கள் என்று பார்த்தால் 14ஆம் திகதியும், 15ஆம் திகதியும் மூன்று வயிற்றுக் காயங்கள் செய்தோம் - வயிற்றில் காயப்பட்ட பொதுமக்களுக்கு. 16ஆம் திகதி இரவு - மருத்துவமனை பிடிபடும் இரவு - ஒரு கர்ப்பிணித் தாய்க்கு சிசேரியன் செய்து ஒரு குழந்தையை வெளியில் எடுத்தோம். அதை விட ஐ.சி.ரியூப் - அதாவது நெஞ்சில் காயப்படும் ஆட்களுக்கு ஐ.சி.ரியூப், கால், கை அம்புயூற்றேசன் (அகற்றுதல்) - அதாவது கால், கையில் காயப்பட்டு அவயத் துண்டிப்புகள் பட்டவர்களுக்கு, அவயங்கள் துண்டிப்பு - அதாவது சேர்ஜரி (சத்திர சிகிச்சை)-செய்தோம். மற்றைய காயங்கள் - சாதாரண எல்லாக் காயங்களுமே செய்தோம். பெரிய சில காயங்கள் - கடைசி நாட்களில் பார்த்தீர்கள் என்றால் பெரிய காயங்கள் செய்ய இயலாமல் இருந்தது. என்ன காரணம் என்றால் தாக்குதல்கள் - விமானத் தாக்குதல்கள், செல் தாக்குதல்கள், ரவுண்ட்ஸ் (துப்பாக்கி ரவை) தாக்குதல்கள், கொத்துக் குண்டு, கிளேசர் பொம்ப் (சிதறல் குண்டுகள்) - எல்லாமே நடந்து கொண்டிருந்தது. அதனால் பெரிய காயங்கள் - சில காயங்கள் செய்வதற்கு நான்கு மணித்தியாலம், ஐந்து மணித்தியாலங்கள் எல்லாம் எடுக்கும். சில வயிற்றுக் காயங்கள் செய்வதற்கு குறைந்தது ஆறு மணித்தியாலங்கள்கூட எடுத்திருந்தது. அப்படியான காயங்களைத் தவிர்த்தோம். ஏனென்றால் செய்ய இயலாது. அந்த அளவிற்கு எங்களிடம் வசதிகள் இல்லாமல் போய்விட்டது. இன்ஸ்ருமன்ற்ஸ்களை ஸ்ரெறைல் (உபகரணங்களை தொற்றுநீக்கம் செய்வது) பண்ணும் வசதி இல்லாமல் போய்விட்டது. எங்களின் ஜெனரேட்டரில் (மின்பிறப்பாக்கி) செல் விழுந்ததால் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. இன்ஸ்ருமன்சை (உபகரணங்களை) நாங்கள் தண்ணியை அடுப்பில் வைத்து அவித்துத்தான் ஸ்ரெறைல் (தொற்றுநீக்கி) பண்ணினோம். அப்படியான கட்டம் வரும் பொழுது கடைசி நாட்களில் பெரிய காயங்கள் செய்யவில்லை.
கேள்வி: நீங்கள் எவ்வாறு கள மருத்துவர் ஆகினீர்கள்?
பதில்: நான் இந்தப் போராட்டத்தில் வேறு ஒரு துறையில் படித்துக் கொண்டிருந்தேன். படித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் துறை சார்ந்து ஒரு மருத்துவர் தேவைப்பட்டிருந்தது. அந்தத் துறைக்காகத்தான் நான் மருத்துவராகப் படித்தேன். அதில் என்னைக் கொஞ்சம் அட்வான்சாக (மேற்படிப்பு) படிப்பித்தார்கள் - அந்தத் துறையில் கொஞ்சம் கூடுதலான அனுபவம் தேவை என்பதால். அப்பொழுது நான் கொஞ்சம் அட்வான்சாக படித்திருந்தேன். கள மருத்துவத்துடன் சேர்ந்து தியேட்டர் (சத்திர சிகிச்சை) வேலைகளும் படித்திருந்தேன். பின்னர் காலப்போக்கில் அந்தப் பணிக்கு என்னால் போக முடியாததால், என்னை மணலாற்றுக்கான கள மருத்துவராக நியமித்தார்கள்.
கேள்வி: எங்கே உங்கள் மருத்துவக் கற்கையை மேற்கொண்டீர்கள்?
பதில்: நான் ஆரம்பத்தில் கற்கையை கிளிநொச்சியில் மேற்கொண்டேன் - விசுவமடு என்ற பகுதியிலும் மேற்கொண்டேன். எமது படிப்பு ஒரு வித்தியாசமானது. மற்றைய இடங்கள் மாதிரி அல்ல. ஒரு பக்கத்தில் படிப்பு போய்க் கொண்டிருக்கும். மற்றைய பக்கத்தால் பிறக்டிக்கல் (நடைமுறை) படிப்பு போய்க் கொண்டிருக்கும். அதாவது கொஸ்பிட்டலில் பேசன்டை (மருத்துவமனையில் நோயாளியை) பார்ப்பது எப்படி, காயங்களை எப்படி ரிறீற்மென்ட் (சிகிச்சை) செய்வது, எப்படி அனஸ்தீசீசியா மயக்க மருந்து கொடுப்பது - அப்படித்தான். ஒரு பக்கத்தால் படிப்புப் போய்க் கொண்டிருக்கும். மற்றைய பக்கத்தால் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.
கேள்வி: எந்த நிறுவனம்? நீங்கள் கல்வி பயின்ற நிறுவனத்தை - நிறுவனங்களைக் குறிப்பிடுங்கள்?
பதில்: அங்கு நிறுவனங்கள் என்று இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் கொலிஜில் (கல்லூரியில்) - அதாவது மெடிக்கல் கொலிஜில்தான் (மருத்துவக் கல்லூரியில்) - படித்தேன்.
கேள்வி: உங்களுக்கான கற்கைகளை யார், யார் வழங்கினார்கள்?
பதில்: எங்களுக்கான கற்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை மருத்துவர்கள் அஜந்தன் டொக்டர், சுஜந்தன் டொக்டர், டொக்டர் அன்ரி, அடுத்தது கமபிளாஜ் அன்ரி - இவர்கள் தான்.
கேள்வி: நீங்கள் இந்தக் கற்கைகளை மேற்கொள்ளும் பொழுது எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது?
பதில்: இந்தப் போராட்ட வாழ்க்கைக்கு நாங்கள் வரும் பொழுது பூரணமான ஒரு படிப்பை நாங்கள் படித்து வரவில்லை. போராட்டத்திற்குள் வந்த பின்னர்தான் - விடுதலைப் புலிகள் தான் - இன்று நான் படித்து நன்றாக இருப்பதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் தான். அது நூற்றுக்கு நூறு வீதம் நான் ஒத்துக் கொள்ள வேண்டிய விடயம். அவர்கள்தான் என்னைப் படிப்பித்து இந்த நிலைமைக்கு ஆளாக்கினார்கள்.
கேள்வி: உங்களை மருத்துவத் துறையில் அவர்கள் படிக்க வைத்ததற்கான காரணம் என்ன? அதாவது உங்களுக்கு ஏதாவது மருத்துவப் பின்னணி அல்லது அந்தத் துறைசார்ந்து ஏதாவது பின்னணி இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா?
பதில்: பின்னணிகள் எதுவும் இருக்கவில்லை எனக்கு - எந்த விதப் பின்னணியும் இருக்கவில்லை. அது எனக்குக் கிடைத்த ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும் - இந்த மருத்துவப் படிப்பு.
கேள்வி: எவ்வாறு தெரிவு செய்தார்கள் உங்களை?
பதில்: ஆரம்பப் பயிற்சி - அதாவது பேசிக் ரிறெய்னிங்க் (அடிப்படைப் பயிற்சி) - முடிந்த பின்னர் மேலதிகமான வேறொரு படிப்பிற்காக என்னை எடுத்திருந்தார்கள் - படித்து வேறு இடத்திற்கு அனுப்புவதற்காக. அந்த இடத்திற்கு ஒரு மருத்துவர் தேவையாக இருந்தது. அதற்காகத்தான் என்னைப் படிப்பித்தார்கள்.
கேள்வி: சரி, நீங்கள் போர்க் காலத்தில் மேற்கொண்ட மருத்துவ - கள மருத்துவ - பணிகளை விபரித்திருந்தீர்கள். போர் ஓய்வுக் காலம் - அதாவது போர் நடைபெறாத சமாதானக் காலம். அந்தக் காலப் பகுதியிலே நீங்கள் எவ்வாறான பணிகளை முன்னெடுத்திருந்தீர்கள்?
பதில்: சமாதான காலத்தில் எங்களுடைய முற்றுமுழுதானது படிப்புத்தான். முற்று முழுதாகவே படிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஓய்வில்லாமல் படிப்புத்தான். அந்தக் காலம் - எல்லோருமே சமாதானம் என்றிருக்க அந்தக் காலம்தான் எங்களுக்கு ஒரு கொடிய காலமாக இருந்தது. ஏனென்றால், படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பு என்று சொல்லி வெளியுலகம் தெரியாமல் படிப்பில்தான் எங்களின் வாழ்க்கை போனது. பின்னர் சண்டை தொடங்கிய பின்னர்தான் நாங்கள் வெளியால் வேலை செய்யக் கூடிய மாதிரி இருந்தது. ஆனால் அது வரைக்கும் படிப்போடுதான் இருந்தோம்.
கேள்வி:- நீங்கள் குறிப்பிட்டீர்கள் பணிகள் எதுவும் செய்யவில்லை என்று. ஆனால் சுனாமி (கடற்கோள்) காலப்பகுதியில் ஏதாவது செய்தீர்களா?
பதில்:- சுனாமி காலப்பகுதியில் - அப்பொழுது நாங்கள் கிளிநொச்சியில் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுனாமிக்கு கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணாவின் ஆட்களுடன் போய் நின்று வேலை செய்தோம் - சுனாமி ரைம் (நேரம்) மக்களுக்காக.
கேள்வி:- அதிலே விடுதலைப் புலிகள் செய்த பணிகளை சற்று விபரியுங்கள் - மக்களுக்கான பணிகளை.
பதில்:- விடுதலைப் புலிகள் செய்த பணிகள் என்று சொல்வதென்றால், நூற்றுக்கு நூறு வீதமான பணிகளை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள். மக்களை - இறந்தவர்களையும் சரி, தண்ணீருக்குள் தாண்டவர்களையும் சரி, அந்த றோட்டு (வீதி) புனரமைப்பு செய்து கொடுத்ததில் இருந்து, மக்களைக் கொண்டு போய் மீள்குடியேற்றம் இருத்தியதில் இருந்து. அதுபோல் அந்தக் குடும்பங்கள் மன அழுத்தங்களால் - சில வேளைகளில் பிள்ளைகள் இறந்து, தாய் இறந்து, தகப்பன் இறந்து - மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு - அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளைக் கொடுத்ததில் இருந்து.
சுனாமியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது நூற்றுக்கு நூறு வீதம் விடுதலைப் புலிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் சொல்ல இயலாது. இப்பொழுதும் அங்குள்ள குடும்பங்கள் - அதாவது அலம்பில், செம்மலை, முல்லைத்தீவு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுமே - ஒத்துக் கொள்வார்கள் தாங்கள் சுனாமியால் மீள்வதற்கு - எனக்குக் கூட பொதுமக்கள் சொன்னார்கள் தங்களால் சுனாமி அடித்ததால் மீள மாட்டோம், எல்லோருமே ஒரு மனநோயாளியாகப் போய் விடுவோம் என்ற எண்ணத்தில்தான் தாங்கள் இருந்தோம் என்று. பின்னர் எங்களுடைய மருத்துவ அணிகள் - எல்லோருமே மருத்துவ அணிகள், போராளிகள் எல்லோருமே - மக்களோடு மக்களாக நின்று வேலை செய்ததால் தான் அந்த சுனாமியில் இருந்து மக்களை மீட்டு - அந்த உளவியல் ரீதியிலான தாக்கத்திலிருந்து மீட்கக்கூடிய மாதிரி இருந்தது.
கேள்வி:- பொதுவாக, அதுவும் குறிப்பாக சிங்கள மட்டத்தில், அல்லது அனைத்துலக மட்டத்தில் - மேற்குலக மட்டத்தில் - கூறுவார்கள் விடுதலைப் புலிகள் கொடூரமானவர்கள், மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள், அல்லது போராளிகளை வெறுமனவே இயந்திரமாகப் பயன்படுத்தினார்கள் என்று. நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கும் பொழுது இவை முற்று முழுதாகத் தலைகீழாக இருக்கின்றன. அதாவது இதற்கு முரணாக இருக்கின்றன. இதைப் பற்றிய உங்களின் பார்வையைக் கூறுங்கள்.
பதில்:- என்னுடைய பிறந்த காலத்தில் இருந்து நான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வளர்ந்தேன் - சிறிய காலத்தில் இருந்து. நான் போராட்டத்திற்கு போக வேண்டி வந்ததன் காரணம் - இதில் உண்மையை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய அம்மா 96ஆம் ஆண்டு - நான் சிறியவனாக இருக்கும் பொழுது - சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலில்தான் அம்மா இறந்தார். அம்மா இறக்கும் பொழுது நான் சின்ன ஆள். அந்த நேரமே என்னுடைய மனதில் வடுவாகப் பதிந்தது என்னவென்றால், இலங்கை இராணுவத்தால் தான் என்னுடைய அம்மா இறந்தவர் என்று. பல தடவை நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய முயற்சித்த பொழுது - சின்ன வயதிலேயே நான் வெளிக்கிட்டேன் இயக்கத்திற்குப் போக என்று.
கேள்வி: எத்தனையாவது வயதில்?
பதில்:- பதின்மூன்று வயதில் நான் போக வெளிக்கிடும் பொழுது விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. கொண்டு வந்து, கொண்டு வந்து வீட்டில் விடுவார்கள். நான் போவேன். அவர்கள் கொண்டு வந்து வீட்டில் விடுவார்கள் ஏற்க முடியாது என்று. அதைவிட என்னுடைய அண்ணா ஒருவர் போராளியாக இருந்தவர். அப்பாவும் போராளியாக இருந்தவர். அதனால் என்னை அவர்கள் எடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார்கள். கட்டாயத்தின் பேரில்தான் - இனி நீங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டால், நான் ஏதாவது சுயீசைட் (தற்கொலை) செய்வேன் என்று சொன்ன பின்னர்தான் - இயலாக் கட்டத்தில்தான் என்னைப் பதினாறாவது வயது தாண்டிய பின்னர் கொண்டு போய் படிக்க விட்டார்கள். முதலில் படிக்க விட்டு, பதினெட்டு வயதில்தான் போராட்டத்தில் உள்வாங்கினார்கள்.
கேள்வி: எங்கே கல்வி பயின்றீர்கள்?
பதில்: கிளிநொச்சியில்.
கேள்வி: கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றிலா? அல்லது விடுதலைப் புலிகளின்...
பதில்:- பாடசாலை ஒன்றில்.
கேள்வி:- கல்வி முடித்த பின்னர் எப்பொழுது நீங்கள் போராளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டீர்கள்?
பதில்:- பதினெட்டு வயதில்தான் என்னைப் போராளியாக ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது சொன்னார்கள் நீங்கள் போராட்டத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுடைய குடும்பத்தில் இரண்டு பேர் இருக்கின்றார்கள். என்னைப் புஸ் பண்ணினார்கள் (அழுத்தம் கொடுத்தார்கள்). வீட்டை போகச் சொல்லித்தான் புஸ் பண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனதில் வடுவாக இருந்தது என்னவென்றால் - சின்ன வயதில் அம்மாவை இழந்தேன். அது எனக்கு வடுவாக இருந்தது - இந்த இலங்கை இராணுவத்தால் தானே என்னுடைய அம்மாவை நான் இழக்க வேண்டி வந்தது என்று. அதனால் எப்படியாவது போராட்டத்திற்குள் போய் எங்களுடைய மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று.
கேள்வி:- சில வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுவதுண்டு விடுதலைப் புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள் என்று. நீங்கள் கூறுகின்றீர்கள், உங்களைப் பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இணைத்தார்கள் என்று. உங்கள் சக தோழர்கள் - உங்கள் வயதை ஒத்தவர்கள் - விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முற்பட்ட பொழுது இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டார்களா?
பதில்:- ஆம், நிறைய அனுபவங்கள். கன பேர் நாங்கள் இயக்கத்திற்கு வரப் போகிறோம், சின்ன வயதிலேயே இயக்கத்திற்கு வரப்போகிறோம், என்று சொன்னால், தாங்கள் வீட்டிற்கு போக மாட்டோம் என்று சொல்லி ஒரே பிடிவாதமாக நிற்பார்கள் - நான் நின்றது போன்று. அப்படி என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், இயக்கத்தில் காந்தரூபன் அறிவுச்சோலை, அதேபோல் பெண் பிள்ளைகளுக்கு செஞ்சோலை என்றெல்லாம் இருந்தது - மற்றையது தாயகம், புனித பூமி, இப்படியயல்லாம் சில அமைப்புக்களை வைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள்.
அந்த அமைப்புகளில்தான் முதலில் கொண்டு போய் விடுவார்கள். உதாரணத்திற்கு ஒரு பெண் பிள்ளை பதினைந்து வயதில் வந்து நான் வீட்டிற்குப் போக மாட்டேன், வீட்டிற்குப் போனால் நான் செத்து விடுவேன், நான் இயக்கத்திற்குத்தான் வரப் போகின்றேன் என்று சொல்லும் பிள்ளைகளை, சரி நீங்கள் இங்கிருந்து படியுங்கள். உங்களுக்கு வயது வரும் பொழுது - உங்களுக்கு இயக்கத்தில் சேருவதற்குரிய வயது வரும் பொழுது - நீங்கள் போராட்டத்திற்கு - நீங்கள் விரும்பினால் வாருங்கள். அல்லது நீங்கள் வீட்டிற்கு போங்கள் என்றுதான் வைத்திருந்தார்கள். அது உலகம் அறிந்தது. சமாதான காலத்தில்கூட இந்த மேற்குலகம் அங்கு வந்து, செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, தாயகம், புனிதபூமி என்ற இந்த சிறுவர்களைப் பராமரிக்கும் இடங்களை எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அப்பொழுது உலகமே வியந்து போனது.
விடுதலைப் புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால், எதற்கு சிறுவர்களை வைத்துப் படிப்பிற்கின்றார்கள் என்று. இதில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை எல்லாம் அம்மா, அப்பா இல்லாத ஆட்கள் - அனாதைகளாக - அம்மா, அப்பா இல்லை என்பதை விட ஒரு அனாதையாக ஒரு குழந்தை எங்களின் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அப்படி ஒரு அனாதை என்ற பெயரிற்கு இடமிருக்கவில்லை. அப்படி இருந்த ஆட்களை விடுதலைப் புலிகள் கொண்டு வந்து படிப்பித்து - அவர்களில் நிறையப் பேர் டொக்டர் (மருத்துவர்), என்ஜினியர் (எந்திரி) ஆக எல்லாம் இருக்கின்றார்கள்.
கேள்வி:- இதேநேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆட்கள் இணையும் பொழுது ஒரு விரக்தியின் அடிப்படையில், அல்லது அவர்களுக்குப் படிக்க விருப்பம் இல்லை, அல்லது அவர்கள் வேறு காரணங்களுக்காகத்தான் இணைகின்றார்கள் - தேசப்பற்று அல்ல - என்றொரு குற்றச்சாட்டு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கப்படுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- அப்படி அல்ல. முள்ளுக் குத்தியவனுக்குத்தான் அதன் வேதனை தெரியும் என்பது போல் வன்னிக்குள் இருந்த எங்களுக்குத்தான் இலங்கை அரசாங்கம் செய்தவை தெரியும். வெளியால் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் வேதனை தெரியாது. பாடசாலையில் நாங்கள் படித்த காலத்தில் கூட பாடசாலையில் ஒழுங்காகப் படித்திருக்க மாட்டோம் - ஒரு வண் அவர் (ஒரு மணிநேரம்) படித்துக் கொண்டிருக்க சுப்பர் சோனிக், புக்காரா (மிகையயாலி விமானங்கள்) என்று வரும். ஓடிப் போய் பங்கருக்குள் (பதுங்கு குழிக்குள்) உள்ளிடுவோம், படுப்போம். இதுதான் மனதை - அங்குள்ள மக்களை, அங்குள்ள பிள்ளைகளை போராட்டத்திற்குப் போக வைத்தது இலங்கை அரசாங்கம் தான். அந்த அளவிற்கு எங்களை இனவழிப்புச் செய்தார்கள். விமானத் தாக்குதல், பள்ளிக்கூடத்திற்கு குண்டு போடுவது. எல்லோருக்குமே மனதில் இலங்கை அரசாங்கத்தால் எங்களுடைய உயிர்கள் பறிக்கப்படுகின்றது, இதனை நிற்பாட்ட வேண்டும் என்றால் நாங்கள் போராட்டத்திற்குப் போக வேண்டும். எல்லோரும் உணர்ந்துதான் போனார்கள்.
கேள்வி:- தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாக உங்களுடைய பார்வை எவ்வாறாக இருக்கின்றது?
பதில்:- நான் அறிந்த மனிதர்களிலும், நான் நேசித்த மனிதர்களிலும் முதலிடத்தில் இருப்பது தமிழீழ தேசியத் தலைவர். எதற்காக நான் சொல்கின்றேன் என்றால், ஒவ்வொரு போராளியினுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து, போராளிகளுக்கு என்ன முக்கியத்துவம், என்ன தேவை, என்ன அவசியம், பொதுமக்களுக்கு என்ன அவசியம், பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை அணுவணுவாக அவர் புரிந்து கொண்டு செயற்பட்ட ஒரு மாபெரும் தலைவர். எங்களுக்கு இப்படியயாரு தலைவர் கிடைத்ததையிட்டு, நான் அந்தத் தலைவருக்குக் கீழ் நின்று பணியாற்றினேன் என்று இன்று நான் சந்தோசமாக இருக்கின்றேன். ஒரு மாபெரும் தலைவருக்குக் கீழ் நின்று பணியாற்றிய ஒரு பெருமை - ஒரு நல்ல விடயம் - கிடைத்திருக்கின்றது என்று சந்தோசமாக இருக்கின்றேன்.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
நன்றி: ஈழமுரசு
No comments
Post a Comment