Latest News

April 15, 2016

தமிழர்களது தனித்துவங்கள் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் - சி.சிறீதரன் எம்.பி.
by admin - 0

தமிழர்களாகிய எமக்கென்றொரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு அதனைப் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத் தாச்சி விளையாட்டுச் சங்கம் நடத்திய சித்திரைப் புத்தாண்டு சிறப்பு தாச்சி சுற்றுப் போட்டி நேற்றைய தினம் மாலை 4.00 மணிக்கு உடுவில் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக மைதானத்தில் யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கத் தலைவர் செ.சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினர் உரையில் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்களது பாரம்பரியங்கள் பாதுகாக்கப்டவேண்டும் அவை எமது இனத்தின் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. எமக்கென்றொரு தனித்துவமான பண்பாடு உண்டு கலாசாரம் உண்டு எமக்கென்றொரு தனித்துவம் உண்டு தமிழர்களது பாரமபரிய விளையாட்டுக்கள் தமிழர் திருநாள்களில் சிறப்பாக இடம்பெறுவது வழக்கம். ஆவை தற்போதைய காலங்களில் மறக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இருந்தபோதிலும் எமக்குரிய பாரம்பரிய கலைகளை, விளையாட்டுக்களை, கிராமங்களில் தற்போதும் கட்டிக்காத்து தமிழர் திருநாள்களில் கடைப்பிடிக்கப்படுவதனை காணமுடிகின்றது.

சித்திரைப் புத்தாண்டு தினத்திலே வடமாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து யாழ்.மாவட்டத் தாச்சி விளையாட்டுச் சங்கம் நடத்திய தாச்சிப்போட்டியானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். 

இதில் பங்குபற்றிய கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் மிகவும் சிறந்த முறையில் விளையாடித் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த விளையாட்டினைப் பார்வையிட்ட மக்கள் மத்தியில் மனமகிழ்ச்சியும் கவலைகளை மறந்த நிலையும் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. விளையாடடுக்கள் வெற்றி தோல்வி என்பதற்கப்பால் மனிதர்களது உடல் உள ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக அமைகின்றன. அதனால்தான் எமது முன்னோர்கள் உரிய கால நேரம் பார்த்து உரிய விளையாட்டுப் போட்டிகளையும் ஆடல் பாடல் கூத்துக் கலைகளையும் நிகழ்த்தி ஆரோக்கியமான வலிமை பொருந்தியவர்களாக நீண்ட காலம் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

எனவே தமிழர்களாகிய நாம் எமது இனத்தின் பாரம்பரியங்களைப் பேணிக் கொள்வதுடன் ஆரோக்கியமான சமூகமாக நாம் வாழ்ந்து எமக்கான இலக்குகளை நேர் வழிகளில் அடைவதற்கு உழைத்து வெற்றிபெறுவதற்கு எமக்கிடையே நல்ல ஒற்றுமையும் விட்டுக்கொடும்பும் சகிப்புத் தன்மையும் ஏற்பட வேண்டும் அதற்கு இப்படியான விளையாட்டுக்கள் வழிவகுக்கின்றன என்றார்.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா மற்றும் சிறப்பு விருந்தினர்ககளாக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.குருபரன், வடமாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட், உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் போன்றோரும் கலந்துகொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.








« PREV
NEXT »

No comments